ஆவியால் உயிர்பெற்று, அன்பால் இணைவோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 20ஆம் வாரம், வெள்ளி
21 ஆகஸ்டு 2026,  

எசேக்கியேல் 37: 1-14
மத்தேயு   22: 34-40

ஆவியால் உயிர்பெற்று, அன்பால் இணைவோம்!

முதல் வாசகம்.

இவ்வாசகப் பகுதியில்  இறைவாக்கினர் எசேக்கியேலுக்கு ஒரு காட்சி  அளிக்கப்படுகிறது. அக்காட்சியில் கண்ட ‘உலர்ந்த எலும்புகள்’ பற்றி இறைவாக்கினர் விவரிக்கிறார். 

கடவுள்எசேக்கியேலை ஒரு பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் செல்கிறார். அங்கு ஏராளமான உலர்ந்த எலும்புகள் கிடக்கின்றன. இந்த உலர்ந்த எலும்புகள்  இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கையற்ற, அழிந்த நிலையைக் குறிக்கின்றன.

கடவுள் எசேக்கியேலிடம் அந்த எலும்புகளுக்கு இறைவாக்குரைக்கும்படி  எசேக்கியலுக்குக்  கூறுகிறார். அவர் கடவுளின் வார்த்தையை அறிவித்தபோது, எலும்புகள் ஒன்றோடொன்று சேர்ந்து, அவற்றின்மேல் நரம்புகள், தசை மற்றும் தோல் உருவாகின்றன. பின்னர் கடவுளின் கட்டளையிட்டபடி எசேக்கியேல் ஆவியை அழைக்கிறார். கடவுளின் ஆவி அவற்றுக்குள் வந்து, அவை உயிர்பெற்றன. 

இந்தத் காட்சியின் மூலம், பாபிலோனில் நாடுகடத்தப்பட்டிருக்கும் இஸ்ரயேல் மக்கள் “எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயின; எங்கள் நம்பிக்கை அழிந்துவிட்டது, எல்லாம் முடிந்து போயின’ ” என்று நினைத்தாலும், கடவுள்  அவர்களுக்கு மீண்டும் உயிரும் நம்பிக்கையும் கொடுக்க முடியும் எனனும் நம்பிக்கை செய்தியைப் பகிர்கிறார். 

நற்செய்தி. 

இன்றைய நற்செய்திப் பகுதியில்,  பரிசேயர்கள் இயேசுவிடம் “திருச்சட்டத்தில்  மிகப்பெரிய கட்டளை எது?” என்று கேட்கிறார்கள்.  இயேசு, அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில், முதல் மற்றும் மிகப்பெரிய கட்டளை:
 ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ என்றும்,  ‘உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை  என்றும் கூறுகிறார்.
 
இந்த இரண்டு கட்டளைகளிலேயே திருச்சட்டத்தின் அனைத்து போதனைகளும் அடங்கியுள்ளன என்று இயேசு எடுத்துரைக்கிறார்.

சிந்தனைக்கு.

இன்றைய முதல் வசகப் பகுதியில், உலர்ந்த எலும்புகளால் நிறைந்த பள்ளத்தாக்கை நாம் காண்கிறோம். அந்த எலும்புகள் இஸ்ரயேல் மக்களின் உலர்ந்துபோன நம்பிக்கையற்ற நிலையைக் குறிக்கின்றன. ஆனால் கடவுளோ, “இந்த எலும்புகள் உயிர் பெற்கூடுமா?” என்று கேட்கிறார். கடவுளுடைய வார்த்தையும் ஆவியும் அவற்றின் மீது வந்தபோது, அந்த உலர்ந்த எலும்புகள் மீண்டும் உயிர் பெற்று நிற்கின்றன.

இன்று, இவ்வாசகப் பகுதி  பல இன்னல்களுக்கு மத்தியில் வாழும் நமக்கு ஒரு முக்கியமான நம்பிக்கையைத் தருகிறது: நம் வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்று தோன்றும் நேரத்திலும், கடவுளால் புதிய வாழ்வை நமக்கு  உருவாக்கித் தரமுடியும் என்பதை உணரந்துகிறது. நம்முடைய குடும்பத்தில், உறவுகளில் அல்லது நம்பிக்கை வாழ்வில் வறட்சி இருந்தாலும், கடவுள் நமக்கு புத்துயிர் ஊட்டி கைத்தூக்கி விடுவார் என்ற நம்பிக்கை நம்மில் ஊற்றெடுக்க வேண்டும். ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ (லூக்கா 1:37)

இன்றைய நற்செய்தியில், ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ என்றும்,  ‘உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை  என்றும் கூறுகிறார்.
இந்த இரண்டு வாசகங்களும் ஒன்றோடொன்று அழகாக இணைகின்றன. கடவுளின் ஆவி நமக்கு புதிய வாழ்வைத் தருகிறது; அந்த புதிய வாழ்வு அன்பாக வெளிப்பட வேண்டும். கடவுளை அன்பு செய்கிறேன் என்று சொல்வது மட்டும் போதாது. நம்மைச் சுற்றியுள்ளவர்களை மன்னிப்பதிலும், தேவையில் உள்ளோருக்கு உதவுவதிலும், பொறுமையுடன் நடப்பதிலும், அன்பு காட்டுவதிலும் அது வெளிப்பட வேண்டும்.
 
ஆகவே, உன் வாழ்க்கையில் உலர்ந்த எலும்புகளைப் போல இருக்கும் பகுதி எது?, என் பலவீனங்கள் என்ன என்பதை அறிந்துணர்ந்து,  கடவுளின் பார்வையில் வைத்து சீர் செய்ய முனைய வேண்டும். நமது நிகழ்கால துன்பங்கள், துயரங்கள், பாடுகள் உலர்ந்த எலும்புகளாக தோன்றக்கூடும். இவற்றால் துவண்டு போவதில் வாழ்க்கை நலம்பெறாது. ‘இன்றையப் பொழுதை இறைவனுக்களித்து, நாளையப் பொழுதில் நிம்மதி  நாட’ வேண்டும். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது. 

நாம் கடவுளின் ஆவிக்கு நம் இதயத்தைத் திறந்து, அன்பை நம் வாழ்க்கையின் அடையாளமாகக் கொண்டால், அவர் நம்மிலும் நம்மைச் சுற்றியுள்ளவர்களிலும் புதிய வாழ்வை உருவாக்குவார். கிறிஸ்தவ வாழ்க்கையின் மையம் கடவுளை முழுமையாக அன்பு செய்வதும், மற்றவர்களை நம்மைப் போல ஏற்பதும் ஆகும். நமது இறை பக்கதியானது,  முதலில் நம்மைச் சுற்றியுள்ளவர்கள்மீது அன்பாக வெளிப்பட வேண்டும். இல்லையே, நமது அனைத்து பக்தி முயற்சிகளும் வெளிவேடமாக மாறிவிடும்.

இறைவேண்டல்.

ஆண்டவரே, உமது ஆவியால் என்ன புதுப்பியும். உம்மை முழு இதயத்தோடு அன்பு செய்யவும், எனக்கு அடுத்திருப்பவர்களை என்னைபோல் அன்பு செய்யும் வரத்தையும் தாரும். ஆமென்.”

 

ஆர்.கே.சாமி (மலேசியா)                                                                             

ஜெனிசிஸ் திருவிவிலிய கலவி  மையம்                                                          

+60122285452

Tamil Survey Popup Image