அகம்பாவம் நம்மையே அழிக்கும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
14 மார்ச் 2026, சனி
தவக்காலம் மூன்றாம் வாரம் – சனி
ஓசேயா 6: 1-6
லூக்கா 18: 9-14
அகம்பாவம் நம்மையே அழிக்கும்!
முதல் வாசகம்.
இந்தப் பகுதி உண்மையான மனந்திரும்புதலுடன் கடவுளிடம் திரும்புவதற்கான அழைப்பாகும். ஓசேயா இறைவாக்கினர் இஸ்ரயேல் மக்களை ஆண்டவரிடம் திரும்ப அழைக்கிறார்.
வாசகத்தின் தொடக்கத்திலேயே, “வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார்” என்ற உறுதிமொழியோடு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார்.
மக்கள் தாங்கள அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணம் அவர்களது பாவங்கள் என்று வாழ்கிறார்கள். ஆனால் கடவுள் அவர்களை அழிக்க தண்டிக்கவில்லை, மாறாக அவர்களை மீண்டும் தன்னிடம் கொண்டு வருவதற்காகவே தண்டிக்கிறார். அவர்கள் மனந்திரும்பும்போது, கடவுள் அவர்களை குணப்படுத்தவும் மீட்டெடுக்கவும் தயாராக இருக்கிறார் என்பதை ஓசேயா எடுத்துரைக்கிறார்.
‘அவர், இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பிவிடுவார்’ என்று கூறுவதானது, அவர் புதுப்பித்தலுக்கான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் என்றும், மக்கள் கடவுளிடம் திரும்பும்போது, அவர் அவர்களுக்குப் புதிய வாழ்க்கையைத் தருகிறார் என்றும், மூன்றாம் நாளில் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நோக்கிச் செல்லும் ஆழமான பொருளும் இங்கே முன்னறிவிக்கப்படுகிறது.
நற்செய்தி.
தங்களை நீதிமான்கள் என்று நம்பி மற்றவர்களை இழிவாகப் பார்த்த மக்களுக்கு, இயேசு ஓர் உவமையைச் சொல்கிறார், இருவர் இறைவேண்டலுக்காக கோவிலுக்குச் செல்கிறார்கள்:
ஒரு பரிசேயர் (ஒரு மதத் தலைவர்) மற்றொருவர் வரி வசூலிப்பவர் (யூத சமுதாயத்தில் ஒரு பொதுப் பாவியாகக் கருதப்படுகிறார்) கடவுளுக்கு முன்பாக அவர்களின் அணுகுமுறைகள் மிகவும் வேறுபட்டவையாக உள்ளன.
2. பரிசேயரின் இறைவேண்டல்.
பேராசை பிடித்தவர்கள், அநீதியானவர்கள், விபச்சாரம் செய்பவர்கள் அல்லது வரி வசூலிப்பவர் போன்ற மற்றவர்களைப் போல இல்லாததற்கு பரிசேயர் கடவுளுக்கு நன்றி கூறுகிறார். அவர் தனது சமய பின்பற்றுதல்களைப் பட்டியலிடுகிறார்: வாரத்திற்கு இரண்டு முறை நோன்பு இருத்தல், கட்டளைப்படி காணிக்கை செலுத்துதல் போன்றவையாகும். ஆனால் அவரது இறைவேண்டலில் தற்பெருமை அதிகாகவே வெளிப்பட்டது. அவர் உண்மையில் கடவுளிடம் பேசவில்லை; அவர் தன்னைப் புகழ்ந்து மற்றவர்களைத் தாழ்த்திப் பேசுகிறார்.
3. வரி வசூலிப்பவரின் இறைவேண்டல்.
வரி வசூலிப்பவர் தொலைவில் நின்று, வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்தாமல், தம் மார்பில் அடித்துக் கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்றார்.” இவரது இறைவேண்டலில் ‘மனத்தாழ்மை’ வெளிப்பட்டது.
சிந்தனைக்கு.
இந்த நற்செய்தி மூன்று முக்கியமான பாடங்களைக் கற்பிக்கிறது:
1. கடவுள் வெளிப்புற மதச் செயல்களைப் பார்க்காமல், இதயத்தைப் பார்க்கிறார்.
சமய நடைமுறைகள் நல்லது, ஆனால் மனத்தாழ்மை இல்லாமல் அவை பொருளற்றவை.
2. தற்பெருமை நம்மை கடவுளிடமிருந்து பிரிக்கிறது.
நாம் மற்றவர்களை விட சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்று நினைத்துப் பிறரைத் தாழ்த்துவது நம் இதயங்களை இருளாக்குகிறது.
3. பணிவு மற்றும் மனந்திரும்புதல் கடவுளின் அருளை மீட்டுத் தருகிறது.
இந்த தவக்காலப் பயணமானது, நம்மை வரி வசூலிப்பவரைப் போல இறைவேண்டல் செய்ய அழைக்கிறது.
வரி வசூலிப்பவரைப் போல மிகவும் பாவம் செய்பவர் கூட, மனத்தாழ்மையால் அவரது இதயம் தூய்மைப்பெறும் போது கடவுளின் அருளால் அவர் மீட்கப்படுகிறார். மறுபுறம், தற்பெருமையோ அழிவுக்கு வழிவகுக்கிறது. ஆம் நமது வாழ்க்கையில் தற்பெருமை, ஆணவம், அகம்பாவம் குடிகொள்ளும்போது, நமது ஆன்மாவால் ஒருபோதும் கடவுளின் தூய்மையான மற்றும் புனிதத்தைப் பிரதிபலிக்க இயலாது.
ஆலயத்தில் இறைவேண்டல் செய்வது ஒரு நல்ல மற்றும் பக்திமிக்க செயல். பரிசேயரும் வரி வசூலிப்பவரும் இதைச் செய்தார்கள். இருப்பினும், அகம்பாவம், தற்பெருமை மற்றும் ஆணவத்தால் சிதைக்கப்பட்ட இறைவேண்டல் கடவுளுக்கு ஏற்றதாக அமையாது. வரி வசூலிப்பவரின் இறைவேண்டலை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கொண்டு, "இறைவா, ஒரு பாவியான என் மீது இரக்கமாயிரும்’ என்று வேண்டுவதை நமது இயல்பான இறைவேண்டலாகக் கொள்வோம். ஏனெனில், ஆண்டவர், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என்று நமக்குத் தெளிவுப்படுத்துகிறார்.
நம் கடவுள் இரக்கமுள்ளவர். அவருடைய அருளை முழுமையாகச் சார்ந்திருப்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போதுதான், வரி வசூலிப்பவரைப் போல, நமது இறைவேண்டலுக்கு பலன் கிட்டும் என்பதை நினைவில் கொள்வோம். ‘நான்’ என்கிற அகம்பாவம், ‘எனக்கு’ என்கிற பேராசை நம்மை நிம்மதியாக வாழவிடாது.
இறைவேண்டல்.
மிகவும் இரக்கமுள்ள ஆண்டவரே, என்னை மனத்தாழ்மையால் நிரப்புவீராக. இதனால் நான் என்னைப் பற்றிய உண்மையை அறிந்து, உமது ஞானத்தால் விடுதலை பெறுவேன். ஆமென.
ஆர். கே. சாமி (மலேசியா)
+6 0122285452