பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைத்து, கழிவில்லாத திருஅவையாக மாற இமுஸ் மறைமாவட்டம் அழைப்பு | Veritas Tamil
தெற்கு பிலிப்பைன்சின் கவிட்டே மாகாணத்தில் உள்ள இமுஸ் மறைமாவட்டம், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கும் நோக்கில் தார்ப்பாய்கள், ஒருமுறை பயன்படுத்தும் உணவுப் பாத்திரங்கள் மற்றும் மக்காத அலங்காரப் பொருட்களைத் தவிர்க்குமாறு பங்குகள், பள்ளிகள் மற்றும் கத்தோலிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அக்டோபர் 14ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், மறைமாவட்டத்தை “கழிவில்லாத திருஅவை” (Zero-Waste Church) ஆக மாற்றுவதற்கான முயற்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று ஆயர் ரெய்னால்டோ எவாஞ்சலிஸ்டா கேட்டுக்கொண்டதாக CBCP News செய்தி தெரிவிக்கிறது.
தார்ப்பாய்களுக்குப் பதிலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய துணிப் பதாகைகளைப் பயன்படுத்தவும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கரண்டிகள், தட்டுகள், உணவுக் கொள்கலன்கள் மற்றும் பிளாஸ்டிக் அலங்காரக் கொடிகளைத் தவிர்க்கவும் இந்தச் சுற்றறிக்கை வலியுறுத்துகிறது.
“கவிட்டே உள்ளூர் திருஅவையில் பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று ஆயர் எவாஞ்சலிஸ்டா தெரிவித்துள்ளார்.
பங்குப் பேரவைகள், திருஅவை அமைப்புகள், பள்ளிகள், இளைஞர் குழுக்கள் மற்றும் அடிப்படைத் திருஅவைச் சமூகங்கள் ஆகியவை சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சமூகக் குழுக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் இந்த முயற்சி வலியுறுத்துகிறது.
படைப்பைப் பாதுகாப்பது என்பது கத்தோலிக்கர்களின் அன்றாடப் பழக்கவழக்கங்கள், நம்பிக்கை உருவாக்கப் பயிற்சிகள் மற்றும் மேய்ப்புப்பணிச் செயல்பாடுகளின் ஓர் அங்கமாக மாற வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 25ஆம் தேதி வெளியிட்ட ஆதரவுச் செய்தியிலும், படைப்பைப் பாதுகாப்பதில் திருஅவைக்கு உள்ள பொறுப்பை வலியுறுத்திய 2019ஆம் ஆண்டு சுற்றறிக்கையைச் சுட்டிக்காட்டி, கழிவில்லாத திருஅவை முயற்சிக்கான தனது மறைமாவட்டத்தின் உறுதிப்பாட்டை ஆயர் எவாஞ்சலிஸ்டா மீண்டும் உறுதிப்படுத்தினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட இறைவா உமக்கே புகழ் (Laudato Si) என்ற சுற்றுமடல் இந்த முயற்சிக்கு ஊக்கமளிக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதையும், குறிப்பாக ஏழைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரைக் கவனித்துக்கொள்வதையும் இந்தச் சுற்றுமடல் ஒன்றிணைத்துப் பார்க்கிறது.
“சுற்றுச்சூழல் மனமாற்றம் என்பது ஒரு மறைமாவட்டத் திட்டம் மட்டுமல்ல. நமது பழக்கவழக்கங்களையும் மதிப்பீடுகளையும் மாற்றிக்கொள்வதாகும். இதன் வழியாக, பிறருக்குக் கழிவாகத் தோன்றுவது, பொறுப்புணர்வுடன் படைப்பைப் பேணிப் பாதுகாப்பதன் மூலம் புதிய வாழ்வின் ஊற்றாக மாற வேண்டும்” என்று ஆயர் எவாஞ்சலிஸ்டா தெரிவித்துள்ளார்.
