நேர்மை உள்ளம் கடவுள் சொல் ஏற்கும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

தவக்காலம் 4ஆம் வாரம்-வியாழன்
புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர்-பெருவிழா
2 சாமுவேல் 7: 4-5a, 12-14a, 16
உரோ. 4: 13, 16-18, 22
மத்தேயு 1: 16, 18-21, 24a
 

நேர்மை உள்ளம் கடவுள் சொல் ஏற்கும்!
 
முதல் வாசகம்.

 இந்த வாசகத்தில் , கடவுள் இறைவாக்கினர் நாத்தான் மூலமாக தாவீது அரசனிடம் பேசுகிறார். தாவீது கடவுளுக்காக ஓர் ஆலயத்தைக் கட்ட விரும்புகிறார். ஆனால் கடவுள் அவரிடம்   “நீ எனக்காக ஓர் ஆலயத்தைக் கட்டமாட்டாய். அதற்குப் பதிலாக,  உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். எனது பெயருக்காகக் கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன் என்று கூறுகிறார். 

இங்கே, “ஆலயம்” என்பது ஒரு கட்டிடத்தைக் குறிக்கவில்லை. அது அழியா தன்மையுள்ள ஓர் அரசை குறிக்கிறது. கடவுள் தாவீதுக்குப் பெரும்  வாக்குறுதி அளிக்கிறார்: தாவீதுக்குப் பிறகு அவருடைய வழிமரபினர் தொடர்வார்கள் என்றும், அவருடைய அரசு என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் வாக்குறுதி அளிக்கிறார்.

இரண்டாம் வாசகம்.

இவ்வாசகப் பகுதியில் கடவுளின் வாக்குறுதியானது திருச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல மாறாக, நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் பவுல் அடிகள். ஆபிரகாம் சட்ட  விதிகளைப் பின்பற்றியதால் கடவுளுடைய ஆசீரைப்பெறவில்ல  மாறாக, அவர் கடவுளை முழுமையாக நம்பியதால் அதனைப் பெற்றார் என்று பவுல் விளக்குகிறார். கடவுளின் அழைப்பு சாத்தியமற்றது என்று தோன்றியபோதும் ஆபிரகாம் நம்பி தாயகத்தைவிட்டு புறப்பட்டார் என்பதை பவுல் நினைவூட்டுகிறார்.


நற்செய்தி.


கடினமான மற்றும் குழப்பமான ஒரு சூழ்நிலைக்கு புனித யோசேப்பு எவ்வாறு பதிலளித்தார் என்பதை இந்த நற்செய்தி நமக்குச் சொல்கிறது. 

தூய  ஆவியாரின் மூலம் மரியா கருவுற்றிருப்பது கண்டறியப்பட்டது. நீதியும் இரக்கமும் உள்ள மனிதரான யோசேப்பு, அவளை அவமானப்படுத்த விரும்பவில்லை. ஒரு வானதூதர்  யோசேப்புக்குக் கனவில் தோன்றி அவரிடம் ‘மரியாவை உன் மனைவியாக ஏற்றுக்கொள்ளப் பயப்படாதே. அந்தக் குழந்தை கடவுளிடமிருந்து வருகிறது. அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றதை யோசேப்பு பணிந்து ஏற்றுக்கொண்டார்.  

 
சிந்தனைக்கு.

இன்று நாம் புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர்-பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இன்று, திருஅவை நமக்கு புனித யோசேப்பின் வாழ்க்கையை முன்வைக்கிறது. அவர் மனதில் சஞ்சலமின்றி, செயலில் காட்டிய நம்பிக்கையும் கீழ்படிதலும் கிறிஸ்தவர் நமக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாகும்.  

நமது சுற்றுச் சூழலானது கடவுள் ஒருவருக்கே வெளிச்சம்.  சூழ்நிலைகள் தெளிவாக இல்லாதபோதும் கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து வாழ்வதே அனைத்துக்கும் மேலான வாழ்வு. வாழ்க்கை நிலை தடம்புரண்ட போதும், பல காரியங்கள்  நிச்சயமற்றதாகத் தோன்றும்போதும் கடவுள் நம்பிக்கை ஒன்றே நமக்கு ஆறுதலும் பலமுமாக இருக்க வேண்டும். யானையின் பலம் அதன் தும்பிக்கையில் என்றால், நமக்கு பலம் கடவுள் மீது நாம் கொண்டுள்ள அசைக்க முடியா நம்பிக்கையே. 

இறைவார்த்தையைத் தினமும் தவறாது வாசிப்பதில் கடவுள் நம்மில் பெருமையடைவதில்லை. மாறாக, அவர் நம்மை வழிநடத்தும் போது, அவருக்குக் கீழ்ப்படிவது வாழ்வதில் அவர் மகழ்கிறார். நாம் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியாது. சில விடயங்கள் நமது அறிவுக்கு எட்டாதவை.  ஆதலால், கடவுளில் நம்பிக்கை கொள்வது ஒன்றே நம்மை காக்கும். 

சிலர் துன்ப காலத்தில ‘ எல்லாம் கடவுள் விட்ட வழி’ என்று வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வார்கள். அவர்களைக் கடவுள் கைவிடுவதில்லை. நாம் கடவுளுடைய திருவுளத்தை ஏற்றுக்கொள்கிறோமா? அல்லது நம்முடைய விருப்பத்திற்குப் பிடிவாதமாக இருக்கிறோமா? என்று கேள்வி கேட்டு தெளிவுப் பெறுவது இன்றியமையாதது. ஆண்டவர் இயேசு நம்மை திக்கறற்றவர்களாக விட்டுவிட்டு விண்ணில் அரியணையில் வீற்றிருக்கவில்லை. அவர் உலக முடிவுவரை நம்மோடு வாழ்கிறார். நற்கருணையில் நம்மை சந்திக்கிறார். நம்மோடு நமது இல்லம் வருகிறார். நம்மோடு தங்கி வாழ்கிறார். இதுவே நமது தலையாய நம்பிக்கை.

முதல் வாசகத்தில், கடவுள் தாவீதுக்குப் பெரும்  வாக்குறுதி அளிக்கிறார்: தாவீதுக்குப் பிறகு அவருடைய வழிமரபினர் தொடர்வார்கள் என்றும், அவருடைய அரசு என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் வாக்குறுதி அளிக்கிறார். அந்த வாக்குறுதி தோல்வியில் முடியவில்லை. தாவீதின் வழிமரபில் இயேசுவின் மனுவுருவிலும் திருவவையின் தோற்றத்திலும்  நிலைநாட்டப்பட்டது.

நிறைவாக, யோசேப்பு கடவுளின் மீட்புத்திட்டத்திற்கும், தன்னுடைய மனைவி மரியாவையும் அனுசரித்துப் போனார் என்பதை இங்கே நாமும் அன்றாட குடும்ப வாழ்வில் புரிந்துகொள்ள  வேண்டும். யோசேப்பிடம் விளங்கிய பண்புகளை நமதாக்கி குடும்ப உறவையும் குடும்ப மேன்மையையும் கட்டிக் காப்போம். 

இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே, உமது வளர்ப்புத் தந்தை புனித யோசேப்பின் உதாரணத்தை பின்பற்றி, அமைதி, நம்பிக்கை, கீழ்ப்படிதல் ஆகியவற்றில்,
கடவுளின திட்டத்தை என் வாழ்க்கையில் நிறைவேற்றும் சீடராக வாழ உதவுவீராக. ஆமென்.

 

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452