விவேகமும் ஞானமும் நமது சீடத்துவத்தின் இரு கண்கள்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

1 ஜூன் மே 2024  

பொதுக்காலம் 8ஆம் வாரம் -சனி

யூதா 17: 20-25

மாற்கு 11: 27-33
    

முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகத்தில், கிறிஸ்தவ வாழ்வுக்கான  சில பண்புக்கூறுகளைத் திருத்தூதர் யூதா பட்டியலிட்டுள்ளார்.   முதலில், புனித யூதா நம்மிடம் இருக்க வேண்டிய சில அணுகுமுறைகளை முன்வைக்கிறார்.   தூய்மைமிகு விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு இறைமக்கள் தங்களது வாழ்வைக் கட்டி எழுப்ப வேண்டும் என்றும், தூய ஆவியின் துணையுடன் வேண்டுதல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.  

தொடர்ந்து, இறைமக்கள் கடவுளது அன்பில் நிலைத்திருக்கவும் நிலைவாழ்வுக்காக  இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை எதிர்பார்த்திருக்கவும், இயேசுவில் நம்பிக்கை வைக்கத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டவும் அழைக்கின்றார்.    

நிறைவாக, இறைமக்கள்  தூய   ஆவியானவருடன் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்யவும், நம்முடன் உறவு கொள்ள விரும்பும் கடவுளிடமிருந்து வரும் உறவு  பற்றி சிந்திக்கவும்,  மற்றவர்களுடனான நமது உறவை வலுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும்  யூதா தம் திருமுகத்தில் அறிவுறுத்துகிறார். 

 
நற்செய்தி.

நற்செய்தியில் இயேசு கோவிலில் இருந்த வேளையில் அவரை சோதிக்கும் தீய எண்ணதுடன்  தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் அவரிடம் வந்து,  எந்த அதிகாரத்தால் அவர் செயல்படுகிறார் என்றும், அவருக்கு   அதிகாரம் கொடுத்தவர் யார்?  என்றும் கேட்டு, இயேசுவை மடக்கினர்.  

இயேசு அவர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? என்றார்.  அவர்களால் இயேசுவின் கேள்விக்கு நேரடி பதில் தர இயலாமல் திக்குமுக்காடினர்.  ஏனெனில் திருமுழுக்கு யோவான் அருளிய திருமுழுக்குக் கடவுளிடருந்து வந்தது என்றால், ‘ஏன் நீங்கள் அவரை ஏற்கவில்லை?’ என்று இயேசு அடுத்தக் கெள்வி கேட்பார் என்பது அவர்களுக்குத் தெரநும். 

எனவே,  மக்களின் முன்னிலையில்  தங்கள் நிலையைப் பணயம் வைக்காமல்  “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள்.


சிந்தனைக்கு.

தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் மற்றும் மூப்பர்கள் ஆலயப் பகுதியில் இயேசுவை அணுகி, அவர் எந்த அதிகாரத்தால் அவர் செயல்படுகிறார் என்று கேட்கிறார்கள். அது ஒருவகையில் நியாயமான கேள்விதான். இந்நிகழ்வுக்கு முந்தைய நாள், இயேசு எருசலேம் ஆலயத்தில்  இருந்தபோது, ஆலய வளாகத்தில் வணிகம் செய்வோரை வெளியேற்றி, “‘என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால், நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்”  என்றும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டி விரட்டியடித்தார்.  இது ஆலய வளாகத்தில் நடைபெற்ற  வணிகத்தால் கொள்ளை இலாபம் அடைந்த மதத் தலைவர்களைக் கோபப்படுத்தியது. அவர்கள் உடனடியாக இயேசுவை எப்படிக் கொல்லலாம் என்று விவாதிக்க ஆரம்பித்தார்கள்.

இயேசுவோ,  அவர்களிடம் கேட்ட கேள்வியின் வழி அவர்கள்  மனந்திரும்புவதற்கு  வாய்ப்பளித்தார். அவருடைய கேள்விக்கு   பணிவான நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் அவர்கள் பதிலளித்திருந்தால்  நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால், அவர்களது பதில் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைத்தாற் போல் இருந்தது.  

மக்கள் அனைவரும் திருமுழுக்கு யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள். எனவே, தங்களுக்ககுத் தெரியாது என்று பதில் அளித்து தப்பிக்க முயன்றனர்.  

விதண்டாவாதத்திற்கு விதண்டாவாதமே தீர்வு என்பதுபோல், இயேசு யூதர்கள் கேட்ட கேள்விக்கு எதிர் கேள்விக்கேட்டு  அவர்களின்  வாயடைக்கின்றார். இயேசு அவர்களிடம் அவ்வாறு குறுக்குக் கேள்வி கேட்டிராவிடில், அவர்களது கை ஓங்கியிருக்கும். மாறாக, அவர்கள் தங்களைத் தாழ்த்திக் கொண்டு, யோவான் வழங்கிய திருமுழுக்குக் கடவுளிடமிருந்து வந்தது என்பதை  மனம் திறந்து ஒப்புக்கொண்டிருந்தால், இயேசு அவர்களுடைய கேள்விக்குப் பதிலளித்திருப்பார்.  அவர்களால் உண்மையை  ஒப்புக்கொள்ள முடியவில்லை.  

பல சந்தர்ப்பங்களில் நாமும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளைச் சாதிக்க நேரிடுவதுண்டு.  அச்சூழலில்  நாம் எவ்வாறு ஞானத்தோடும் விவேகத்துடனும் நடந்துகொள்ளவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்துச் செயல்படுவது புத்திசாலிதனமாகும்  

முதல் வாசகத்தில், உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள் என்று யூதா அறிவுரை கூறியதை நினைவில் கொள்வோம். ‘Rome was not built in a day‘ என்பார்கள். ஆம், உரோமை மாநகர் ஒரு நாளில் கட்டப்பட்டதல்ல. அவ்வாறே, கிறிஸ்தவ வாழ்வுமாகும். கிறிஸ்தவ வாழ்க்கைப் பயணம்   முற்றிலும் சவாலுக்குரியது. தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் போன்று பலர் நமது நம்பிக்கை வாழ்வைச் சீரழிக்க படையெடுப்பர். இயேசுவைப் போல் அத்தகையோரின் எதிர் நடவடிக்கையை தடுத்து நிறுத்த விவேகமாகச் செயல்பட வேண்டும். இல்லையேல் நமது வாழ்வு சீரழியும்.

நம் ஆண்டவர் இயேசு கொண்ட அதிகாரம் விண்ணகத்தைச் சேர்ந்தது. அந்த அதிகாரத்திற்குத் தலைவணங்கும் மக்கள் என்றும்  வாழ்வர். அதே அதிகராம் திருஅவைக்கு வழங்கியுள்ளார் ஆண்டவர். “எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” (யோவான் 20:23) என்று அன்று தம் திருத்தூதர்களுக்குச் சொன்னது திருஅவைக்குமானது. 

விவேகமும் நமக்கு கடவுள் அருளிய கொடை. ஆகவே, இயேசுவின் சீடர்களாகிய நாம் அவரைப் போன்று நமது பணிவாழ்வில் விவேகமுள்ள ஊழியர்களாக வாழ்வோம். சாத்தான் நமது நம்பிக்கை வாழ்விலிருந்து பிறழச் செய்ய வலைவிரித்த வண்ணம் உள்ளான். ஞானமின்றியும் விவேகமின்றியும் நாம் அனைத்துக்கும் செவிசாய்த்தால் பொய் உண்மையாகவும், உண்மை பொய்யாகவும்  தெரியும். அது நம்மை வழி பிறழச் செய்யும்.  
 
இறைவேண்டல்.


‘பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாக இருங்கள்’ என்று பணித்த ஆண்டவரே, எனது வாழ்வில் உம் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து, உம்மையே பற்றி வாழும் வாழ்வை நான் என்றும் கொண்டிட அருள்புரிவீராக. ஆமென்


    
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452