பொன்னான நேரத்தின் மனிதர் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
ஒரு மனிதரின் உயிரைக் காப்பதைவிட சிறந்த பணி இவ்வுலகில் வேறெதுவும் இருக்க முடியாது.
தலைநகரமான டெல்லியில் அவசரப் பிரிவுகளில் உயிர் காக்கும் பெரும்பாலான மருத்துவர்களுக்கு, 66 வயது நிரம்பிய சூரஜ் பிரகாஷ் வைய்டு அவர்கள் நன்றாக அறிமுகமானவர்.
"பொன்னான நேரத்தின் மனிதர்" என்று அழைக்கப்படும் சூரஜ் பிரகாஷ் வைய்டு அவர்கள் சாலை விபத்துக்குள்ளாகிக் காயப்பட்டவர்களை அடுத்த அறுபது நிமிடங்களில் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்த்து விடுகிறார்.
சாலையில் யாரேனும் காயப்பட்டுத் துன்புறுகின்றபோது, அவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் காவல் நிலையத்துக்குப் போக வேண்டியிருக்குமோ, நீதிமன்றத்துக்குச் சாட்சி சொல்லப் போகவேண்டியிருக்குமோ என்று அச்சப்பட்டு "நமக்கெதுக்கு வம்பு?" என்றெண்ணி வேடிக்கை பார்க்கக்கூடிய இச்சமூகத்தில், "விபத்துகளில் சிக்கிய 92 பேர் பற்றிக் காவல்துறையில் பதிவு செய்துள்ளேன்; நேரடியாக நீதிமன்றத்துக்குச் சென்று சாட்சி கூறியுள்ளேன்; அவர்களின் விலையுயர்ந்த பொருள்களை விபத்துக்குள்ளானவர்களிடம் ஒப்படைத்துள்ளேன்” என்று சொல்கிறார் சூரஜ் பிரகாஷ் அவர்கள்.
விபத்துக்குள்ளானவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பதோடு மட்டும் தமது கடமை முடிந்துவிட்டது என்று எண்ணாமல், அவர்களின் வீட்டுக்கும் சென்று காயங்கள் குணமாவது வரை அவர்களோடு தொடர்பில் இருக்கின்றார்.
விபத்து நடந்த முதல் அறுபது நிமிடங்களில் பாதிக்கப்பட்ட மனிதர்கள் முறையான சிகிச்சை பெற்றால், இந்தியாவில் சாலை விபத்துகளால் இறப்பவர்களில் ஐம்பது விழுக்காட்டினரைக் காப்பாற்ற முடியும்.
எந்தக் கைம்மாறும் எதிர்பார்க்காமல் தன்னலமின்றிச் சேவையாற்றும் நல்ல உள்ளங்களுக்கு இறப்பில்லை.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.
