நம் வாழ்வால் நம் பிறப்பிற்கு அர்த்தம் கொடுப்போமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா
I: மீக்கா: 5: 2-5
II: திபா: 13: 5. 6
III: மத்: 1: 1-16, 18-23
பிறப்பு என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட வரம். பிறப்பு ஒரு சரித்திரத்தின் தொடக்க நாள். பிறப்பு நிறைவாழ்வை நோக்கிய பயணம் . எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு உன்னதமான நிகழ்வு. பிறப்பு சாதாரண ஆணையும் பெண்ணையும் தாய் தந்தையாக உயர்த்தும் உன்னதமான நிகழ்வு. பிறப்பு அடுத்த தலைமுறையின் அங்கீகாரம். பிறப்பு குடும்ப வாழ்வின் ஆசிர்வாதம். இவ்வாறாக பிறப்பின் மேன்மையைப் பற்றியும் அதன் சிறப்பினைப் பற்றியும் அடுக்கிக் கொண்டே போகலாம். இன்றைய நாள் கத்தோலிக்கத் திருஅவையில் ஒரு மகிழ்ச்சியின் நாள்.ஆம் இன்று அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
நம்முடைய கத்தோலிக்கத் திருஅவையில் மூன்று நபர்களுக்கு தான் பிறப்பு பெருவிழா கொண்டாடப்படுகின்றது. ஆண்டவர் இயேசு, அன்னை மரியாள் மற்றும் திருமுழுக்கு யோவான் ஆகிய மூவருக்கு மட்டும்தான் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகின்றது. காரணம் என்னவெனில் இந்த மூன்று நபர்களும் திருஅவையின் அடித்தளமாக இருக்கின்றனர். குறிப்பாக அன்னைமரியாள் கடவுளின் மீட்புத் திட்டம் இந்த உலகத்திலேயே அரங்கேற மிகச் சிறந்த கருவியானார். கடவுள் அன்னை மரியாவை தாயின் கருவில் உருவாகும் நாளில் இருந்தே சிறந்த பாத்திரமாகக் காத்து வந்தார்.
அன்னை மரியாவின் பிறப்பு ஒரு அற்புதமான பிறப்பு. கடவுளின் ஆசியையும் அருளையும் நிரம்பப் பெற்ற பிறப்பு. ஏனெனில் மரபு வழக்கப்படி அன்னை மரியாவின் பெற்றோர் சுவைக்கின் அன்னாள் ஆவர். இவர்களுக்கு நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தினால் சமூக விமர்சனங்களுக்கும் அவலங்களுக்கும் உள்ளாயினர். குறிப்பாக சுவைக்கின் குழந்தை பாக்கியம் இல்லாததால் கடவுளுக்கு பலி செலுத்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. அன்னாள் ஒரு பெண்ணாக குழந்தை இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிருக்கலாம். ஆனால் அவர்களின் ஆழமான இறைவேண்டலும் இறை நம்பிக்கையும் கடவுளின் இரக்கத்தைப் பெறுவதற்கு ஊன்றுகோலாய் இருந்தது. கடவுள் அற்புதமான வகையில் அன்னை மரியாவை பரிசாகக் கொடுத்தார். அதுவும் ஜென்ம பாவமில்லாமல் தூய ஆவியின் அருளால் அன்னை மரியாள் பிறந்தார். இதற்கு காரணம் கடவுள் தன் மகனின் இறையாட்சிப் பணிக்குத் தூய்மை நிறைந்த பாத்திரத்தை பயன்படுத்த வேண்டும் என திருவுளம் கொண்டதே. அன்னை மரியாள் இளம் பெண்ணாக இருந்த பொழுது, அவரோடு எத்தனையோ இளம்பெண்கள் இருந்தபோதிலும், தன்னுடைய மீட்பு திட்டத்திற்கு அன்னை மரியாவை மிகச்சிறந்த கருவியாகப் பயன்படுத்தினார். "அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! " என்று கபிரியேல் வானதூதர் வழியாக கடவுளே வாழ்த்தும் அளவுக்கு அன்னை மரியாள் தூய உள்ளம் கொண்டவராக இருந்தார். அப்படிப்பட்ட தூய உள்ளம் கொண்ட அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழா நமக்கு கொடுக்கும் மைய சிந்தனைகளை பின்வருமாறு தியானிப்போம்.
முதலாவதாக அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழா இறை நம்பிக்கையை வெளிப்படுத்தும் விழா. அன்னை மரியாவின் பெற்றோர் கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு கடவுளே தஞ்சம் என்று கூறி இயேசுவின் இந்த நற்கருணைப் பேழையைப் பெற்றார்கள். இன்றைய உலகத்தில் எத்தனையோ தம்பதியினர் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் சுவக்கின் அன்னாள் ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணம். கடவுள் தங்களுக்கு நிச்சயமாக தன்னுடைய இரக்கத்தை பொழிவார் என்ற ஆழமான நம்பிக்கையோடு வாழ அழைக்கப்பட்டுள்ளனர். அதே போல நாமும் இந்த திருநாளிலே குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியினரை கடவுளிடம் ஒப்புக்கொடுத்து செபிப்போம்.
இரண்டாவதாக அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழா பெண் குழந்தைகளை ஏற்றுக்கொள்ளும் விழாவாக இருக்கின்றது. நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில எண்ணற்ற நபர்கள் பெண் குழந்தை பிறந்தால் சுமையாகவும் துன்பமாகவும் கருதுகின்றனர். ஆனால் கடவுள் பெண்ணாகிய அன்னை மரியாவை இறைத்திருவுளத்திற்குப் பயன்படுத்தியதன் வழியாக பெண் குழந்தைகளை மேன்மையுற செய்துள்ளார்.
மூன்றாவதாக அன்னையை தன் மகனுக்கு மட்டுமல்ல உலகிற்கே தாயாக்கி தன்னோடு இணைப்படைப்பாளாயாக மாற்றினார். அதற்கு காரணம் தாயானவள் தன்குழந்தைக்கு உடலளவில் தாயானாலும் தன்னுடைய அன்பாலும் கருணையாலும் பலருக்குத் தாயாகிறாள் என்ற உண்மையை அன்னை மரியா மூலம் எடுத்துரைத்தார்.
அன்னை மரியா தன் பிறப்பின் மூலம் அன்பையும் தாய்மையையும் தூய்மையையும் நிலைநிறுத்தினார். நாமும் அவரைப்போல வாழவும் நமது பிறப்புக்கு முழுமையாக அர்த்தம் கொடுக்கவும் அன்னை மரியா வழியாக மன்றாடுவோம்.
இறைவேண்டல்
எம்மை படைத்த இறைவா எம் பிறப்பின் மேன்மையை உணர்ந்து அன்னை மரியாவைப்போல பிறப்பிற்கு அர்த்தம் கொடுப்பவர்களாக வாழ வரமருளும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்