அன்றாட வாழ்வில் இறைவனின் செயல்களைக் கண்டறிவதே கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளம் – கர்தினால் தாக்லே | FABC | Veritas Tamil
ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12ஆவது பேரவைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக ஜூலை 22 அன்று இடம்பெற்ற ஒருநாள் ஆன்மிகத் தியான நிகழ்வில், கிறிஸ்தவ நம்பிக்கை என்பது மனித சாதனைகளால் அல்ல; அன்றாட வாழ்வில் அமைதியாக செயல்படும் இறைவனின் செயலை உணர்வதன் மூலமே நிலைத்திருக்கிறது என்று கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் வலியுறுத்தினார்.
ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்ற இந்த ஆன்மிகத் தியானம், பேரவைக் கூட்டத்தின் ஆலோசனைகளுக்கு முன்பாக அவர்களை ஆன்மிக ரீதியில் தயார்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.
"நீங்கள் இன்னும் பெரியவற்றைக் காண்பீர்கள்… அருள்பணித் தலைவர்களுக்கான ஒன்றிணைந்த மனமாற்றத்திற்கான அழைப்பு" (You Will See Greater Things… A Call to Synodal Conversion of Pastoral Leaders) என்ற தலைப்பில் தனது தியான உரையை வழங்கிய கர்தினால் தாக்லே அவர்கள், திருஅவையின் மறைப்பணி என்பது பெரிய சாதனைகளை நிகழ்த்துவதில் அல்ல; மாறாக, கிறிஸ்து ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் மகத்தான செயல்களை அடையாளம் காண்பதிலேயே உள்ளது என்று கூறினார்.
"திருவிவிலியம் 'நீங்கள் பெரிய செயல்களைச் செய்வீர்கள்' என்று கூறவில்லை; 'நீங்கள் இன்னும் பெரியவற்றைக் காண்பீர்கள்' என்றுதான் இயேசு கூறுகிறார். மகத்தான செயல்களைச் செய்பவர் இயேசுவே; அவற்றைக் கண்டறிவதே நமது பணி," என்று அவர் கூறினார்.
யோவான் நற்செய்தியில் இடம்பெறும் இயேசுவுக்கும் நத்தனியேலுக்கும் இடையிலான சந்திப்பை அடிப்படையாகக் கொண்டு பேசிய கர்தினால் தாக்லே அவர்கள், "நீங்கள் இன்னும் பெரியவற்றைக் காண்பீர்கள்" என்ற இயேசுவின் வாக்குறுதி, சீடர்களைத் தங்களது சாதனைகளில் நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக, இறைவனின் செயல்பாட்டைக் கவனித்து உணர அழைக்கிறது என்று விளக்கினார்.
அருள்பணித் தலைவர்கள், சிந்தித்து செபிக்கும் மனப்பாங்குடன், சாதாரண மக்களிலும் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளிலும் இறைவன் செயல்படுவதை உணரக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்தினால் தாக்லே அவர்கள் வலியுறுத்தினார். இத்தகைய ஆன்மிகப் பார்வை இல்லையெனில், திருஅவையின் மறைப்பணி மனித முயற்சிகளையும் திட்டங்களையும் மட்டுமே சார்ந்துள்ளது என்ற தவறான எண்ணம் எளிதில் உருவாகிவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்தக் கருத்தை விளக்குவதற்காக யோவான் நற்செய்தியில் இடம்பெறும் பல நிகழ்வுகளை அவர் எடுத்துக்காட்டினார். கானாவூர் திருமண விழாவில், சாதாரண சமூகச் சிக்கலாகத் தோன்றிய ஒரு நிகழ்வில், இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய முதல் அருளடையாளத்தை சீடர்கள் கண்டனர். அதேபோல், சமாரியப் பெண் கிணற்றருகே நடந்த எளிய உரையாடலின் வழியாக மெசியாவைச் சந்தித்தார். உயிர்த்தெழுந்த இயேசுவை மகதலா மரியா முதலில் தோட்டக்காரர் என்று நினைத்தார்; எம்மாவூஸ் வழியில் சென்ற சீடர்கள் அப்பத்தைப் பிட்டு வழங்கியபோதுதான் அவரை அடையாளம் கண்டுகொண்டனர்.
"இயேசுவின் மகத்தான செயல்கள் சாதாரண நிகழ்வுகளின் வழியாகவே வெளிப்படுகின்றன. இறைவனின் செயல்களைக் கண்டு வியக்கும் உணர்வை மீண்டும் பெறுவதே நமது மனமாற்றத்தின் ஒரு பகுதியாகும்," என்று கர்தினால் தாக்லே அவர்கள் கூறினார்.
இறைவனின் பிரசன்னத்தை எளிய நிகழ்வுகளில் அறிந்துகொள்ளும் வியப்புணர்வை எப்போதும் பாதுகாத்துக்கொள்ளுமாறு அவர் திருஅவைத் தலைவர்களை ஊக்குவித்தார். இத்தகைய வியப்புணர்வே முதிர்ந்த விசுவாசத்தின் அடையாளமாகவும், இன்றைய அருள்பணி மற்றும் சமூகச் சவால்களுக்கு மத்தியில் நம்பிக்கையின் ஊற்றாகவும் விளங்குகிறது என்று அவர் கூறினார்.
இதனை விளக்குவதற்காக மணிலாவில் தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார். போக்குவரத்து சிக்னலில் தனது வாகனம் நின்றிருந்தபோது, தெருவோர விற்பனையாளர் ஒருவர் சிற்றுண்டி விற்க வந்ததாக முதலில் நினைத்ததாகவும், ஆனால் அவர் எந்தப் பணத்தையும் எதிர்பார்க்காமல் உணவை அன்பளிப்பாக வழங்கியதாகவும் கூறினார்.
"ஒரு சாதாரண தெருவோர விற்பனையாளரின் வழியாக நாங்கள் ஒரு பெரிய உண்மையைக் கண்டோம். இலாபம் ஈட்டுவதைவிட பிறருக்குக் கொடுப்பதே உயர்ந்தது என்பதை அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்," என்று கர்தினால் தாக்லே அவர்கள் நினைவுகூர்ந்தார்.
லெபனோனில் அகதிகளைச் சந்தித்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்தார். பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு திருஅவை மனிதாபிமான உதவிகளை வழங்கிய பின்னர், ஒரு சிறுவன் தன்னிடம் வந்து, "அந்த இயேசுவுடன் நான் நண்பனாக இருக்க விரும்புகிறேன்" என்று கூறியதாக அவர் தெரிவித்தார். அன்பின் எளிய செயல்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள மனித இதயங்களைத் திறக்கின்றன என்பதை இந்த அனுபவம் வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.
தனது தியான உரையின் நிறைவில், இயேசு வாக்களித்த "இன்னும் பெரியவை" என்ற வாக்குறுதி, உயிர்த்தெழுதலில்தான் முழுமையாக நிறைவேறுகிறது என்று கர்தினால் தாக்லே அவர்கள் நினைவூட்டினார். உயிர்த்தெழுந்த கிறிஸ்து இன்றும் சாதாரண மனிதர்களின் வழியாகவும் அன்றாட அன்புச் செயல்களின் வழியாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்; அதுவே நவீன உலகின் சவால்களுக்கு மத்தியிலும் திருஅவைக்கு நிலையான நம்பிக்கையை அளிக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.
