பெற்றோருக்கு நிகர் யார்? | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
உயர்ந்த இலட்சியங்களையும் எண்ணங்களையும் கொண்டு வாழ்பவர்கள் உறுதியாகச் சிகரத்தை எட்டிப் பிடிப்பார்கள். குடிசையில் பிறந்தவர்கள் இன்று கோபுரத்தை எட்டிப் பிடிக்கின்றார்கள். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும், பெற்றோரின் உறுதுணையும் இன்று சாதாரண மாணவர்களை மலையுச்சியை நோக்கி அழைத்துச் செல்கிறது.
தமிழகத்தில் கடலூர் மாவட்டம், நெய்வேலி,வடக்கு மேலூரைச் சேர்ந்த மாணவர் மணிகண்டன். இவரது தந்தை ஆறுமுகம்,நெய்வேலி சுரங்கத்தில் பணிபுரிந்து, உடல்நலக் குறைவால் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி வள்ளி வீட்டு வேலை செய்தும், வயலில் கூலிவேலை செய்தும் குடும்பச் செலவைக் கவனித்து வந்தார்.
மணிகண்டனும் தனது பங்குக்கு விடுமுறை நாள்களில் அம்மாவுடன் கூலி வேலை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தான். கோவையில் பி. பார்ம் மற்றும் சென்னையில் எம்.பார்ம் படிப்பை முடித்தார். குடும்பத்தில் கடுமையான வறுமை இருந்தாலும் படிப்பை இடையில் நிறுத்திவிடாமல், தொடர்ந்து விடாமுயற்சியுடன் படிக்க ஊக்கம் அளித்து வந்தவர் இவர் தாய். ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற மணிகண்டன் ஒரு சாதாரண கூலித் தொழிலாளியின் மகன். பெற்றோரின் உழைப்புதான் மணிகண்டனைக் கோபுரத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது.
படிப்பு, பணி என சுறுசுறுப்பாக இருந்தாலும் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பதுதான் மணிகண்டனின் கனவு. 2011ஆம் ஆண்டு ஐ. ஏ. எஸ். தேர்வுக்காக முதல்நிலைத் தேர்வு எழுதிய மணிகண்டன் தோல்வி அடைந்தார். 2016ஆம் ஆண்டு மீண்டும் மணிகண்டன் ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வை எழுதி, 332வது இடத்தில் வெற்றி பெற்றார். அதுவும் தமிழ் மொழியிலே எழுதி வெற்றி பெற்றார்.
பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவது ஒருபுறம் இருந்தாலும், தாம் அனுபவித்த துன்பங்களைப் பிள்ளைகள் ஒருபோதும் அனுபவிக்கக்கூடாது என்று நினைப்பவர்கள்தாம் பெற்றோர்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
