எளிமை, மனத்தாழ்மை, நேர்மை நம்மை உயர்த்தும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
02 பிப்ரவரி 2026,
பொதுக்காலம் 4-ஆம் வாரம் - திங்கள்
ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்- விழா
மலாக்கி 3: 1-4
லூக்கா 2: 22-40
எளிமை, மனத்தாழ்மை, நேர்மை நம்மை உயர்த்தும்!
முதல் வாசகம்.
இவ்வாசகத்தில் ஆண்டவர் திடீரென தம்முடைய ஆலயத்திற்கு வருவதைப் பற்றி மலாக்கி இறைவாக்கினர் பேசுகிறார். வழியை ஆயத்தப்படுத்த ஒரு தூதரை அனுப்புவதாக கடவுள் வாக்குறுதி அளிக்கிறார், பின்னர் ஆண்டவர் தாமே வருவார் லேவியின் புதல்வர்களான குருக்களைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப் போல் அவர்களைப் புடமிடுவார் என முன்னறிவிக்கிறார்.
மேலும், மலாக்கி அன்னிய தெய்வ வழிபாட்டு நடைமுறையை விமர்சிக்கிறார். மக்கள் தூய்மைப்படுத்தப்பட்டவுடன், அவர்களின் காணிக்கைகள் மீண்டும் கடவுளுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்று உறுதிகூறுகிறார்.
நற்செய்தி.
மரியாவும் யோசேப்பும் இரண்டு காரணங்களுக்காக குழந்தை இயேசுவை எருசலேம் கோவிலுக்குக் கொண்டு வருகிறார்கள்:
1. மோசேயின் சட்டப்படி மரியாவுக்குத் தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டும்.
2. தலைப்பேறான ஆண் குழந்தை இயேசுவைக் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.
மேலும், இந்த தூய்மை சடங்கையொட்டி அவர்கள் காணிக்கைப் பொருள்களை ஒப்பிட்டால், இயேசுவின் குடும்பம் ஓர் எளிய ஏழைக்குடும்பமாக இருந்ததை அறிகிறோம். இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது என்று வாசிக்கிறோம்.
சிமியோன் ஒரு வயதான, நீதிமான், கடவுளின் வாக்குறுதிக்காக - மேசியாவின் வருகைக்காக - காத்திருந்து தன் வாழ்க்கையைக் கழித்தவர். அவர் இயேசுவைக் கண்டதும், தூய ஆவியால் உடனடியாக அவரை அடையாளம் கண்டுகொள்கிறார்.
அவருடைய இறைவாக்கு:
• இயேசு முரண்பாட்டின் அடையாளமாக இருப்பார். அவர் இஸ்ரயேல் மக்களுள் எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருப்பார்.
• அவர் எழுச்சியையும் வீழ்ச்சியையும் கொண்டு வருவார்
• மரியா தானே துன்பப்படுவாள் ("ஒரு வாள் உன் இருதயத்தைத் துளைக்கும்")
அடுத்து, வயதான கைம்பெண அன்னா, பல ஆண்டுகளாக ஆலயத்தில் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்து காலத்தைக் கழித்தவர் .
அவள் இயேசுவைப் பார்க்கும்போது, கடவுளுக்கு நன்றி செலுத்துகிறாள் மீட்பிற்காகக் காத்திருந்த அனைவரிடமும் அவள் குழந்தையைப் பற்றிப் பேசுகிறாள்.
சிந்தனைக்கு.
இன்று ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழாவைக் கொண்டாட நாம் பணிக்கப்பட்டுள்ளோம். கடவுள் மனத்தாழ்மையுடன் மண்ணுலகிற்கு வந்துள்ளார். ஓர் ஏழை குழந்தையாக, எளிய பெற்றோரால் ஆலயத்திற்குக் கொண்டுவரப்படுகிறார். அவரது வருகையானது நீண்ட கால எதிரப்பார்ப்பாக உள்ளது. மீட்பரைக் காண வேண்டும் என்று பல நேர்மையாளர்கள் ஏங்கித்தவித்தக் காலம் அது. ‘பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்’ என்று எபிரேயர் நூலில் வசிக்கிறோம். இந்த கடவுளின் மகனின் வரவை இன்று சிமியோன் ஆலயத்தில் முதலில் வெளிப்படுத்துகிறார்.
இன்றைய நற்செய்தியில் நாம் கவனிக்க வேண்டிய இரு விடயங்கள் யாதெனில் கிறிஸ்துவையும் அவரது தாயையும் பற்றிய ஆழமான மறைபொருளாகும்.
• முதலில், நாம் அருள்மிகப்பெற்ற கன்னி மரியாவின் தூய்மைச் சடங்கைப் பற்றி சிந்திக்கிறோம். ஒரு குழந்தையப் பெற்றெடுத்த ஒரு தாயிக்குத் தூய்மைச் சடங்குத் தேவை என திருச்சட்டம் கூறுகிறது (லேவி. 12). இருப்பினும், மரியா பாவத்தின் அனைத்துக் கறைகளிலிருந்தும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு, மாசற்ற முறையில் கருத்தரிக்கப்பட்டதால், தூய்மைச் சடங்குத் தேவையில்லை. ஆனாலும், அவர் திருச்சட்டத்தை நிறைவேற்றியது அவரது முழு மனத்தாழ்மை மற்றும் கீழ்ப்படிதலின் மாதிரியை நமக்கு முன் வைக்கிறார்.
• இரண்டாவது முரண்பாடு இயேசுவின் விளக்கத்தில் காணப்படுகிறது. ஒவ்வொரு முதற்பேறான மகனையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, பஸ்காவை நினைவுகூரும் வகையில் மீட்கப்பட வேண்டும் என்று திருச்சட்டம் வலியுறுத்துகிறது. ஆனாலும் இயேசுவோ இறைமகன், உலகத்தின் பாவங்களை நீக்கும் களங்கமற்ற ஆட்டுக்குட்டி. அவருக்கு எந்த மீட்பும் தேவையில்லை. அவரும் மனத்தாழ்மையில் திருச்சட்டத்தை ஏற்கிறார்.
• மேலும், யோசேப்பு, மரியா, இயேசு அடங்கிய குடும்பம் ஓர் எளிய குடும்பம். அங்கேயும் வறுமை இருந்தது. மரியா தானே துன்புறுவார் அதாவது "ஒரு வாள் உன் இருதயத்தைத் துளைக்கும்" என்று செய்தி மரியாவுக்கு அறிவிக்கப்படுகிறது.
நமது புனித அன்னையைப் போலவே, நமக்கும் தாழ்ச்சி உள்ளம் இன்றியமையாதது. அத்துடன் இயேசுவைப் போலவே, நாமும் நம்மை முழுமையாகத் தந்தையிடம் ஒப்புக்கொடுக்க அழைக்கப்படுகிறோம்.
மரியாவின் கீழ்ப்படிதலுடனும், கிறிஸ்துவின் மனத்தாழ்மையுடனும் நம்மை தந்தையிடம் ஒப்புக்கொடுக்க வேண்டும். இதனால் அவர்களின் வாழ்க்கையைப் போலவே நமது வாழ்க்கையும் அன்பின் தூய காணிக்கையாக மாறும் என்பதை நினைவில் கொள்வோம்.
இறைவேண்டல்.
அன்புள்ள ஆண்டவரே, நீர் அருள விரும்பும் மாட்சியில் நான் பங்கு கொண்டு, உம்மில் வாழ எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
+6 0122285452