எளிமை வழியில் கடவுளைக் காண்போமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம் 15 வாரம் புதன் 
I: விப: 3: 1-6, 9-12
II: திபா: 103: 1-2. 3-4. 6-7
III: மத்: 11: 25-27

நமது கடவுள் எளிமையின் கடவுள். சிக்கலான இம்முழு பிரபஞ்சத்தை உருவாக்கியவரும் அவரே. அதே நேரத்தில்  எளிய ஒரு செல் உயிரை  உருவாக்கியவரும் அவரே. ஆனால் அவரது இதயம் எப்போதும் எளிமையானவைகளால்  எளிமையானவர்களால் ஈர்க்கப்படுகிறது.

அன்னை மரியா தம் புகழ் பாடலில் கடவுள் எளியோரையும் தாழ்மையுள்ளவர்களையும்  உயர்த்துவதாகக்  கூறுகிறார். திருவிவிலியத்தில் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும்   எளிமையானவர்கள் எவ்வாறு உயர்த்தப்பட்டார்கள் என்பதற்கு பல நிகழ்வுகளை நாம் காண்கிறோம். கடவுள் எப்போதும் எளிய மனிதர்களால் ஈர்க்கப்பட்டார். எளிய நம்பிக்கையுள்ள  ஆபிரகாம், ஆடுமேய்க்கும் சிறுவன் தாவீது எஸ்தர், ரூத்து, இறைவாக்கினர் ஆமோஸ் ஆகியோர் இதற்கு மிகச்சிறந்த  உதாரணம். இயேசுவின் சீடர்களிடையே  எளிய மற்றும் படிப்பறிவில்லாத மீனவர்களைக் காணலாம். அம்மீனவரில் ஒருவரையே அவர் திருஅவைத் தலைவராக உயர்த்தினார். இயேசுவின் போதனைகளும் கூட சாதாரண சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் மிக மிக எளிமையாக அமைந்ததை நாம் அறிவோமன்றோ.

இன்றைய நற்செய்தியில், விண்ணகத் தந்தை தன்னை எளிமையான தாழ்மையான குழந்தைகள் போன்ற உள்ளம் கொண்ட சீடர்களுக்கு தன் மூலம்  வெளிப்படுத்தியதற்காகப் இயேசு தந்தைக்கு நன்றி கூறுகிறார். எத்தனையோ படிப்பறிவுடைய பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் அவரை கடவுனின் மகனாக ஏற்றுக்கொள்ளாத போதும், சீடர்கள்  இயேசுவை கடவுளின் மகனாக மெசியாவாக ஏற்றுக்கொண்டு அவரை நம்பி, அவருடைய வார்த்தைகளைக் கேட்டுப் பின்தொடர்ந்தார்கள். எனவே அவர்களுக்காக இயேசு தந்தையைப் புகழ்கிறார்.

எளிமை என்பது தரமும் மதிப்பும் குறைந்த உடையணிந்து, படிப்பறிவின்றி, சமுதாயத்தில் உயர்வாக எண்ணப்படாத  வேலைகளைச்  செய்தல் அல்ல.  அது ஒரு அணுகுமுறை. நாம் அணிந்து கொள்ள வேண்டிய அணிகலன் அது.  கடவுள் முன்னும் பிறர் முன்னும் எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கு இன்றி எளியவர்களாய் இருந்தால் அவர் நம்மிடம் தன்னை நிச்சயமாக வெளிப்படுத்துவார். ஒரு குழந்தையைப் போல எளிய மனப்பான்மையை நாமும் அணிந்தால், கடவுளை நம் பக்கம் ஈர்ப்போம் என்பதில் சந்தேகமில்லை. எளிய வாழ்வின் மூலம் கடவுளின் அருளையும் ஞானத்தையும் பெற முயற்சி செய்வோம்.

 இறைவேண்டல்
 எளிமையின் கடவுளே, எளியவராய் வாழ்ந்து வாழ்வில் உயர எங்களுக்கு உமது அருளைத் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்