நமது வாழ்வும் பணியும் பிறருக்கு ஆசீர்வாதமாக அமையட்டும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 32-ம் வாரம்-செவ்வாய்
10 நவம்பர் 2026
 

தீத்து 2: 1-8, 11-14

லூக்கா 17: 7-10
 


நமது வாழ்வும் பணியும் பிறருக்கு ஆசீர்வாதமாக அமையட்டும்!


முதல் வாசகம்.


முன்னுரை.


இன்றும் நாளையும் இடம்பெறும் முதல் வாசகங்கள் பவுல் அடிகள்  தீத்துவுக்கு எழுதிய திருமுகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. தீத்து என்பவர்  பவுலின் அடிகளின் மூன்றாம் மறைத்தூதுப் பயணத்தின்போது உடன் சென்றார்.  தீத்து பிறப்பால் ஒரு யூதர் அல்ல, அவர் ஒரு கிரேக்கர் (கலா 2:3). பவுலும் தீத்துவும் கிரேத்தா தீவுக்குச் சென்று நற்செய்தி அறிவித்தனர். பின்னர், அங்குள்ள சபைகளை ஒழுங்குபடுத்தவும், தகுதிவாய்ந்த மூப்பர்களை (கண்காணிகளை) நியமிக்கவும் பவுல் தீத்துவை அங்கேயே விட்டுட்டு வந்தார் (தீத்து 1:5). இதன்படி, தீத்து திருத்தூதர் பவுலின் சீடராகவும், உடன் உழைப்பாளராகவும் இருந்தது மட்டுமல்லாமல், கிரேத்தா திருஅவையின்  முதல் ஆயராகவும் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தகது.


இன்றைய முதல் வாகத்தில் திருத்தூதர் பவுல், கிறிஸ்தவ வாழ்வுக்கு ஏற்ற நற்பண்புகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்துகிறார். முதிய ஆண்கள் தன்னடக்கம், நேர்மை, பொறுமை, நம்பிக்கை மற்றும் அன்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றும்  முதிய பெண்கள் தூய்மையான வாழ்வு வாழ்ந்து, இளம்பெண்களுக்கு நல்லவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதோடு, இளைஞர்களும் தன்னடக்கத்துடனும் நற்பண்புகளுடனும் வாழ்வதோடு,  தங்களுடைய சொல்லிலும் செயலிலும் பிறருக்கு நல்ல முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.


மேலும், கடவுளின் அருள் எல்லா மனிதர்களுக்கும் மீட்பைக் கொண்டுவருகிறது என்பதைப் பவுல் எடுத்துரைக்கிறார் என்பதோடு,  இயேசு கிறிஸ்து நம்மை எல்லா தீமைகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தம் மக்களாக நம்மைத் தூய்மைப்படுத்தத் தம்மையே கையளித்தார் என்பதை விவரித்து எழுதுகிறார். 


நற்செய்தி.


இயேசு இவ்வாசகத்தில் பணிவான மனப்பான்மையுடன் இறைவனுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதை ஓர் உவமையின் வழியாக எடுத்துரைக்கிறார். வயலில் உழைத்துவிட்டுத் திரும்பும் பணியாளர், தனது கடமையைச் செய்ததற்காகப் பாராட்டையோ சிறப்பான கைம்மாறையோ எதிர்பார்ப்பதில்லை.


அதுபோல, இறைவனின் பணியாளர்களும் தமக்கு  ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்ற வேண்டும் என்பதோடு,  இறைவனுக்காக எத்தனை நற்செயல்கள் செய்தாலும், அவற்றைப் பெருமையாகக் கருதாமல் பணிவுடன் இருக்க வேண்டும் ஏனெனில்,  நமது ஆற்றலும் திறமையும் இறைவன் அளித்த கொடைகள் என்பதை உணர்ந்து, பாராட்டையும் புகழையும் எதிர்பார்க்காமல் அவருக்குப் பணியாற்ற வேண்டும். 


எனவே, "நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்தோம்" என்ற மனநிலையுடன் வாழ இயேசு அழைப்பு விடுக்கிறார்.


சிந்தனைக்கு.

 
இன்றைய முதல் வாசகத்தில், திருத்தூதர் பவுல் தீத்துவுக்கு எழுதும்போது, ஒரு நல்ல கிறிஸ்தவர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறார். முதியவர்கள் தன்னடக்கத்தோடும், இளைஞர்கள் பொறுப்புணர்வோடும், அனைவரும் நற்பண்புகளோடும் வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். மேலும், கடவுளின் அருள் நம்மை எல்லாத் தீமைகளிலிருந்தும் விலக்கி, நல்ல வாழ்வுக்கு வழிநடத்துகிறது என்று கூறுகிறார்.


நற்செய்தியில் இயேசு ஓர் உவமையின் வழியாக, இறைமக்களாகிய நாம் என்றும் பணிவான உள்ளத்தோடு கடவுளுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். வயலில் வேலை செய்துவிட்டு வரும் பணியாளர், தனது கடமையை நிறைவேற்றியதற்காகத் தனக்குப் பாராட்டு எதிர்பார்ப்பதில்லை. அதுபோலவே, நாமும் கடவுளுக்குச் செய்ய வேண்டிய பணிகளைச் செய்துவிட்டு, பெருமையோ பாராட்டோ எதிர்பார்க்காமல், பணிவுடன் செயல்பட வேண்டும் என்று இயேசு கற்பிக்கிறார்.

இந்த இரண்டு வாசகங்களிலும் நாம்  மூன்று முக்கியமான படிப்பினைகளைப் பெறுகிறோம். 
முதலாவதாக,  நமது வாழ்வே, இயேசுவை பிறருக்கு வெளிப்படுத்தும்  நற்செய்தியாக இருக்க வேண்டும் என்பதாகும். ஆம், நாம் பேசும் வார்த்தைகளைக் காட்டிலும், நமது செயல்கள் மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும். நமது குடும்பத்திலும், சமூகத்திலும் அன்பு, பொறுமை, நேர்மை, மன்னிப்பு ஆகிய பண்புகளை வெளிப்படுத்த வேண்டும்.

. 
அடுத்து, இரண்டாவதாக,  கடவுளின் அருளால் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்பதாகும். நாம்  கடவுளின் அருளால்  வழிநடத்தப்படுகிறோம் என்பதால், நம்மில் துளிர்விடும் தீய பழக்கங்களை விட்டுவிடுவதோடு,  நம்மில் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றையும் முளையிலேயே வேரோடு பிடுங்கி எறியவேண்டும். (மத் 15:13)


இறுதியாக, நற்செயல்களில் வளர வேண்டும். நாம் எள்ளவும் பிறர் பாராட்டை எதிர்பார்க்காமல் பணியாற்ற வேண்டும்: ஆலயத்தில் பணியாற்றினாலும், குடும்பத்தில் உழைத்தாலும், பிறருக்கு உதவி செய்தாலும், அதற்குப் பதிலாகப் பாராட்டையோ அங்கீகாரத்தையோ எதிர்பார்க்கக் கூடாது. நமது பணி கடவுளுக்குச் செலுத்தும் அன்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டுமேயொழிய சுய விளம்பரத்தை நாடுவதாக இருத்தல் கூடாது. 
 
உண்மையில்,  நாம் செய்யும் சிறிய நற்செயல்கள்கூட கடவுளின் பார்வையில் மதிப்புமிக்கவை. எனவே, பெருமையின்றி, புகழைத் தேடாமல், கடவுளின் அன்பைப் பெற்ற பணியாளர்களாக வாழ முயற்சிப்போம்.
“நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்” (லூக்கா 17:10) என்ற வார்த்தைகளை நமது வாழ்வின் வழிகாட்டியாகக் கொள்வோம்.


மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற. (குறள் 34)

இக்குறளில் வள்ளுவர், ஒருவருடைய மனம் தூய்மையாக இருப்பதே உண்மையான அறமாகும். மனத்தூய்மை இல்லாத மற்ற செயல்கள் வெறும் ஆரவாரமே என்கிறார். 


 இறைவேண்டல்.


ஆண்டவராகிய இயேசுவே, நான் என் கடமைகளைச் செய்யும்போது பிறர் அங்கீகாரத்தையும் கைம்மாறையும் எதிர்பார்க்காமல், தன்னலம் பாராது பிறருக்காக உழைக்கின்ற மனப்பக்குவத்தைத் தாரும். ஆமென்.

ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image