வெளிப்புற அறிவுவோடு, உள்ளார்ந்த ஞானமும் தேவை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
23 அக்டோபர் 2026
எபேசியர் 4: 1-6
லூக்கா 12: 54-59
வெளிப்புற அறிவுவோடு, உள்ளார்ந்த ஞானமும் தேவை!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகப் பகுதியில், பவுல் அடிகள் கிறிஸ்தவர்களாகிய நாம் அன்பிலும் தாழ்மையிலும் வாழ்ந்து, ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
அவர் கடவுளால் அழைக்கப்பட்டவர்களாகிய நாம், நமக்குக் கொடுக்கப்பட்ட அழைப்புக்கு ஏற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்று அறிவுறுத்துவதோடு, நாம் தாழ்மையுடனும் சாந்தத்துடனும் பொறுமையுடனும் இருந்து, ஒருவரையொருவர் அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எபேசியருக்கு எழுதுகிறார்.
மேலும், நமக்கு ஒரே ஆண்டவர், ஒரே நம்பிக்கை, ஒரே திருமுழுக்கு, ஒரே கடவுள் தந்தையுமாக இருக்கிறார் என்றும், அவர் எல்லாருக்கும் மேலானவரும், எல்லாருக்குள்ளும் செயல்படுகிறவரும், எல்லாரிலும் இருக்கிறவருமாயிருக்கிறார் என்று அறிவுறுத்துகிறார்.
நற்செய்தி.
இன்றைய லூக்காவின் நற்செய்தியில், காலத்தின் அறிகுறிகளைப் புரிந்துகொண்டு, நம் வாழ்க்கையைச் சீர்படுத்தி, கடவுளோடு ஒப்புரவாக வாழ வேண்டும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார்.
இங்கே மிக முக்கியமான கேள்வி ஒன்றை இயேசு முன்வைக்கிறார். “வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?” என்கிறார். இயேசு, வானத்தையும் வானிலையையும் பார்த்து மழை வருமா, வெயில் வருமா என்று மக்களால் கணிக்க முடிகிறது; ஆனால் தாங்கள் வாழும் காலத்தில் கடவுள் கொடுக்கும் அடையாளங்களை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்? என்றும் வினவுகிறார்.
நிறைவாக, நமக்கு எதிராக ஒருவர் வழக்குத் தொடரும்போது, நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பே அவருடன் சமாதானமாகப் பேசி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதுபோலவே, தாமதிக்காமல் நம் தவறுகளை உணர்ந்து, மனந்திரும்பி, கடவுளோடும் பிறரோடும் ஒப்புரவாக வாழ வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
சிந்தனைக்கு.
வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின்
தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது,
இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? . (லூக்கா 12:56)
நாம் இயற்கை சூழலில், மாற்றங்கள் மாறி மாறி நிகழ்வனவற்றைப் பற்றி அறிந்திருக்கிறோம். வானிலை மாற்றங்களைத் தெளிவாகக் கணிக்கிறோம். ஆனால், நம் உள்ளத்தில் ஏற்படும் கோபம், பொறாமை, பகைமை ஆகியவற்றை உணர்ந்து மாற்றிக்கொள்ளத் தவறிவிடுகிறோம். பிறருடன் ஏற்பட்ட மனக்கசப்புகளைத் தீர்க்காமல் காலம் தாழ்த்துகிறோம்.
இன்றைய நற்செய்தியில், மக்கள் கூட்டத்தை நோக்கிக் காலத்தின் அறிகுறிகளை உணர்தல் மற்றும் கடவுள் நமக்குக் காட்டும் வழியைப் புரிந்துகொள்ளும் மேன்மையைக் குறித்து ஆண்டவர் அறிவுறுத்துகிறார். அவர் அன்று கூறியது, இன்றைய மக்கள் கூட்டத்திற்கும், குறிப்பாக நமக்கும் மிகவும் ஏற்புடையதாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இதில், கால நிலையை ஆராய்ந்தறியும் மக்களே, வெளிவேடக்காரரே, முதலில், உங்கள் தவறுகளை உணர்ந்து, வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முயலுங்கள் என்கிறார்.
இங்கே கிறிஸ்தவ வாழ்வில், “காலத்தின் அறிகுறிகள்” என்பது நாம் வாழும் காலத்தில் நிகழும் சமூக, அரசியல், பொருளாதார, இயற்கை மற்றும் ஆன்மிக நிகழ்வுகளைக் கவனித்து, அவற்றின் வழியாக இறைவன் நமக்கு உணர்த்தும் செய்தியைப் புரிந்துகொள்வதைக் குறிக்கிறது எனலாம். எனவே, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிராமல், அனுதின தவறுகளை உணர்ந்து அவற்றிலிருந்து விலகி, அன்பு, உண்மை, நேர்மை, மன்னிப்பு ஆகிய நற்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டியது இன்றைய அழைப்பாகும்.
முதல் வாசகத்தில், பவுல் அடிகள் நாம் தாழ்மையுடனும் சாந்தத்துடனும் பொறுமையுடனும் இருந்து, ஒருவரையொருவர் அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று (எபேசியருக்கு) நமக்கு எழுதியுள்ளதை மனதில் கொள்வோம்.
நிறைவாக, காலத்தின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது என்பது சிலர் உளறித் திரிவதுபோல், ஒவ்வொரு பேரிடரையும் இறைவனின் தண்டனையாகக் கருதுவதோ, உலகத்தின் முடிவைக் கணிப்பதோ அல்ல. மாறாக, காலத்தின் அறிகுறிகளை உலகம் அழியப் போகிறது எனும் பயத்துடன் அல்ல, நம்பிக்கையுடனும் விழிப்புடனும் அன்புச் செயல்களுடனும் வாழ்வதற்கான அழைப்பாக நாம் கண்டுணர்வோம்.
எனவே, ஆண்டவர் கூறுவதைப் போல், “வானத்தின் அடையாளங்களை அறிந்துகொள்ளும் நாம், நம் இதயத்தின் அடையாளங்களை அறிந்துகொள்கிறோமா? மழை வருவதற்கு முன்பே வானத்தைப் பார்க்கிறோம்; ஆனால், உறவுகள் முறிவதற்கு முன்பே நமது வார்த்தைகளையும் செயல்களையும் ஆராய்கிறோமா? நாளையைக் குறித்து பல திட்டங்களைத் தீட்டுகிறோம்; ஆனால், இன்றே கடவுளிடம் திரும்பவும், பிறரை மன்னிக்கவும் தயாராக இருக்கிறோமா?”
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, உம்மைக் காண என் கண்களையும் இதயத்தையும் திறந்தருள்வீராக. என் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மறைவாக இருக்கும் உமது உணர்த்துதலை உணர எனக்கு உதவி செய்வீராக. ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452
