நம் கிறிஸ்தவ வாழ்வின் அளவுகோல் அறிவோமா! | அருட்பணி.குழந்தை இயேசு பாபு | Veritas Tamil

ஆண்டின் பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு 
மு.வா: செப்: 12: 1-7.10-17
ப.பா :  திபா: 146:6-7, 8-9, 9-10
இ. வா: 1 கொரி: 1:26-31
ந.வா: மத்:  5 : 1 - 12

 நம் கிறிஸ்தவ வாழ்வின் அளவுகோல் அறிவோமா! 

பொதுக்காலத்தின் நான்காம் வாரத்தில் இருக்கும் நமக்கு சிந்தனைக்காக தரப்பட்டுள்ள நற்செய்தி பகுதி மலைப்பொழிவாகும். நமக்கெல்லாம் மிக மிக அதிகமாக தெரிந்த பகுதி இது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள குணநலன்கள் எல்லாம் கிறிஸ்தவ வாழ்வை நாம்  எவ்வாறு வாழ்கிறோம்  என்பதை அறிந்துகொள்ளும் அளவுகோலாகும். 

ஏழையரின் உள்ளம் .....நாம் கடவுளை எந்த அளவுக்கு சார்ந்திருக்கிறோம், உலகத்தின் மேல் நமக்கு பற்றுஉள்ளதா, போதும் என்ற மனம் உள்ளதா என ஆய்ந்தறியும் அளவுகோல். 

துயருறுகின்ற குணம் துன்பத்தில் நமது மனத்திடனின் அளவென்ன ,நாம் யாரிடமிருந்து ஆறுதல் பெற ஆசிக்கிறோம் என கண்டறியும் அளவுகோல். 

கனிவு எனும் பேறு நமது மனம் இறுகியதா அல்லது மென்மையானதா என சோதித்தறியும் அளவுகோல். 

நீதியின் பால் பசிதாகம் எனுன் உயர்குணம் நமது வாழ்வு நேர்மையானதை நல்லதை உண்மையை நிறைவை விரும்புகிறதா அவற்றிற்காக குரல் கொடுக்கிறதா என அறியும் அளவுகோல். 

இரக்கம் எனும் சீரிய பண்பு நாம் அனுபவிக்கும் இறையன்பை பிறருக்கு பிறருக்கு நம்மால் கொடுக்க இயலுகிறதா என அறிய உதவும் அளவுகோல்.

தூய உள்ளம் என்ற சிறந்த பண்பு நம் சொல் செயல் நோக்கம் போன்றவற்றின் மூலம் கடவுளை வெளிப்படுத்துகிறோமா என கண்டறியும் அளவுகோல். 

இயேசுவின் பொருட்டு துன்புற தயாராக இருக்கும் மனநிலை நம் சீடத்துவ வாழ்வின் ஆழத்தை உணர்த்தும் அளவுகோல். 

இவ்வார்த்தைகளை சிந்திப்பதன் மூலம் நாம் எவற்றையெல்லாம் வளர்த்து பேறுபெற்ற நிலையை அடையை முயற்சி செய்ய வேண்டும் என்பதை அறிந்து செயல்பட இயேசு நம்மை அழைக்கிறார். 

இன்றைய முதல் வாசகம் ஆண்டவரைத் தேட நம்மைத் தூண்டுகிறது. இரண்டாம் வாசகமும்  நாம் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப்பார்த்து ஆண்டவரில் பெருமையை அடைய நம்மை அழைக்கிறது.  எனவே கடவுளை அறிந்து அவர் காட்டும் பாதையில் நடந்து பேறுபெற்ற நிலையை அடைந்திட இறைவார்த்தையை நம் வாழ்வின் அளவுகோலாகவும் அடையாளமாகவும் மாற்றி வாழ முயல்வோம். 

 இறைவேண்டல் 

இயேசுவே இறைவா உம் வார்த்தையால் எம் வாழ்வை அலசிப் பார்த்து வாழ்வில் மாற்றம் கண்டு பேறு பெற்ற நிலைய அடையவும் உம்மைத் தேடி பெருமை காணவும் வரம் தாரும் ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
திருஅவைச் சட்டப்படிப்பு
புனித பேதுரு பாப்பிறை இறையியல் கல்லூரி, பெங்களூர்