காக்கும் கடவுளை கைப்பிடிப்போமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம் 16 வாரம் திங்கள் 
I: விப: 14: 5-18
II: விப 15: 1. 2. 3-4. 5-6
III: மத்: 12: 38-42

கடவுள் நமக்கு தந்தையாக இருந்து நம்மை எந்நாளும் காக்கக்கூடிய இறைவனாக இருக்கிறார். அப்படிப்பட்ட இறைவனின் பிள்ளைகளாக நாம் வாழும்  பொழுது நிச்சயமாக நிறைவான மகிழ்ச்சியை காண காணமுடியும். கடவுள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கும் பொழுது நிச்சயமாக கடவுள் நம்மை ஆபத்திலிருந்து மீட்பார்.  

நான் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பங்கில் களப்பணி செய்தேன். அவ்வாறு செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு முறை ஆலயத்திற்கு செல்ல பனியனை ஆடையாக அணிந்தேன். அந்தப் பனியனை அணிந்த பிறகு என் அறையை விட்டு சிறிது தூரம் நடந்தேன்.பின்பு சட்டை அணிந்து செல்லலாம் என்று மீண்டும் என்னுடைய அறைக்கு வந்து என் பனியனை கழட்டிய போது என் மார்புப் பகுதியில் ஒரு தேள் இருந்தது. மீண்டும் என்னுடைய அறைக்கு வரவில்லையென்றால்  அன்றே என் உயிர் போயிருக்கும். அந்த நாளை இன்று நினைத்துப் பார்த்தாலும் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருக்கலாம்.

நம்முடைய அன்றாட வாழ்வில் கடவுள் கருணை உள்ளவர் என்று ஆழமாக நம்பி நம்மையே முழுவதுமாக ஒப்படைக்கும் பொழுது கடவுளின் ஆசீரையும் பாதுகாப்பையும் நிறைவாக பெறமுடியும். இன்றைய முதல் வாசகத்தில் எகிப்தில் அடிமையாக 480 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடந்த நிகழ்வை தியானிக்கிறோம்.

இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்க மோசே வழியாக பல வல்ல செயல்களைச் செய்து கடவுள் அவர்களை மீட்டுக்கொணர்ந்தார். எகிப்தியரிடையே பத்து கொள்ளை நோய்களை அனுப்பினார். இவை அனைத்தையும் தங்கள் கண்களால் கண்டனர் இஸ்ரயேலர். ஆயினும் மீண்டுமாய் தங்களை எகிப்தியர் துரத்தி வருவதைக் கண்டு  இன்னும் அஞ்சி தூதரான மேசேயைப் பழிக்கத் தொடங்கினர். அந்நேரம் அவர்கள் கடவுளின் காக்கும் கரத்தைப் பற்ற தயங்கினர். பத்து கொள்ளை நோய்களால் எகிப்தியரைத் தாக்கி தங்களை மீட்ட கடவுள் இப்போதும் காப்பார் என்ற நம்பிக்கை  அவர்களுள் ஒருவருக்கும் இல்லாமல் போனது . ஆண்டவரோ அவர்களுடைய நம்பிக்கையின்மையை பொருட்படுத்தாமல் தம் பணியாளர் மோசேயின் மூலம் செங்கடலைப் பிரித்து அவர்களை கடந்து வரச் செய்தார். எகிப்தியரோ கடலில் மாண்டனர்.

நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும்  தங்கள் மூதாதையரின் மனநிலையை அப்படியே பிரதிபலித்தனர். நம்பிக்கையின்மையின் காரணமாய் இயேசுவிடம் அடையாளம் கேட்டனர். நிச்சயமாக இயேசுவின் போதனைகளையும் அருஞ்செயல்களையும் அவர்கள் கேள்விப்பட்டிருப்பர். அவரால் குணமடைந்தவர்களைக் தம் கண்களால் நேரில் கண்டிருக்கவும் வாய்ப்புண்டு .இருப்பினும் அவர்கள் அடையாளம் தேடுகின்றனர்.

நம் மனநிலையை இப்போது நாம் அலசிப்பார்க்க வேண்டும்.கடவுளால் நம் வாழ்வில் எத்தனையோ நன்மைகள் நடந்திருக்கின்றது. ஆனால் துன்பமான நேரங்களில் அவற்றை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. மாறாக புலம்ப ஆரம்பிக்கின்றோம். கடவுளையும், சூழ்நிலையையும், பிறரையும் பழிக்க ஆரம்பிக்கின்றோம். மோசேயை மக்கள் பழித்தது போல நமக்கு ஆலோசனை கூறி வழிநடத்தியவர்கள் மேல் குற்றம் சுமத்தி பழிக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் ஒன்று தான். காக்கும் கடவுளை நாம் கைபிடிப்பதில்லை. நாம் துன்பத்தை ஏற்றுக்கொள்ளப் பழகுவதில்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடித் தீர்வை எதிர்பார்க்கிறோம்.
நமது வாழ்விலும் கடலைக் கடக்கின்றது போன்ற பிரச்சினைகள் ஏராளம் வர வாய்ப்புண்டு. எதற்கும் கலங்காமல் கடவுளின் கரம் பற்றி நடந்தால் நாம் கேட்காமலேயே அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் காணலாம். நம் கரத்தைக் கடவுளின் கரத்தோடு இணைக்கத் தயாரா?

இறைவேண்டல்
அன்பு இறைவா எம்மைக் காக்கும் கடவுளே எந்நிலையிலும் உம் கரம்பற்றி நடக்க வரம் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்