அவநம்பிக்கை இறையருளைத் தடுக்கும்! | நமக்கான வடிவமைப்பும் தீர்ப்பளிப்பும் அவரது தயவு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 17ஆம் வாரம் – வெள்ளி
எரேமியா 26: 1-9
மத்தேயு 13: 54-58

அவநம்பிக்கை இறையருளைத் தடுக்கும்!

முதல் வாசகம்.

இன்றைய வாசகப் பகுதியில், நேற்றைய தொடர்ச்சியாக, இறைவாக்கினர்
எரேமியா, ஆண்டவரின் கட்டளையின்படி ஆலயத்தின் முற்றத்தில் நின்று,
யூதா மக்களிடம் இறைவார்த்தையை அறிவிக்கிறார். அவர்கள் தங்கள் தீய
வழிகளிலிருந்து மனந்திரும்பி, இறைவனின் கட்டளைகளின்படி வாழ
வேண்டும் என்றும், இல்லையெனில், இறைவனின் தீர்ப்பு அவர்கள்மேல்
வரும் என்று வலியுறுத்துகிறார். மனம் திரும்பீவிடில், “இக்கோவிலைச்
சீலோவைப்போல் ஆக்குவேன்; இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார்
நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன்" என்ற இறைவனின் செய்தியை
வெளிப்படுத்துகிறார்.
ஆனால், எரேமியா கூறிய வார்த்தைகளைக் கேட்ட குருக்கள்,
இறைவாக்கினர்கள் மற்றும் மக்கள் அனைவரும் அவருக்கு எதிராக
எழுந்து, “இந்த ஆலயம் அழிக்கப்படும் என்று ஏன் இறைவாக்கு
உரைத்தாய்?” என்று குற்றம் சாட்டி அவரை அச்சுறுத்துகின்றனர்.

நற்செய்தி.

இயேசு தமது சொந்த ஊரான நாசரேத்திற்குச் சென்று, அங்குள்ள
தொழுகைக்கூடத்தில் மக்களுக்குப் போதித்தார். அவருடைய
ஞானத்தையும் வல்லமையையும் கண்டு மக்கள் வியந்தனர். ஆனால்,
“இவர் தச்சரின் மகன் அல்லவா? இவருடைய குடும்பத்தினரை நமக்குத்
தெரியும் அல்லவா?” என்று கூறி, அவரை ஏற்றுக்கொள்ளாமல் இடறினர்.
இயேசு, “ஒரு இறைவாக்கினர் தம் சொந்த ஊரிலும் தம் வீட்டிலும் தவிர
வேறு எங்கும் மதிப்பின்றி இருப்பதில்லை” என்று கூறினார்.
அவர்களுடைய நம்பிக்கையின்மையினால் அங்கே பல வல்ல
செயல்களைச் செய்யவில்லை என்பதை மத்தேயு விவரிக்கிறார்.

சிந்தனைக்கு.

இன்றைய இரு வாசகங்களையும் ஒருமித்து வாசித்து, சிந்தித்தால் நம்மில்
நாம் கொண்டுள்ள இரட்டை வாழ்க்கைப் புலப்படும்.
இறைவாக்கினர் எரேமியாவிடம் ஆண்டவர் கூறுகிறார்: “நான் உனக்குக்
கட்டளையிட்ட அனைத்தையும் அவர்களிடம் சொல்; ஒரு
வார்த்தையையும் விட்டுவிடாதே” என்கிறார். எரேமியா மக்களிடம்
உண்மையை எடுத்துரைக்கிறார். ஆனால் மக்கள் அந்த உண்மையை
ஏற்றுக்கொள்ளாமல் அவருக்கு எதிராகத் திரும்புகின்றனர்.

நற்செய்தியிலோ, நற்செய்தியாளர் மத்தேயு, இயேசு தாம் வளரந்து
ஆளான ஊரான நாசரேத்தில் அனுபவித்த வேதனையான நிராகரிப்பை
எடுத்துரைக்கிறார். அதேவேளையில், அவர் இன்று, நாசரேத்து மக்களில்
நம்மையே நாம் காண அழைக்கப்புவிடுக்கிறார்.

இயேசு தமது சொந்த ஊரான நாசரேத்துக்குச் சென்று, மக்களுக்குப்
போதிக்கிறார். அவர்கள் வியப்படைந்தாலும், அவரது ஞானத்தையும்
வல்லமையையும் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். “இவர் தச்சருடைய
மகன் அல்லவா?” என்று கூறி, அவரை விரட்டுகிறார்கள்.

நாசரேத்து மக்கள் இயேசுவை அறிந்திருந்தார்கள்; ஆனால் அவரை
இறைவனின் மகனாக அறிந்துகொள்ளவில்லை. அவருடைய
குடும்பத்தையும் தொழிலையும் அறிந்திருந்தார்கள்; ஆனால் அவருடைய
தெய்வீக அழைப்பை உணரவில்லை. அவர்களுடைய “சிற்றறிவு”
அவர்களுடைய “நம்பிக்கைக்கு” தடையாக ஓங்கி நின்றது.

நம்முடைய வாழ்க்கையிலும் இதே நிலை ஏற்படலாம். “இவரை எனக்கு
நன்றாகத் தெரியும்; இவர் இப்படித்தான்” என்று ஒருவரைப் பற்றிய
பழைய எண்ணத்திலேயே நாம் அவரை மதிப்பிடுகிறோமு என்றால்
மிகையாகாது. மேலும், இயேசுவுக்கான நிராகரிப்பு நமக்கு ஒரு பெரும்
சவாலை முன்வைக்கிறது: உண்மையைச் சொல்வது எப்போதும்
எளிதல்ல. இறைவனின் வார்த்தையை அறிவிப்பவர் அனைவராலும்
பாராட்டப்படமாட்டார் என்பது தெளிவாகிறது. அவர் சொந்த ஊரில்
பாரட்டுப்பெற மாட்டார்.

இயேசுவை நாசரேத்து மக்கள் தங்களுடைய பழைய பார்வையால்
பார்த்தார்கள். நாம் அவரை நம்பிக்கையின் கண்களால் பார்க்க
அழைக்கப்படுகிறோம். நாசரேத்து மக்களைப் போலவே, நாமும் நமக்குப்
பழக்கமானவற்றையே பற்றிக்கொண்டு, கிறிஸ்து நம்முள் நிகழ்த்த
விரும்பும் ஆழமான மாற்றத்தை எதிர்க்கக்கூடும்.

காலத்தின் அறிகுறிகளை ஆய்தறிய வேண்டும். ‘நாசரேத்து மக்களைப்
போலவே, நாமும் நமக்குப் பழக்கமானவற்றையே பற்றிக்கொண்டு,
கிறிஸ்து நம்முள் நிகழ்த்த விரும்பும் ஆழமான மாற்றத்தை
எதிர்க்கக்கூடும். நா “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்”
(திவெ 21:5) எனும் ஆண்டவரின் குரலுக்கு ஏற்ப நம்மை புதுப்பிக்க
வேண்டும். பத்தோடு பதினொன்று என்பதல்ல நமது வாழ்க்கை.

இறைவேண்டும்.

ஆண்டவரே, எரேமியாவைப் போல உண்மையைப் பேசும் துணிவையும்,
நாசரேத்து மக்களைப் போல அல்லாமல் உமது செயல்களைத் திறந்த
மனதுடன் ஏற்றுக்கொள்ளும் பணிவையும் எனக்கு அருள்வீராக. ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452

Tamil Survey Popup Image