நீதிக்காக துன்பத்தை ஏற்பது சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 17ஆம் வாரம் – சனி
எரேமியா 26: 11-16, 24
மத்தேயு 14: 1-12
நீதிக்காக துன்பத்தை ஏற்பது சீடத்துவம்!
முதல் வாசகம்.
எரேமியா இறைவனின் வார்த்தையைத் துணிவுடன் அறிவித்ததற்காக
குருக்களும் பொய் இறைவாக்கினர்குளும் அவருக்கு மரண தண்டனை
கோருகின்றனர். ஆனால் எரேமியா, "ஆண்டவர் என்னை
அனுப்பியுள்ளார்; நீங்கள் மனந்திரும்பாவிட்டால் தீர்ப்பு வரும்" என்று
உறுதியாக அறிவிக்கிறார். மேலும், அவரைக் கொன்றால் அவரது
குற்றமற்ற இரத்தத்தின் பழி மக்கள்மேல் வரும் என்றும் எச்சரிக்கிறார்.
அப்போது தலைவர்களும் மக்களும், எரேமியா ஆண்டவரின் பெயரால்
பேசியதால் அவருக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்று
தீர்ப்பளிக்கின்றனர். இறுதியில், அகிக்காம் என்பவர் எரேமியாவுக்கு
ஆதரவாக நின்றதால் அவர் மக்களின் கையில் ஒப்படைக்கப்படாமல்
உயிர் தப்புகிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவான் சிறையில்
அடைக்கப்பட்டு பின்னர் தலை வெட்டப்பட்ட நிகழ்வு
விவரிக்கப்படுகிறது. மன்னன் ஏரோது, தன் சகோதரனின் மனைவி
ஏரோதியாளை மணந்ததைக் கண்டித்து யோவான் உண்மையைத்
துணிவுடன் அறிவித்தார். இதனால் ஏரோதியாள் அவர்மீது பகை
கொண்டாள். ஏரோதின் பிறந்தநாள் விருந்தில், ஏரோதியாளின் மகள்
நடனமாடியதால் மகிழ்ந்த ஏரோது, அவள் கேட்ட எதையும் தருவதாக
வாக்குறுதி அளித்தான்.
அவளோ, தன் தாயின் தூண்டுதலின்படி, திருமுழுக்கு யோவானின்
தலையைக் கேட்டாள். மனவேதனை அடைந்தாலும், தன் வாக்குறுதியைக்
காப்பாற்ற ஏரோது யோவானின் தலையை வெட்ட உத்தரவிட்டான்.
யோவானின் சீடர்கள் அவரது உடலை அடக்கம் செய்து, நடந்ததை
இயேசுவிடம் அறிவித்தனர் என்று மத்தேயு குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
இன்று, கடவுளின் பக்கம் நின்று உண்மையை எடுத்துரைப்பவர்கள்
துன்பத்தையும் எதிர்ப்பையும் நிச்சயம் சந்திப்பார்கள். இந்த பொல்லாத
உலகம் அவர்கள் விட்டுவைக்காது. முதல் வாசகத்தில் எரேமியாவும்
நற்செய்தியில் திருமுழுக்கு யோவானும் இதற்குத் தலைசிறந்த
எடுத்துக்காட்டு. இருவரும் அதிகாரத்தில் இருந்தவர்களின் தவறுகளை
அஞ்சாமல் சுட்டிக்காட்டினர். அதற்காக அவர்கள் உயிருக்கு ஆபத்தான
சூழ்நிலையை எதிர்கொண்டனர்.
எரேமியா “குற்றமற்ற ஒருவரைக் கொன்றால் அதன் பொறுப்பு
உங்களுக்கே" என்று துணிவுடன் பதிலளித்தார். இறுதியில் மக்களின்
தலைவர்கள் அவர் நிரபராதி என்பதை உணர்ந்து அவரை விடுவித்தனர்.
மேலும் ஆகிக்காம் என்பவரின் ஆதரவால் எரேமியா பாதுகாக்கப்பட்டார்.
உண்மைக்காக நிற்பவருக்கு இறைவன் தக்க நேரத்தில் உதவியை
அனுப்புகிறார் என்பதை இது காட்டுகிறது.
நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் அதே உண்மைக்காக தனது
உயிரையே அர்ப்பணிக்கிறார். ஏரோதின் தவறான திருமணத்தை அவர்
கண்டித்தார். அதிகாரம், செல்வாக்கு, மிரட்டல் எதுவும் அவரது வாயை
அடைக்கவில்லை. ஆனால் ஏரோதியாளின் பழிவாங்கும் எண்ணத்தால்
அவர் சிறையில் அடைக்கப்பட்டு இறுதியில் தலை வெட்டப்பட்டார்.
மனித பார்வையில் இது தோல்வியாகத் தோன்றலாம். ஆனால்
இறைவனின் பார்வையில் அவர் உண்மைக்காக இரத்தம் சிந்திய முதல்
பெரிய சாட்சியாளராக உள்ளார்.
இன்று நமது நிலையை சற்று சீர்த்தூக்கிப் பாரக்க அழைக்கப்படுகிறோம்.
நாம் உண்மைக்காக நிற்கிறோமா? குடும்பத்தில், பணியிடத்தில்,
சமூகத்தில் அல்லது பங்கில் தவறைக் கண்டால் அன்போடும்
பணிவோடும் உண்மையைப் பேசத் துணிகிறோமா? அல்லது பிறரின்
விமர்சனத்திற்கும் எதிர்ப்பிற்கும் பயந்து மௌனமாகிவிடுகிறோமா?
அனுபவத்தின் ஊடாகச் சிந்தித்தால், உண்மையைப் பேசுவது எப்போதும்
எளிதல்ல. சில நேரங்களில் மிக நெருங்கிய நட்பை அல்லது உறவை
இழக்க நேரிடலாம். அதற்காகர அநீதிக்குத் துணை நிற்பதும் தோள்
கொடுப்பதும் நமது சீடத்துவத்தை சீர்குலகைக்கும்
திருமுழுக்கு யோவானும் எரேமியாவும் அவர்களது சொந்த கருத்தை
அல்ல, இறைவனின் வார்த்தையையே அறிவித்தனர். இறைவனின்
உண்மையை வாழ்வில் சாட்சியப்படுத்தும் வாழ்க்கையே என்றும்
நமக்கான உண்மையான அழைப்பாகும்.
இறைவேண்டல்.
அன்பின் ஆண்டவரே, இயேசுவே, என் சொற்களும் செயல்களும் உமக்கு
மாட்சி சேர்க்கும் வகையில் வெளிப்பட என்னைத் திடப்படுத்துவீராக.
ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா). ஜெனிசிஸ்
விவிலியக் கல்வி மையம் +6
0122285452
