தன்னை தாழ்த்துவோரே உயர்த்தப்படுவர்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

31 மே 2024  

பொதுக்காலம் 8ஆம் வாரம் - வெள்ளி 

புனித கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் - விழா

செப்பனியா 3: 14-18 அல்லது உரோமையர் 12: 9-16b

லூக்கா  1: 39-56

முதல் வாசகம்.

இன்று நமது திருஅவை அன்னை மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வை விழாவாகக் கொண்டாடுகின்றது.   மக்களிடையே தனிப்பட்ட உறவுகளின் முக்கியத்துவத்தையும், மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறையாகவும் மகிழ்ச்சியாகவும் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை இரவரின் சந்திப்பு நமக்கு நினைவூட்டுகிறது என்றால் மிகையாகாது.

முதல் வாசகத்தில் புனித பவுல்   கிறிஸ்தவ நடத்தை மற்றும் நற்பண்புகளின் முக்கிய அம்சங்களை  வலியுறுத்துகிறார்.   நல்ல மற்றும் நேர்மையான வாழ்க்கையை எவ்வாறு வாழ்வது என்பதற்கான நடைமுறை ஆலோசனைகளை எடுத்துரைக்கிறார்.    

அவர் நேர்மையான அன்பை முதலில் வலியுறுத்துகிறார். அன்பை நேர்மையானதாக இருக்க விடுங்கள் என்றும் பச்சோந்திதனத்திற்கு இடமளிக்காமல், அன்பு உண்மையானதாகவும்  இதயப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.

தீமையை நிராகரித்து  நன்மையைப் பற்றிக்கொள்ளுதலின் அவசியம் குறித்தும் தமது எண்ணத்தைப் பகிர்ந்து கொள்கிறார். உண்மை நட்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடியவற்றை  தீவிரமாக நிராகரிக்க அழைக்கிறார்.

கிறிஸ்தவச் சமூகத்தினர்  பாசத்துடன் ஒருவரையொருவர் அன்பு செய்து தங்கள் இறை நம்பிக்கையில் ஆர்வத்துடனும் பற்றுடனும் இருக்குமாறும், உற்சாகத்துடன், அர்ப்பணிப்புடன்  இறைவனுக்குச் சேவை செய்யும்படியும் உரோமை கிறிஸ்தவர்களைக்  கேட்டுக் கொள்கிறார்.  

நிறைவாக, விருந்தோம்பல் செய்வதற்கும், மற்றவர்களிடம் இரக்கம் மற்றும் பெருந்தன்மையோடு நடந்துகொள்வதற்கும் அழைப்புவிடுக்கும் புனித பவுல், அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்தவும், ஆணவத்தைத் தவிர்க்கவும், தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுடன் பழகத் தயாராக இருக்கவும் நினைவூட்டுகிறார்.    


நற்செய்தி.

புனித லூக்கா அன்னை மரியா  மற்றும் அவரது உறவினார் எலிசபெத் இருவரின் வாழ்க்கையிலும் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். நற்செய்தியாளர்களில் லூக்கா மட்டுமே குறப்பிடும் இந்நிகழ்வு நமக்கு நட்பின் மேன்மையையும் பணிவிடை செய்யும் அவசியத்தை்தையும் உணர்த்தும் இறை செய்தியாக உள்ளது,

கலிலேயாவிலுள்ள நாசரேத்தில் வசித்து வந்த மரியாவுக்கு, கபிரியேல் எனும் வானத்தூதர் தோன்றி, ‘உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்’ என்று அறிவித்த செய்தி மரியாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. அதனமித்தம் அவருக்குப் பணிவிடை செய்ய யூதேயாவுக்குப் புறப்பட்டுப் போகிறார்.

அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.

அப்போது, எலிசபெத்து, மரியாவைப் பார்த்து, ``பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?”என்று மனதார வாழ்த்தினார். அத்துடன் நின்றுவிடாமல், ‘உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று, ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.

அன்னை மரியா மற்றும் எலிசபெத்து இருவரும் ஒருவர் மீது  ஒருவர்  அக்கறைக் கொள்கின்றனர்.   அவர்கள் ஒருவருக்கொருவருள்  கடவுள் இருப்பதை உணர்ந்தார்கள்.  அத்துடன், அவர்கள் அடுத்திருப்பவரை மகிழ்ச்சிப்படுத்தவும்  அடுத்தவரை தன்னை  விட முன்னிலைப்படுத்தவும் முன் வந்தனர் என்பதை வாசகம் தெளிவுப்படுத்துகிறது.

அடுத்துர மரியா கடவுளை முன்னிலைப்படுத்தி பாடியப் பாடலைப் பகிர்கிறார் புனித லூக்கா. 

சிந்தனைக்கு. 

நற்செய்தி இரு உறவினர்களின் சந்திப்பை விவரிக்கிறது.  எலிசபெத் மரியாவை வாழ்த்தும்போது, எலிசபெத்தும் அவருக்குள்   இருக்கும் குழந்தையும் தூய ஆவியாரின் உடனிருப்பைப் பெரிதும்   அனுபவிக்கிறார்கள். திருமுழுக்கு யோவான் தனது தாயார் எலிசபெத்தின் வயிற்றில் துள்ளுகிறார். எலிசபெத், மரியாவைப் போலவே தானும்  ஒரு குழந்தைக்குத் தாயானதைப் பற்றிப் பெருமிதம் கொள்ளாமல்,  அவர் தனது இளைய உறவினரின் தாய்மையைப் போற்றுகிறார். கடவுளின் செய்தி மரியாவுக்கும் அருளப்பட்டதை எலிசபெத்து ஏற்றுக்கொள்கிறார். கடவுளின் பெயரால் இரு வெள்ளை உள்ளங்கள் ஒன்றுணைகின்றன.

இன்று நம் மக்களைப் பார்க்கும்போது, மரியா  மற்றும் எலிசபெத் வெளிப்படுத்திய அதே  பணிவு , தாழ்ச்சி  மற்றும்   இரக்கம் கொண்ட சிலரை காணமுடிகிறது. ஆனால்,  பெரும்பாலானோர்  சுயமரியாதை மற்றும் சுய முன்னேற்றம் பற்றிய எண்ணத்தில் மூழ்கிவிடுகின்றனர். எந்தவொரு செயலிலும் தங்களுக்குப் பயன் தருவதையே அவர்கள் நாடுகின்றனர். எரிகின்ற வீட்டில் பிடுங்கினது இலாபம் என்ற எண்ணம் கொண்டவர்களாக, ஆனால் கிறிஸ்தவர்களாக வாழ விரும்புகின்றனர்.

மரியா மற்றும் எலிசபெஃதைப் போன்று, நம் வாழ்வில் கடவுளின் கரம் செயல்படுவதைக் காண நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும், அதனால் அவருடைய தெய்வீக செயல்களில் நம் கவனம் மகிழ்ச்சியையும் உருவாக்கும். நமக்கு மகிழ்ச்சி தேவை. அவருடைய திருவுளத்தை நிறைவேற்றுவதற்கு நாம் அனுதினமும் முற்படும்போதுதான்  ஊக்கமும் திடமும் பற இறைவன் துணைபுரிவார். அன்னை மரியா கலிலேயாவில் இருந்து தெற்கே யூதேவாவுக்குப் பயணிப்பதைச் சிரமாக எண்ணவில்லை. கடவுளின் உடனிருப்பு அப்பயணத்தை எளிதாக்கியது. மேலும், மரியா கொண்ட மகிழ்ச்சிதான் அவருக்கு   வலிமையையும் ஆற்றலையும் அளித்தது.   

இன்றைய விழா வெறும் இருவரின் சந்திப்பு அன்று. கடவுளின் இரு நம்பிக்கையாளர்களின்  சந்திப்பு.  இது இரு கருவறைகளின் சந்திப்பு.  பழைய ஏற்பாட்டில், கடவுள் தன் மக்களோடு கொண்ட  சந்திப்பை அவர்கள் மகிழ்ச்சியால் ஆடிப்பாடிக் கொண்டாடியதை   மறைநூலில் வாசிக்கிறோம்.  அவ்வாறே,  இங்கு இயேசுவைத் தாங்கிய புதிய உடன்படிக்கை பேழையான மரியாவை  எலிசபெத்துவும் சந்திக்கிறார், அக்களிக்கிறார்.  

“பணிவிடை பெற அன்று, பணிவிடை புரியவே வந்தேன்” என்று இயேசு அறிவுறுத்தினார். இயேசுவின் இவ்வார்த்தை  மரியாவின் பணிவிடையை முன்னுதாரணமாகக் கொண்டது என்று துணிந்து கூறலாம்.  

தொடர்ந்து, எலிசபெத்துவின் கேள்வியான, ‘என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?’ என்பது அன்னை மரியாவுக்கான மிக முக்கிய கோட்பாடு திருஅவையில் தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்தது. அதுதான் ‘மரியா இறைவனின் தாய்’ என்பதாகும். பிரிந்த சகோதரர் சபைகளில் இக்கோட்பாடு ஏற்கப்படவில்லை. ஆனால், மரியா ஆண்டவரின் தாய் என்பது தூய ஆவியாரால் நிரப்பப்பட்ட எலிசபெத்துவின் வாயின்று வந்த வார்த்தை என்பதை அவர்கள் அறிவர்.
 
அடுத்து இன்றைய நாளில். நம்மைக் கவரும் மற்றொரு பகுதி மரியாவின் பாடலாகும்.  இதில், ‘அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்’ ஆகிய வரிகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒன்பது வரிகள் கொண்ட இப்பாடலில் ஆன்மீகப்புரட்சி, அரசியல் புரட்சி மற்றும் சமுதாயப்புரட்சி என மூன்று புரட்சிகளை மரியா எடுத்துக்காட்டுகின்றார். 

நிறைவாக, இன்றைய விழா நம்மை, புரட்சியைக் கொணர்ந்த புரட்சித்தாயின் பிள்ளைகளாக வாழவும்   அழைக்கிறது.  இப்புரட்சிமிகு சமூகத்தை முதலில் நம் குடும்பதில் படைக்க விழைவோம்.


இறைவேண்டல்.

புரட்சிமிகு எண்ணமும் செயலும் கொண்ட ஆண்டவரே, உம்மை நம்பி, அன்பு பணி செய்து வாழ்வோருக்கு உயர்நிலை கிட்டும் என்பதில் நம்பிக்கைக்கொண்டு வாழும் வரத்தை எனக்கு அருள்வீராக. ஆமென்


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452