இலக்கு நோக்கிய பயணத்தில் முன்னேறுகிறோமா? பின் வாங்குகிறோமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலம், வாரம் 26 ஆம் புதன்
I: 2: 1-8
II: 137: 1-2. 3. 4-5. 6
III: 9: 57-62
ஒரு அருட்சகோதரி தன்னுடைய அழைத்தல் வாழ்வை என்னோடு பகிர்ந்து கொண்டிருந்தார். அவர் சிறுவயது முதல் அருட்சகோதரியாக மாற வேண்டும் என்ற ஆசைகொண்டிருந்தார். ஆனால் அவருடைய தந்தை இசைவு தெரிவிக்கவில்லை. அவர் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் மேற்படிப்புக்காக எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய் என்று தந்தை கேட்ட போது தான் அருட்சகோதரியாகத் தான் ஆக வேண்டும் என்ற விருப்பத்தை மீண்டும் கூறினார். தந்தை இதனால் சில நாட்கள் மகளிடம் சரியாக பேசவில்லை. இறுதியில் மகளின் விருப்பத்தை புரிந்து கொண்ட தந்தை தனது சம்மதத்தை தந்தார். அருட்சகோதரிகளுக்கான பயிற்சிக்காக தன் மகளை சேர்த்து விட்டு வரும் போது அவர் கூறிய வார்த்தைகள் "அம்மா காலை வைத்துவிட்டாய். திரும்பி வர வேண்டும் என் று நினைக்காதே" என்பது தான். இன்றும் தனக்கு மனக்கலக்கம் வரும்போதெல்லாம் தன் தந்தையின் வார்த்தைகள் வலுவூட்டுவதாக அந்த சகோதரி என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
இன்றைய் நற்செய்தியில் இயேசு "கலப்பையில் கைவைத்த பின் திரும்பி பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்பட தகுதியற்றவர்" என்று கூறுவதை நாம் வாசிக்கிறோம். இந்த வார்த்தை நம் வாழ்வை அலசிப் பார்க்க நம்மை அழைக்கிறது.
நம்முடைய உடல் உள்ள ஆன்ம வளர்ச்சிகளுக்காக நாம் பல திட்டங்களை வகுப்பதுண்டு.நான் தினமும் உடற்பயிற்சி செய்வேன். தினமும் நல்ல புத்தகங்களை வாசிப்பேன். விவிலியம் வாசித்து ஜெபிப்பேன் போன்றவை சில எடுத்துக்காட்டுகள். அப்படி நாம் வகுத்த திட்டங்களை நடைமுறைப்படுத்த நாம் முயற்சி எடுப்பதும் உண்டு. ஆனால் பல சமயங்களில் அவற்றை நாம் பாதியில் விட்டுவிடுகிறோம். யாரேனும் அதைக்குறித்து நம்மிடம் விசாரிக்கும் போது தகுந்த சாக்கு போக்குகளும் சொல்லி தப்பித்துக் கொள்கிறோம். இப்படி சிறிய காரியங்களில் ஆரம்பித்து வாழ்வின் முக்கிய கட்டங்களிலும் நம் அடைய வேண்டிய இலக்கிற்கான ஓட்டத்தை பாதியில் நிறுத்தி சோர்ந்து மீண்டும் ஆரம்பித்தே இடத்திற்கே வந்து விடுகிறோம்.
இத்தகைய மனநிலையை மாற்றவே நம்மை இயேசு அழைக்கிறார். நாம் ஒரு காரியத்தை செய்ய தொடங்கிவிட்டால் அதற்கான ஒவ்வொரு படிநிலையையும் சரியாக வரிசைப்படுத்தி செயல்படுத்த வேண்டும். இடையில் வரும் சோதனைகளை கண்டுகொள்ளாமல் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்பதே நமக்கான இன்றைய செய்தி. உலக காரியங்களிலேயே இவ்வளவு முயற்சி எடுக்க வேண்டும் என்றால் இறையாட்சிக்கான வாழ்வில் நாம் எத்துணை சிரத்தை எடுக்க வேண்டுமென சிந்திப்பது நம் கடமை.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு யோபு. நல்லவராகவும் நேர்மையாளராகவும் வாழ வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்த யோபு எத்தனை துன்பங்கள் வந்தாலும் பின்வாங்கவில்லை. கடவுளையும் பழிக்கவில்லை. தொடர்ந்து நல்லவராகவே பயணித்தார். எனவே நாமும் நம் வாழ்வின் இலக்கை அடைய பின்வாங்காமல் தொடர்ந்து முன்னேறும் வரத்திற்காய் ஜெபிப்போம்.
இறைவேண்டல்
வெற்றியின் நாயகனே இறைவா! உலக காரியங்களிலும் இறையாட்சிக்கான தேடலிலும் நாங்கள் எடுக்கும் முயற்சிகளில் பின்வாங்காமல் தொடர்ந்து முன்னேறும் வரம்தாரும். ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்