நலம் வேண்டுமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம் 12 வாரம் வெள்ளி 
I: 2 அர: 25: 1-12
II: திபா 137: 1-2. 3. 4-5. 6 . 
III:மத்: 8: 1-4

நாம் வாழும் இந்த உலகத்தில் நலமோடு வாழ வேண்டும் என்று நாம் அனைவருமே  விரும்புகின்றோம். ஆனால் முழுமையான நலத்தை நம்மால் பெற முடிவதில்லை. இதற்கு முக்கியக் காரணம் நாம் நலம் பெறுகிறோம் என்பதை நம்பாததேயாகும். நம்முடைய வாழ்வில் உடல் மன நலம் கிடைக்க வேண்டுமெனில் அது நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு ஊரிலே இரண்டு நபர்கள் கொரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இருவருக்குமே இறைப்பற்று இருந்தது. ஆனால் ஒருவர் நிச்சயமாக தனக்கு நலம் கிடைக்கும் என்று கடவுள் மீது நம்பிக்கை வைத்து சிகிச்சை பெற்றார். மற்றொருவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டாலும் இந்த நோயிலிருந்து என்னால் எப்படி விடுதலைப் பெற முடியும். எனக்கு பல நோய்கள் இருக்கின்றது என்று அவநம்பிக்கையோடு  சிகிச்சையை மேற்கொண்டார். இறுதியில் நம்பிக்கையோடு நலம் கிடைக்கும் என்று நினைத்தவர் முழுமையான நலத்தைப் பெற்றார். அவநம்பிக்கையோடு சிகிச்சை பெற்றவர் முழுமையான நலத்தை பெற முடியாமல் தன் வாழ்வை இழக்க நேரிட்டது.

நம்முடைய வாழ்விலும் நலம் பெறுவதும் பெறாதது நம்மைப் பொருத்து தான் இருக்கின்றது. நம்முடைய நேர்மறை சிந்தனைகளும் நம்பிக்கை நிறை முயற்சிகளும் தான் நமக்கு முழுமையான நலத்தைக் கொடுக்க முடியும். இன்றைய நற்செய்தி வாசகம் அதற்கு முன்னுதாரணமாக இருக்கின்றது. இயேசு மலையிலிருந்து இறங்கி வந்த பிறகு எண்ணற்ற மக்கள் இயேசுவிடம் வந்தனர். இதற்குக் காரணம் இயேசுவின் போதனைகளும் செயல்களும் அவர்களுக்கு நலம் அளிக்கக் கூடியதாக இருந்தது. இந்த நம்பிக்கையில்தான் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் நலம் பெற வேண்டும் என விரும்பினார். " ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்று தொழுநோயாளர் இயேசுவிடம் நம்பிக்கையோடு கேட்டார். அதற்கு இயேசு தொழுநோயாளரிடம் "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!'' என்று கூறினார். தொழுநோயாளரும் நலம் பெற்றார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் தொழு நோயாளர்கள் சமூகத்தில் தீண்டப்படாதவர்களாகக் கருதப்பட்டனர். தொழுநோயாளரும் மக்கள் வாழும் இடங்களில் வருவதற்கு மோசேயின் சட்டத்தின்படி அனுமதிக்கப்படுவதில்லை. இருந்தபோதிலும் மனத்துணிவோடும் இறைநம்பிக்கையோடும் இயேசு தனக்கு நலம் அளிப்பார் என்ற நம்பிக்கையோடு அவர் நலம் பெற்றார்.  நம்முடைய அன்றாட வாழ்விலும் இயேசுவிடம் நலம் பெற்ற அந்த தொழுநோயாளரைப்போல நாமும் நலம் பெற நம்பிக்கையோடு இயேசுவிடம் வருவோம். நம்பிக்கையோடு இயேசுவிடம் வருவதற்கு நாம் பற்பல முயற்சிகள் செய்ய வேண்டும். அவ்வாறு முயற்சிகள் செய்தோமெனில் நிச்சயமாக நலம் பெற முடியும். எனவே நலம் பெறுவதற்குத் தேவையான நேர்மறை சிந்தனைகளையும் நல்ல எண்ணங்களையும் நமதாக்க முயற்சி செய்வோம். அப்பொழுது நிச்சயமாக கடவுளின் அருளும் ஆசீரும் நலவாழ்வும் நமக்கு உண்டு. நலம் பெறத் தயாரா?

இறைவேண்டல் :
நலமளிக்கும் அன்பு இயேசுவே! எங்கள் வாழ்வில் உடல் மன நலமில்லாமல் இருள் நிறைந்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களுடைய நல்ல சிந்தனைகள் வழியாகவும் நேர்மறை எண்ணங்களின் வழியாகவும் இறைநம்பிக்கையின் வழியாகவும் உடல் மன நலம் பெறத் தேவையான அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்