எல்லாரும் ஒன்றாய் இருப்போமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா காலம்-ஏழாம் வாரம் வியாழன்
I: திப: 22: 30; 23: 6-11
II: திபா :16: 1-2,5. 7-8. 9-10. 11
III:யோவான் :17: 20-26

ஆசிரியர் ஒருவர் தன் வகுப்பு மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து வகுப்பிற்குள்ளேயே பல போட்டிகள்  நடத்தத் திட்டமிட்டார். போட்டிக்கான தேதியையும் வழிமுறைகளையும் கூறிய பின் குழுவாக இணைந்து தயார் செய்ய அறிவுரை கூறினார். ஒவ்வொரு குழுவுமே நாம் தான் ஜெயிக்க வேண்டுமென போட்டி போட்டுக்கொண்டு திட்டமிடவும் தயாரிக்கவும் தொடங்கினர். ஆனால் அவற்றுள் ஒரு குழுவிலிலுள்ள மாணவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் இருந்தனர். ஒரு சிலர் தங்களுடைய பங்களிப்பை சரியாக வழங்காமல் ஏனோ தானோ என்று செயல் பட்டனர். தங்களுடைய கருத்துக்களை மட்டும் பிடித்துக்கொண்டு செயல்பட்டனர். எனவே போட்டியன்று மற்ற குழுக்களை விட மிகக் குறைவான மதிப்பெண்களைப் பெற்று தோல்வியுற்றனர். அவர்களுடைய நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர் அக்குழுவை ச் சந்தித்துப் பேசி அவர்களின் ஒற்றுமையின்மையைப் புரிய வைத்தார். 

ஒன்றித்திருத்தல் மனித வாழ்வில் மிக இன்றியமையாதது. ஒன்றாய் இருந்தால்தான் குடும்பம் கோவிலாக மாறும்.நாடு  ஒற்றுமையாய் இல்லாமல் பிளவு பட்டிருந்தால் எதிரிகளால் அழிவது உறுதி. இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களுக்காக செபிக்கும் போது "அவர்கள் ஒன்றாயிருப்பார்களாக" என்று வேண்டுகிறார். இயேசு கூறும் "ஒன்றித்திருத்தல்" இரு நிலைகளைக் கொண்டது. 

முதலாவதாக கடவுளோடு ஒன்றித்திருத்தல் அதாவது இறைவேண்டல்,ஆழமான நம்பிக்கை இவற்றால் கடவுளோடு ஒன்றித்து அவர் பிரசன்னத்தோடு வாழ்வது. இரண்டாவது நாம் வாழ்கின்ற சூழலில் சக மனிதர்களை அவர்கள் இருக்கின்றவாரே ஏற்றுக்கொண்டு அன்பு செய்து அவர்களைச் சார்ந்து ஒத்துழைத்து வாழ்வது.நமக்குள் எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் நாம் ஒற்றுமையாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.
இயேசு தன் சீடர்களுக்காக மட்டுமல்ல அவர்களுடைய போதனையால் நம்பிக்கையாளர்களாய் வாழும் நாமும் இறைவனோடும் பிறரோடும் ஒன்றித்திருக்கவே இவ்வாறு வேண்டுகிறார். சோதனை, நெருக்கடியான வேளைகளில் நாம் நம்பிக்கையும் அன்பையும் இழந்து சிதறுண்டு போகாமல் வாழ வேண்டும் என்பதற்காக நம்மை இவ்வாறு வாழ அழைக்கிறார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பின் அடித்தளம் மூவொரு இறைவன். தந்தை மகன் தூய ஆவியார் ஒன்றாய் இருப்பதைப் போல நாமும் இறைவனோடும் நம் சகோதரங்களோடும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.எனவே நம்பிக்கையிலும் அன்பிலும் வளர்ந்து சோதனைகளை வென்று இறையாட்சியை அமைக்க முயலுவோம்.

இறைவேண்டல்
மூவொரு இறைவா உம் மக்கள் நாங்கள் வேற்றுமைகளைக் களைந்து ஒன்றாய் வாழ அருள் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்