யோசேப்புவைப் போல் நேர்மையாளராக! | அருட்பணி. குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா 
I: 2 சாமு:  7: 4-5,12-14,16
II: திபா: 89: 1-2. 3-4. 26,28
III: உரோ: 4: 13, 16-18, 22
IV: மத்:1: 16, 18-21, 24

இன்று நாம் நம் தாய் திருஅவையோடு இணைந்து புனித யோசேப்புவின் விழாவைக் கொண்டாடுகிறோம். திருஅவை பாரம்பரியத்தில் புனித யோசேப்புவிற்கு இரண்டு நாட்கள் விழா எடுக்கிறோம். மார்ச் 19 புனித யோசேப்பு மரியாவின் கணவர் எனவும், மே 1 புனித யோசேப்பு தொழிலாளர்களின் பாதுகாவலர் எனவும் கொண்டாடுகிறோம். 

இன்று நாம் கொண்டாடும் விழாவானது புனித யோசேப்பு தந்தையைப் போல நம்மை நேர்மையுள்ளவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறது. நேர்மையாளர் அல்லது பழைய மொழிபெயர்ப்பின் படி நீதி மான் எனச் சொல்லப்படுகிறவர் யாரென்றால் ஆண்டவர் வழங்கிய சட்டத்தை மீறாமல் கடைபிடித்து வாழ்பவரே. ஆனால் இங்கே யோசேப்புவின் நேர்மையான நிலைக்கு மத்தேயு நற்செய்தியாளர் புதிய விளக்கம் கொடுக்கிறார். 

தான் மணமுடிக்கவிருக்கும் பெண் கருவுற்றிருத்தலை எந்த ஆணும் ஏற்றுக்கொள்ளமாட்டார். அதிலும் ஒரு யூத ஆண், சட்டத்தை மதிக்க வேண்டும். அவ்வாறெனில் அப்பெண்ணை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். ஆனால் யோசேப்பு மரியா கருவுற்றிருப்பதை அறிந்த பின் இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கிட திட்டமிட்டார் என நாம் வாசிக்கிறோம். 

ஆம். பிறரை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் இருப்பதே நேர்மையாளரின் நேரிய நிலைக்கு அர்த்தம் கொடுக்கிறது. மரியா கருவுற்றிருப்பது ஆண்டவரின் அருளால் எனத் தெரிந்தவுடன் புனித யோசேப்பு மரியாவை ஏற்றுக்கொண்டார்.

அன்புக்குரியவர்களே நம்மோடு இருப்பவர்களை நாம் எப்போதும் புகழ வேண்டும் என்பது அல்ல மாறாக அவர்கள் குற்றம் புரிந்தவர்களே ஆனாலும் இகழ்ச்சிக்கு உள்ளாக்கி பிறரிடம் அவர் செய்த தவறை பிரகடனப்படுத்தக் கூடாது என்ற பாடத்தை நாம் புனித யோசேப்புவின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். எனவே நாமும் சூசை தந்தையின் பிள்ளைகளாய் நேரிய வழியில் வாழ முயல்வோம்.

 இறைவேண்டல் 
அன்பு இறைவா! புனித யோசேப்புவைப் போல நேரிய வழியில் வாழ எமக்கு உதவும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்