இறைவேண்டலில் நிலைத்திருந்து வல்லமை பெறுவோமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு |Daily Reflection
பொதுக்காலம், வாரம் 23 செவ்வாய்
I: கொலோ: 2: 6-15
II: திபா 145: 1-2. 8-9. 10-11
III: லூக்: 6: 12-19
இறைவேண்டல் என்பது இறைவனுக்கும் நமக்குமான உறவை ஆழப்படுத்தும் உன்னதமான செயல். இறைவனுடன் உரையாடும் வாய்ப்பு. அத்தோடு மட்டுமல்லாது நாம் செய்யப்போகிற செயலுக்கான ஆற்றலையும் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான அறிவுத் தெளிவையும் இறைவேண்டல் வழங்குகின்றது.
இன்றைய நற்செய்தியில் இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு தரப்பட்டுள்ளது. இப்பன்னிரு தூதர்களைத் தேர்ந்தெடுக்கும் முன் இயேசு இரவு முழுவதும் தனிமையான இடத்தில் இறைவேண்டலில் செலவிடுகிறார். ஏனெனில் தமக்குப் பின் இறைபணியை செய்யப்போகிறவர்களை தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக முக்கியமான பணி என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவேதான் அவர் விண்ணகத் தந்தையின் துணையை நாடினார்.
பலசமயங்களில் நாம் முன்னெடுத்த பணிகளைச் செய்ய இயலாமலும், தொடர்வதற்கு வலிமையில்லாமலும் இடைநின்றிருக்கிறோம். குழம்பியிருக்கிறோம். சரியான தீர்மானங்களை எடுக்க இயலாமல் திணறி இருக்கிறோம். அவ்வேளைகளில் இறைவனின் துணையை நாடி இறைவேண்டலில் அக்காரியங்களை விண்ணகத்தந்தையிடம் ஒப்படைத்திருக்கிறோமா? என சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவேண்டலில் விண்ணகத்தந்தையோடு இணைந்ததால்தான் இயேசு வல்லமையால் நிறைந்திருந்தார். அவரைத் தொட்டவர்கள் அவ்வல்லமையை உணர்ந்தனர். சுகம் பெற்றனர். நாமும் அவரோடு இணைந்திருந்தால் நம்முடன் வாழ்பவர்கள் இறை வல்லமையை நம்மில் உணர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே இறைவேண்டலில் நிலைத்திருந்து இறைவல்லமை பெற விழைவோம்.
இறைவேண்டல்
அன்பு இறைவா உம்மோடு இறைவேண்டலில் நிலைத்திருந்து வல்லமையுள்ளவர்களாய்த் திகழ அருள் தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்