கடின உள்ளத்தைக் களைந்து மனிதநேயத்தைப் போற்றுவோமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம் 15 வாரம் வெள்ளி 
I: விப: 11: 10-12: 14
II: திபா: 116: 12-13. 15-16. 17-18
III: மத்: 12: 1-8

ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் வாழ்ந்தனர். ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் நன்மை செய்தவர். பிறருக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவர். ஆனால் மற்றொருவர் பிறர் நலம் இல்லாமல் சுயநலத்தோடு தவறுகளைச் செய்தவர். நன்றாக வாழ்ந்தவர் சுயநலத்தோடு வாழ்ந்த அந்த நபரை பார்த்து "உனக்கு சொர்க்கமே கிடையாது" என்று கடிந்துகொண்டார்.   இறுதியில் இருவரும் இறந்தனர். இறந்த பிறகு  சொர்க்கத்தில் இரண்டு நபர்களுமே சந்தித்தனர். மண்ணுலகத்தில் நல்லவராக வாழ்ந்த அந்த நபர் கடவுளிடம் "பாவியாகிய இவன் சொர்க்கத்திற்கு எப்படி வந்தான்? "என்று கேட்டார். அதற்கு கடவுள் பதிலாக "இவன் ஒரு முறை பசியால் மூன்று நாட்கள் வாடிக் கிடந்த முதியவருக்கு உணவளித்து அவரை பராமரிக்க முதியோர் இல்லத்தில் சேர்த்தார். இந்த நல்ல செயலை முன்னிட்டு தான் இவருக்கு சொர்க்க வாழ்வு வழங்கப்பட்டுள்ளது "என்று கூறினார்.

நம்முடைய அன்றாட வாழ்விலும் நாம் மனிதநேயத்தோடு நன்மைகள் பல செய்யும் பொழுது கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் அருளையும் நிச்சயமாகப் பெறமுடியும். ஆனால் பல வேளைகளில் நமது உள்ளம் கடினமுற்று இறுகி நம் அருகில் வாழும் சகோதர சகோதரியின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய மனமில்லாதவர்களாய் தான் நாம் வாழ்கிறோம்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் பணியினை விமர்சனப்படுத்தும் கூட்டத்தினை இயேசு கண்டிப்பதை பார்க்கிறோம். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் சட்டத்திற்கும் ஒழுங்கு முறைக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து மனித நேயத்தில் வாழத் தவறினர். தன்னோடு வாழ்கின்ற சகமனிதர்களின் பசி உணர்வைக் கூட புரிந்து கொள்ள இயலாத அளவுக்கு அவர்கள் உள்ளம் கடினப்பட்டிருந்தது. சீடர்கள் ஓய்வுநாளில் கதிர் கொய்ததை  விமர்சனப்படுத்தி குற்றம் சுமத்தினர். அவர்களைப் பொருத்தவரை மனித நேயத்தைவிட சட்டம் தான் பெரிது. 

இயேசு சட்டத்தை விட மனிதநேயம் தான் பெரிது  என்ற ஆழமான சிந்தனையை வழங்கியுள்ளார். எனவேதான் அவர் "பலியை அல்ல ; இரக்கத்தையே விரும்புகிறேன் " என்று கூறியுள்ளார். எனவே நம்முடைய   அன்றாட வாழ்வில் சட்டம் மற்றும் பலி போன்ற சமயக் கடமைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், மனிதத்திற்கும்  மனிதநேயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.  அப்பொழுது நம்மைப் படைத்த கடவுள் மகிழ்வார். மனித நேயத்தில் தான் உண்மையான புனிதமும் சமத்துவ வாழ்வும் இருக்கின்றது. அதன் வழியாக ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளை நம் வாழ்விலே வாழ்வாக்க முடியும்.  இயேசுவின் பாதையில் மனிதநேயத்தை போற்ற தயாரா?

இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா! நாங்கள் மனித நேயத்தில் புனிதம் காணும் நல்ல மனநிலையைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்