கடமையைச் செய்ய தலைமைத்துவம், கடமைக்கு அல்ல! | ஆர்.கே. சாமி | VeritasTamil

29 மே 2024  

பொதுக்காலம் 8ஆம் வாரம் -புதன்

1 பேதுரு  திருமுகம் 1: 18-25

மாற்கு10: 32-45

முதல் வாசகம்.
 
திருத்தூதர் பேதுரு, போந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டு வாழும் கிறிஸ்தவர்களுக்கென எழுதும் இத்திருமுகத்தில், அவர்கள் "மீட்பு" பெற்ற மக்கள் எனும் செய்தியைப் பகிர்ந்துகொள்கிறார். குறிப்பாக  அவர்களின் மூதாதையர்களிடமிருந்து பெறப்பட்ட பயனற்ற வாழ்க்கை முறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுகிறார்.  அவர்கள் அழிந்து போகக்கூடிய மற்றும் குறைந்த மதிப்புடைய வெள்ளி அல்லது தங்கம் போன்ற  செல்வத்தின் மூலம் மீட்பு அடையப்படவில்லை என்றும், அவர்கள்  விலைமதிப்பற்ற, களங்கமற்ற மற்றும் கறையற்ற ஆட்டுக்குட்டியான இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டனர் என தெளிவுப்படுத்துகிறார். 

கடவுளின் மீட்புத் திட்டத்தின் ஒரு மையப் பகுதியாக  கிறிஸ்துவின் பங்கு இருந்தது என்றுரைக்கும் புனித பேதுரு,  இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி மாட்சிப்படுத்திய கடவுள்  அவரில் நம்பிக்கை கொண்டோருக்கும் புது வாழ்வு வழங்குகிறார் என்ற நம்பிக்கையைத் தருகிறார். இது கிறிஸ்துவில் அவர்களின் பெறும் நிலைவாழ்வைக் குறிக்கிறது.
 

நற்செய்தி.

இன்றைய நற்செய்தியானது, சீடத்துவம், பணிவாழ்வு,  மற்றும் இயேசுவின் பணியின் தன்மை ஆகியவற்றின் அடிப்படை  தன்மையை விவரிக்கிறது.  

இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்த பயணம் முக்கியமானது, ஏனெனில் இந்த பயணம்தான் இயேசு  இறுதியில் சிலுவையில் அறையப்படுவதற்கும் உயிர்த்தெழுதலுக்கும் வழிவகுக்கிறது. இயேசு தம் சீடர்களுக்கு  தம் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை முன்னறிவிக்கவும் விவரிக்கவும்  விழைகிறார். அவர் தமக்கு  மரண தண்டனை விதிக்கப்படுவதையும், கேலி செய்தல், முகத்தில் உமிழ்தல், கசையடி மற்றும், கொல்லப்பட்டு மூன்றாம் நாள் அவரின் உயிர்த்தெழுதலைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

இந்த அறிவிப்பானது,  சீடர்ககளுக்கு வரவிருக்கும் துன்ப நிகழ்வுகளுக்குத் தயார்படுத்துவதாகவும் அமைகிறது.

தொடர்ந்து நிகழ்ந்த உரையடலில், செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்கள்.  இயேசுவின் வலது மற்றும் இடது பக்கத்தில் அமர்ந்து, அவருடைய மாட்சியில் மதிப்புக்குரிய  இருக்கைகளை வழங்குமாறு இயேசுவிடம் கேட்கிறார்கள்.

அவர்களின் விண்ணப்பம், உலகுக்குரிய வாழ்வை மையமாகக் கொண்டதாக வெளிப்பட்டது. இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” என்று கேட்க, அவர்களால் முடியும் என்று அவர்கள் உறுதியளிக்கிறார்கள்.

மேலும் அவருடைய துன்பத்தில் அவர்களும்  பங்கு கொள்வார்கள் என்பதை இயேசு ஒப்புக்கொள்கிறார், ஆனால் அவரது என் வலப்புறத்திலும் இடப் புறத்திலும் அமரும்படி அருளுவது தந்தையின் விருப்பத்திற்கு உட்பட்டது என்கிறார்.

உடனே, மற்ற சீடர்கள் யாக்கோபு மற்றும் யோவான்  மீது கோபங் கொண்டனர்.   இயேசு அவர்களிடம்  தம்முடைய அரசில் மாட்சி என்பது அதிகாரம் அல்லது உயர்நிலை பற்றியது அல்ல என்று விவரிக்கிறார்.   இறுதியாக  அவர் சேவை பெற்று அதிகாரம் செலுத்த அல்ல,  சேவை செய்ய வந்தார் என்றும், பலருக்கு மீட்கும் பொருளாக தம் உயிரைக் கொடுக்கவும் வந்தார் என்றும் தெளிவுப்படுத்தி முடிக்கின்றார்.


சிந்தனைக்கு.


இன்றைய நற்செய்தியில், தமது துன்பம் மற்றும் இறப்பைப் பற்றி இயேசு பேசிய பிறகு, யாக்கோபு, மற்றும் யோவான் இருவும் விண்ண்கத்தில், இயேசுவின் மாட்சியில்  சிறப்பு நிலைப்பாட்டைக் கோருகிறார்கள். அவர்களின் இந்த விண்ணப்பம் இயேசுவுக்கும்  ஆச்சரியத்தை உண்டு பண்ணியிருக்கும். ஏனெனில் அத்தகையைச் சீடர்களை அவர் உருவாக்க  எண்ணம் கொண்டிருக்கவில்லை. கிறிஸ்துவோடு கொண்டுள்ள சீடத்தவம் பதவிக்கும், பட்டத்திற்கும்,  அந்தஸ்துக்கும் ஆசைக் கொண்டதல்ல.   

பணியாளர்களாக  இருப்பவர்களுக்கும் உயர் பதவியில் இருப்பவர்களுக்கும் என்ன தேவை என்பதைப் பற்றி அறிவுறுத்த  இது இயேசுவுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. தலைமைத்துவத்தின் மற்றொரு சாயலை இயேசு முன்வைக்கிறார். “... உங்களில் பெரியவனாக இருக்க விரும்புகிறவன் உங்கள் வேலைக்காரனாவான்; உங்களில் முதன்மையானவனாக இருக்க விரும்புகிறவன் எல்லோருக்கும் பணியாளனாக இருப்பான்” என்று முற்றிலும் வேறுபட்ட திலைமைத்துவத்தை அறிமுகப்படுத்துகிறார். இத்தகையைத் தலைமைத்துவத்தை இயேசு வெறுமனே முன்மொழியவில்லை. அவர் தன்னையே முன்மாதிரியாகக் கொண்டு பேசினார். 

ஆம்,  இயேசு தம்மை  “அனைவருக்கும் பணியாளராகவும்” தாழ்த்தினார்.   உண்மையிலேயே தலைவராக இருப்பதற்கான சிறந்த வழி அனைவருக்கும் பணியாளராக மாறுவதாக என்பதை இயேசு மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார்,

இயேசுவின் மகத்துவம் முதலில் அவர் கடவுள் என்ற உண்மையில் காணப்படுகிறது. ஆனால் அவருடைய அதே  மகத்துவம் அவரது மனுவுருவில்தான்  வெளிப்பட்டது.  அவர் தனது உயிரை "பலரை மீட்கும் பொருளாக" கொடுக்கிறார்.   அவருடைய தன்னலமற்ற தியாகத்தின் பலன், அவரிடம் திரும்பும் அனைவருக்குமான மீட்பாகும்.   

இன்று, புனிதமான பணி வாழ்க்கை வாழ நமக்கான சொந்த அழைப்பை நினைத்துப் பார்க்க வேண்டும்.  அன்பினால் மற்றவர்களுக்கு பணி செய்யவெ கடவுள் நம்மை அழைக்கிறார். நாம் இயேசுவை முன்மாதிரியாகக் கொள்ளும்போது,  நம்மில் தன்னலம் மறையத் தொடங்கும்.

தன்னலமின்றி மற்றவர்களுக்கு நம்மைக் கொடுக்கக்கூடிய வழிகளை நாம் தேட வேண்டும் என்பது இயேசுவின் அறிவுரை. முதல் வாசகத்தில்,பேதுரு கூறுவதைப்போல், நமது இவ்வுலக வாழ்வானது புல் வாடி, பூக்கள் உதிர்வது போல  தற்காலிகமானது. இங்கே எதுவும் நமக்கு நிலையானது அல்ல. பதவிக்கும் ‘நாற்காலிக்கும்' அந்தஸ்துக்கும் போட்டிப் போட்டுக்கொண்டு, நமது சீடத்துவ வாழ்வுக்குப் பங்கம் ஏற்படுதுவது இயேசுவுக்கான துரோகம். எனக்குத் தெரிந்த ஒருவர் மிகவும் வயது முதிர்ந்தவர். ஆனால் இன்னும் ‘தலைவர்’ பதவியைத் தற்காத்துக்கொள்ள எல்லா முயற்சிகளும் எடுத்துவருகிறார். அவரால் நடக்கவும் முடியவில்லை, ஆனால் பதவி மோகம் அவரை விடவில்லை.  

தலைமைப்பொறுப்பு  என்பது கடவுளால் கொடுக்கப்பட்ட கொடை. அதை மக்களை வழிநடத்தப்  பயன்படுத்தவேண்டும் என்ற சரியான புரிதல் இல்லாததால்தான் நமது பங்குகளில் சண்டை சச்சரவுகள் தலைத்தூக்குகின்றன. சீடத்துவம் என்றாலே பணி வாழ்வுதான். அது துன்பத்திற்கும் துயரத்திற்கும் உட்பட்டது இயேசு தெளிவாக இன்று எடுத்துரைக்கிறார். ஆகவே, கிறிஸ்தவத்தில் பேரும் புகழும் விரும்புவோருக்கு அழிவுதான் மிஞ்சும், வெற்றி வாகை அல்ல என்பதை நினைவில் கொள்வோம். 
 

இறைவேண்டல்.

‘துயருறுவோர் பேறுபெற்றோர்’ என்றுரைத்த ஆண்டவரே, திருஅவையில் நான் சொகுசான வாழ்வையும் அதிகாரத்தையும் ஏற்காமல்,  பணிவாழ்வில் உமக்கு உற்ற பணியாளானாக வாழ அருள்புரிவீராக. ஆமென்.
 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments

Daisy (not verified), May 28 2024 - 10:50pm
தெளிவான விளக்கம் நன்றி🙏