அறிந்த இயேசுவை ஏற்போம், அறிவிப்போம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

4 பிப்ரவரி 2026,  
பொதுக்காலம் 4-ஆம் வாரம் – புதன்

2 சாமுவேல் 24: 2, 9-17
மாற்கு 6: 1-6

அறிந்த இயேசுவை ஏற்போம், அறிவிப்போம்!
 
முதல் வாசகம்.

இஸ்ரயேலிலும் யூதாவிலும் போர் வீரர்களைக் கணக்கிட தாவீது அரசர் கட்டளையிடுகிறார். அவர் தனது படைத் தளபதியான யோவாபிடம், எத்தனை வீரர்கள் உள்ளனர் என்பதை அறிய "போர் வீரர்களைக் கணக்கிட  கட்டளைப் பிறப்பிக்கிறார். கணக்கெடுப்பின்படி இஸ்ரயேலில் 800,000   வீரர்களும், யூதாவில் 500,000 ஆயுதங்களைத் தாங்கி வீரர்களும்  இருப்பதாக யோவாப் தெரிவிக்கிறார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததும், தாவீது கடவுளில் நம்பிக்கை வைக்காமல், மனித வலிமை மற்றும் போர் வீரர்கள் எண்ணிக்கையை நம்புவதன் மூலம், தான் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்ததாக தாவீதின் மனசாட்சி அவரைத் தொந்தரவு செய்கிறது. அவர் கடவுளுக்கு முன்பாக தனது தவறை ஒப்புக்கொண்டு, "நான் மிகவும் பாவம் செய்தேன்" என்று கெஞ்சுகிறார், கடவுளிடம் தனது பாவத்தின் குற்றத்தை நீக்கும்படி கேட்கிறார்.

அப்போது, கடவுள் தாவீதின் பாவத்திற்குப்  பரிகாரமாக,    மூன்று தண்டனைகளில் ஒன்றைத் தேர்வுச் செய்யுமாறு  இறைவாக்கிறனர் காது என்ற இறைவாக்கினர் மூலம் தாவீதுக்குத் தெரியப்படுத்துகிறார்.  
1.    நாட்டில்   ஏழு ஆண்டுகள் பஞ்சம், அல்லது
2.    தாவீதின்  எதிரிகள் அவரைப் பின்தொடர, மூன்று மாதங்கள் அவர் தப்பியோட வேண்டும் அல்லது
3.    நாட்டில் மூன்று நாள்கள் கொள்ளை நோய் ஏற்பட வேண்டும். 

எதிரிகளிடம் சரண்அடைவதைவிட   தாவீது ஆண்டவரனின் கைகளில் விழத் தேர்வு செய்கிறார். அதன்படி, ஒரு கொள்ளைநோய் இஸ்ரயேலைத் தாக்கி, பேரழிவை ஏற்படுத்துகிறது. கொள்ளைநோய் நாட்டை நாசமாக்கி, பலரைக் கொன்று குவித்தபோது, தாவிது கடவுளைப் பார்த்து, “பாவம் செய்தவன் நான்தானே?  தீச்செயல் புரிந்தவன் நான்தானே? இந்த மக்கள் என்ன குற்றம் புரிந்தார்கள்? இப்போது உம் கை என்னையும் என் தந்தையின் வீட்டாரை மட்டும்  வதைப்பதாக!” என்று கூறி மன்றாடினார். 
 
நற்செய்தி.

இந்த நற்செய்தியில், இயேசு தம்முடைய சீடர்களுடன் தாம் வளர்ந்த ஊரான நாசரேத்துக்குத் திரும்புகிறார். அன்று ஓய்வுநாளில் அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கிறார். முதலில், மக்கள் அவருடைய போதனையையும் அவர் வெளிப்படுத்தும் ஞானத்தையும் கண்டு வியப்படைகிறார்கள். ஆனால் விரைவில் அவர்களின் பாராட்டு சந்தேகமாகவும் நிராகரிப்பாகவும் மாறுகிறது.  அவர்கள் அவரை பின்வருமாறு நினைத்துப் பார்க்கிறார்கள்:

1.    அவர் ஒரு தச்சர்.
2.    மரியாவின் மகன்.
3.    அவருடைய குடும்பத்தினரையும் உறவினர்களையும் அவர்கள் அறிவார்கள்.
இக்காரணங்களுக்காக  அவர்கள் அவரை ஏற்க மறுக்கிறார்கள். மேலும் அவர்களால் சாதாரணமாகக் காணும் இயேசுவை ஓர இறைவாக்கினராகவும் ஏற்க முடியவில்லை. இயேசு அவர்களிடம், “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்று பதிலளிக்கிறார்.

சிந்தனைக்கு.

காலம் காலமாக, வரவிருக்கும் மெசியா  சக்திவாய்ந்தவராக, வியத்தகு முறையில் குறிப்பிடத்தக்கவராக, ஓர் அரசராக இருப்பார் என்று   யூதர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இயேசு எளிமையானவராக, பணிவானவராக வந்தார். அவர் அவர்களின் எதிர்பார்ப்புகளின் படி இல்லாதபோது,  இயேசுவில் நம்பிக்கை இழந்தனர். 

இயேசு எளிமையானவராக, பணிவானவராக, தாழச்சியின் உருவாக  வந்தார். அவர் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதபோது, அவர்களின் இதயங்கள் மூடிக்கொண்டன.
 
அற்புதங்களும் அடையாளங்களும் தெய்வீக சக்தியைப் பற்றியது மட்டுமல்ல - அவற்றுக்கு ஏற்றுக்கொள்ளும் இதயங்களும் தேவை என்பதை நற்செய்தி எடுத்துக்காட்டுகிறது. நாசரேத்தில் அவநம்பிக்கை காரணமாக, இயேசுவும் அவரது நற்செய்ல்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 

ஆம், இன்றைய நற்செய்தி நம்மை இயேசுவைப் பற்றிய நமது சொந்த மனப்பான்மையை ஆராய அழைக்கிறது. கடவுள் சில அற்புதமான வழிகளில் மட்டுமே செயல்படுவார் என்று நாம் எதிர்பாரப்பது தவறு. அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றி நிகழ்வனவற்றில் கடவுளைக் காண நாம் முற்படுகிறோமா?  அல்லது நாசரேத்து ஊர் மக்களைப்போன்று மகத்தான, ஆடம்பர மீட்பராக இயேசுவைக் காண விரும்புகிறோமா?

முதல் வாசகத்தில், தனது குற்றங்களுக்காகக் கடவுளிடமிருந்து  தண்தடனையை ஏற்கும் அளவுக்கு தாவீது அரசர் தன்னைத் தாழ்த்திக்கொண்டு, கடவுளின் பாதங்களில் சரண்டைந்தார். நற்செய்தியில் நாசரேத்து மக்கள் தங்களை மேலானவர்காளகக் கருதி  இயேசுவின் போதனையை நிராகரித்தனர்.

எளிமை, ஏழ்மை, தாழ்ச்சி இவற்றில் நாம் இயேசுவைக் காண அழைக்கப்படுகிறோம். அவரது பிறப்பும், வளர்ப்பும், வாழ்வும், இறப்பும் எளிமை, ஏழ்மை, தாழ்ச்சி இவற்றில மையம் கொண்டவை. இவை அற்ற சீடத்துவம் மடமையாகும். 
 
இறைவேண்டல்.

ஆண்டவரே, என்னைச் சுற்றி நிகழ்வனவற்றில் உம்மைக் கண்டுணர எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.


ஆர்கே. சாமி (மலேசியா)
 +6 0122285452