அவருடைய தீ நம்மை மாற்றட்டும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
22 அக்டோபர் 2026
எபேசியர் 3: 14-21
எபேசியர் 3: 14-21
லூக்கா 12: 49-53
அவருடைய தீ நம்மை மாற்றட்டும்!”
முதல் வாசகம்.
இவ்வாசகத்தில், பவுல் அடிகள் கடவுளுக்கு முன்பாக கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் திடம்பெறவும், கிறிதுவின் அன்பை ஆழமாக அறிந்துகொள்ளவும் அவர் இறைவேண்டல் செய்கிறார். மேலும், கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு அகலமானது, நீளமானது, ஆழமானது, உயரமானது என்பதை அறிந்து, அந்த அன்பினால் நிறைவடைய வேண்டும் என்று அறிவுறுத்துவதோடு, நாம் கேட்பதற்கும் நினைப்பதற்கும் மேலாகச் செய்ய வல்லவர் கடவுள் என்றும், திருஅவையில் அவரது மாட்சியே மேலோங்கி இருக்க வேண்டும் என்பதைக் குறித்தும் இறைவேண்டலில் மன்றாடுகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தாம் உலகத்திற்கு வந்ததன் நோக்கத்தையும், அவரைப் பின்பற்றுவதால் ஏற்படக்கூடிய பிரிவுகளையும் பற்றி விவரிக்கிறார். அவர் “மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.
மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்” என்று முடிக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய இரு வாசகங்களும் நமது கிறிஸ்தவ வாழ்வின் மிக முக்கியமான இரண்டு உண்மைகளை எடுத்துரைக்கின்றன.
1. கடவுளின் அன்பு நம் உள்ளத்தில் ஆழமாக வேரூன்ற வேண்டும்.
2. இயேசுவின் நற்செய்தி நம்முடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
முதல் வாசகத்தில் எபேசியருக்கு எழுதும்போது, புனித பவுல் அடிகள் கிறிஸ்துவின் அன்பை நாம் ஆழமாக உணர்ந்து, அந்த அன்பில் வேரூன்றி நிலைத்திருக்க வேண்டும் என்று அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுகிறார்.
புனித பவுல், “விண்ணிலும் மண்ணிலும் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தந்தையானவரின் திருமுன் நான் முழங்கால்படியிட்டு மன்றாடுகிறேன்” என்று கூறுகிறார்.
பவுலின் மன்றாட்டு எதைப் பற்றியது? அவர் செல்வத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ, புகழுக்காகவோ மன்றாடவில்லை. மாறாக, அவரால் உருவாக்கப்பட்ட திருஅவையினர் தங்கள் உள்ளத்தில் தூய ஆவியால் வலிமை பெற வேண்டும் என்றும், கிறிஸ்து அவர்களுடைய இதயங்களில் குடிகொள்ள வேண்டும் என்றும், அவர்கள் அன்பில் வேரூன்றி நிலைபெற வேண்டும் என்றும் மன்றாடுகிறார். அவரது பொதுநலச் சிந்தனை இங்கே வெளிப்படுகிறது.
அதே வேளையில் நற்செய்தியின் பக்கம் திரும்பினால், “மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என்கின்றார் இயேசு. வழக்கமாக, நாம் தீ மூட்டும்போது, தேவையற்றவற்றை எரித்து தூய்மைப்படுத்துவோம், தீ மூட்டி உணவும் சமைப்போம். அவ்வாறே, இங்கே இயேசு குறிப்பிடும் தீ என்பது அழிவை ஏற்படுத்தும் தீ அல்ல. அது நமது ஆக்கத்திற்கான கடவுளின் அன்பையும், தூய ஆவியின் வல்லமையையும், உண்மைக்கான ஆர்வத்தையும், மனமாற்றத்தையும் நினைவூட்டுகிறது.
நம்முடைய இதயத்தலும் இயேசு தீ மூட்டியுள்ளார். அது தொடர்ந்து எரிகிறா என்பதுதான் கேள்வியாக உள்ளது. அந்த நெருப்பு நம்முடைய அகந்தையை, பொறாமையை பழிவாங்கும் எண்ணத்தை எரிக்க வேண்டும், பிறரை இழிவாகப் பார்க்கும் மனப்பான்மையை எரிக்க வேண்டும்.
மேலும், இயேசு தொடர்ந்து “நான் மண்ணுலகிற்கு அமைதி கொணர வந்தேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை, பிளவையே ஏற்படுத்த வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றுரைத்ததேப்பற்றி சிந்திக்கும்போது, இயேசு பிளவுப்படுத்துபவரா என்று தோன்றலாம். ஏனெனில் இயேசு அமைதியின் அரசர் அல்லவா? அவர் அன்பையும் மன்னிப்பையும் போதித்தவர் அல்லவா?
இங்கே, இயேசு வன்முறையையோ, குடும்பப் பிரிவினையையோ, பகைமையையோ ஆதரிக்கவில்லை. மாறாக, அவருடைய உண்மையை ஏற்றுக்கொள்வதால் மனிதர்களிடையே கருத்து வேறுபாடுகளும் எதிர்ப்புகளும் ஏற்படலாம் என்பதை அவர் உணர்த்துகிறார். எடுத்துக்காட்டாக, குடும்பதில் ஒருவர் நேர்மையாக வாழும்போது அவருடைய குடும்பத்தில் சிலர் அவரது தூய வாழ்வுக்கு எதிராக இருக்கும் போது, அங்கே நிச்சயமாக பிளவு ஏற்படும். இத்தகைய சூழல்களில், கிறிஸ்துவைப் பின்பற்றுவது எப்போதும் எல்லோருடைய பாராட்டையும் பெற்றுத்தராது.
இன்றைய சூழலில் ஒரே குடும்பத்தில் முன்பு கத்தோலிக்கர்களாக இருந்தவர்களில் சிலர் பிரிந்து சபைகளில் இணைந்ததாலும், கலப்பு திருமணத்தின் விளைவாலும் குடும்ப உறவில் பிரிவுகளும் பிளவுகளும் மலிந்துவிட்டன. ஆண்டவர் கூறுவதைப்போல் தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பதை காண முடிகிறது.
நிறைவாக, பிரிவுகளும் பிளவுகளும் சில வேளைகளில் தவிர்க்கமுடியாதவை. உண்மைக்கு சாட்சியம் பகரும் வேளையில் குடும்ப உறவில், வேலை செய்யும் இடத்தில் கீறல்கள் ஏற்படும். இத்தகைய சூழல்களில் நாம் அமைதியாக பவுலைப் போல மன்றாட வேண்டும். நாளுக்கு நாள் தெளிவு பிறக்கும், உறவும் மலரும்.
இறைவேண்டல்.
“ஆண்டவரே, என் உள்ளத்தில் நீர் குடிகொள்வீராக. உமது அன்பில் என்னை வேரூன்றச் செய்யும். என் இதயத்தில் உமது தூய நெருப்பு எரியட்டும். என்னில் தோன்றும் தீய எண்ணங்களை அது சுட்டெரிக்கட்டும். ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
