துயருறுவோரின் சமாரியன் | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 27 ஆம் திங்கள்  
I: யோனா: 1: 1-17
II: திபா 2: 2. 3. 4. 7
III: லூக்: 10: 25-37

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்த புதிய கட்டளை "நான் உங்களிடம் அன்பு செலுத்துவது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்." இயேசுவைப் போல அன்பு செய்வது நமக்கு சாத்தியமாகுமா? என்றால் சற்று கடினமானாலும் கூட சாத்தியமே. இயேசு தேவையில் உள்ளோரை தேடிச்சென்று அன்பு செய்தார். துயரத்தில் மூழ்கியிருப்போரின் உடனிருந்தார். ஆறுதல் அளித்தார். துயரத்தில் இருப்பவரை கண்டும் காணாதது போல அவர் விட்டு விடவில்லை. இன்றைய நற்செய்தியில் காணப்படும் நல்ல சமாரியனாக இயேசு திகழ்ந்தார். இதைப்போலவே நாமும் வாழ வேண்டும் என்று இயேசு அழைக்கிறார்.

ஒரு நபர் ஒருமுறை என்னிடம் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் சிறுபிள்ளையாக இருந்தபோது மிகவும் சுட்டியாக இருப்பார். நன்கு படிப்பார். ஆனால் ஏனோ மற்ற வகுப்பு மாணவர்கள் அவரை தங்கள் நட்பு வட்டாரத்தில் இணைத்துக்கொள்ளவில்லை. ஆனால் பாடத்தில் சந்தேகங்கள் இருந்தால் மட்டும் அவரை அணுகுவார்களாம். இந்நிலையில் வகுப்பில் ஒரு மாணவி மிகவும் குறைவான மதிப்பெண் பெற்று ஆசிரியரிடம் பயங்கரமாக திட்டு வாங்கிய நிலையில் அழுது கொண்டு இருந்தார். அம்மாணவியின் நண்பர்கள் அம்மாணவியை தைரியப்படுத்தி ஆறுதல் கூறாமல் கிண்டலடித்துச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர் தாமாக அம்மாணவியிடம் சென்று தாம் உதவுவதாகக் கூறி தைரியப்படுத்தினார். அன்றிலிருந்து இருவரும் சேர்ந்து படித்தனர். நல்ல மதிப்பெண்கள் பெற்றனர். இறுதியில் படிப்பில் பின்தங்கியிருந்த அம்மாணவி தனக்கு உதவியவரிடம் "உன்னால் தான் என்னால் நன்கு படிக்க முடிந்தது" என்று நன்றி கூறியாதாக தன் பகிர்வின் போது தெரிவித்தார்.

இயேசுவைப்போல, நல்ல சமாரியனைப்போல துன்புறுவோரின் அருகிருக்க நம் முகக் கண்களும், அகக்கண்களும் திறக்க வேண்டும். யார் உண்மையில் துன்பப்படுகிறார்கள் என உணரும் அறிவு வேண்டும். அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். கைம்மாறு கருதும் மனமும், நாம் இவருக்கு உதவுவதால் எதையும் இழந்து விடுவோமோ என்ற எண்ணமும் நம்மை விட்டு அகன்று போக வேண்டும். நல்ல சமாரியன் உவமையிலும், நல்ல சமாரியனாக சிலுவைச் சாவு வரை வாழ்ந்த இயேசுவிடமும் மேற்கூறிய அத்தனை பண்புகளும் நிறைந்திருந்ததை நாம் மறுக்க முடியாது. 

நம் வாழ்வில் தேவையில் இருப்பவரைத் தேடி உதவாவிட்டாலும், வாய்ப்புக் கிடைக்கும் போதாவது உதவி செய்கிறோமா? எடுத்துக்காட்டாக, சாலையில் யாராவது விபத்தில் மாட்டிக்கொண்டால் எத்தனை பேர் முன் வந்து காப்பாற்றுகிறோம்? பரிதாபப்படுவது உண்மையான பிறரன்பல்ல. பிறரன்பு இல்லாத மனதில் இறையன்பு இருக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து கொள்ள நமக்கு இன்று வாய்ப்பு தரப்பபட்டுள்ளது. எனவே நம் இயேசுவைப்போல நல்ல சமாரியனாய் வாழ்ந்து பிறரன்பு பணிபுரிந்து இறைவனை அன்பு செய்யும் வரம் கேட்போம்.

இறைவேண்டல் 
தேவையில் இருப்போரை தேடிச்சென்று உதவும் தெய்வமே!! எங்கள் அருகில் துயருறும் மக்களைக் கண்டறிந்து அவர்களின் துன்பத்தைப் பகிர்ந்து கைம்மாறு கருதாமல் நல்ல சமாரியனைப் போல வாழும் வரம் தாரும்.  இறையன்பிலும் பிறரன்பிலும் ஒருங்கே வளர உதவியருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்