பணிவாழ்வு சிறந்த சாட்சிய வாழ்வு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

01 அக்டோபர் 2026
 
யோபு  19: 21-27
லூக்கா 10: 1-12

பணிவாழ்வு சிறந்த சாட்சிய வாழ்வு!

முதல் வாசகம்.


முதல் வாசகத்தில் யோபுவின் உரை தொடர்கிறது.  யோபு தனது நண்பர்களிடம் தன்னை இரக்கத்துடன் அணுகும்படி வேண்டுகிறார். அவரது துன்பங்களையும், வேதனைகளையும், சூழலையும் கடவுள் அறிந்திருக்கிறார் என்று நம்புகிறார். ஒருநாள் தன்னை கடவுள் மீட்பார் என்றும்,  இறுதியில் அவரைக் காண்பார் என்றும் யோபு உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்துவதை இன்று வாசிக்கிறோம்.


நற்செய்தி.


இன்றைய நற்செய்தி பகுதியில், இயேசு 72 சீடர்களை தம்முடைய பணிக்காக இருவர் இருவராக அனுப்பினைதை வாசிக்கிறோம். அவர், அவர்களிடம் “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என வேண்டுகிறார். 

அத்துடன், “ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்” என்றும் அறிவுறுத்துகிறார். 

நிறைவகா, அவர்களை ஏற்றுக்கொள்ளும் வீடுகளில் அமைதியைப் பகிரவும், நோயாளிகளைக் குணப்படுத்தவும், இறையரசை அறிவிக்கவும் பணிக்கிறார்.  ஆனால் அவர்களை ஏற்றுக்கொள்ளாத இடங்களில், அந்த மக்களின் மறுப்பை எச்சரிக்கையாக அறிவிக்க வேண்டும் என்று கூறுகிறார்.


சிந்தனைக்கு.


இன்றைய நற்செய்தியைக் குறித்து சிந்திக்கையில், ஓர் உண்மை புலப்படுகிறது. திருஅவையில், கிறிஸ்துவின் பணியை நாம் தனிப்பட்ட தூண்டுதலினால் மேற்கொள்வதில்லை. மாறாக, திருஅவையின்   படிப்பினையிலும், இறை அழைத்தலின் பேரிலும்  ஏற்கிறோம்,  பணிகளை  நிறைவேற்றுகிறோம். நாம் அறிவிக்கும் நற்செய்தி நம்முடையது அல்ல. அது இறைவனிடமிருந்து வந்ததும்  திருஅவையின் மரபு வழியாக நமக்கு ஒப்படைக்கப்பட்டதுமாகும்.


மேலும், இயேசு72  பேரை நியமித்து, அவர்களை அவர் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்  என்று லூக்கா குறிப்பிடுகிறார்.  இதற்கு ஆழமான இறையியல் மற்றும் விவிலிய விளக்கம் உண்டு.   மோசேயின் சட்டத்தின்படி, ஓர்  உண்மையை நிலைநாட்டுவதற்கு இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் சாட்சி அவசியமாக இருந்தது (இச 19:15). இதன்படி இருவர் இருவராகச் சென்ற சீடர்கள் திரும்பி வந்து அவர்களது பணி குறுத்து இயேசுவிடம் விவரிக்கும்போது அதில் உண்மை இருக்க வேண்டும். உண்மைக்கு மாறாக, கட்டுக்கதைகள் இருக்கக்கூடாது என்பதை இயேசு எதிர்பார்த்து இருவர் இருவராக அனுப்பினார் என்று பொருள் கொள்ளலாம். 

இன்றைய நற்செய்தியில் காணப்படும்  72 சீடர்கள்  இன்றைய நம்மில் ஒவ்வொருவரையும் பிரதிநிதிப்தாகவும் பொருள் கொள்ளலாம்.  சீடத்துவம் என்பது இயேசுவையும் அவருடைய போதனைகளையும் தனிப்பட்ட பக்தியுடன் பின்பற்றுவதைக் காட்டிலும் ஒரு சமூகமாக பணி ஏற்பது சிறப்பாகும். தனி மரம் தோப்பாகாது என்பார்கள். இயேசுவும், ‘இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ (மத் 18;20) என்பதை வலியுறுத்தினார்.

 
தொடர்ந்து, சீடத்துவத்தில் நற்செய்தி பரப்புதல் இன்றியமையாதப் பணியாகும். இதற்கு முதல் தடையாக இருப்பன ஆடம்பரமும், செல்வச் செருக்கும்.  ஆகவே, நற்செய்தி பணியானது மேற்கண்ட இரண்டையும் நீக்கி, இறை நம்பிக்கையில் வேரூன்றுவதாகும். பணிக்கு அழைத்தவர் பராமரிப்பார் என்ற நம்பிக்கை நம்மில் என்றும் இழையோட வேண்டும். 


அடுத்து, “அறுவடை மிகுதி; பணியாளர்களோ குறைவு” என்கிறார் ஆண்டவர். இப்பிரச்சனையை மேற்கொள்ள இறைவேண்டல் செய்யுவும் அழைக்கிறார்.  நம்மைச் சுற்றி பலர் அன்பையும் ஆறுதலையும் எதிர்பார்க்கிறார்கள். சிலர் தனிமையில் இருக்கிறார்கள். சிலர் நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள். சிலர் மன்னிப்பைத் தேடுகிறார்கள். சிலர் கடவுளைத் தேடுகிறார்கள். இத்தகையோருக்கு உதவிகரம் நீண்டவேண்டியது சீடத்துதவத்தின் கடமை ஆகும். ஆகவே, நாம் செல்லும் இடங்களில் பிரச்சினையை அதிகரிப்பவர்களாக அல்ல, அவர்கள் உள்ளத்தில் அமைதியை, ஆறுதலை ஏற்படுத்துபவர்களாக சீடர்கள் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். 


நிறைவாக, யோபுவில் காணப்பட்ட உறுதியான இறை நம்பிக்கை நம்மில் மிளிர வேண்டும். நாம் நமது பணியைத் தொடரும்போது, எல்லோரும் நம்மைப் புரிந்துகொள்ளவர் அல்லது ஏற்றுக்கொள்வர் என்று எதிர்பார்க்க முடியாது. எதிரப்புகள் எழுந்தால், நாம் நமது பணியைத் துண்டித்து விட்டு விலகி ஓடவும் கூடாது.   நமது கடமை நற்செய்தியை உண்மையுடனும் அன்புடனும் எடுத்துச் செல்வது; அதை ஏற்றுக்கொள்வது மற்றவர்களின் சுதந்திரமான முடிவு என்பதை ஏற்று பணியைத் தொடர்வோம்.


இறைவேண்டல்.


ஆண்டவரே, உமது பணிக்காக என்னையும் அனுப்பும். என் குடும்பத்திலும், என் சமூகத்திலும், நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் உமது அன்பு, அமைதி, இரக்கம் ஆகியவற்றின் சாட்சியாக வாழ எனக்கு வரமருள்வீராக. ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6012 228 5452

Tamil Survey Popup Image