கடவுளின் அருளை அணிவோம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 20ஆம் வாரம், வியாழன்
19 ஆகஸ்டு 2026,
எசேக்கியேல் 36: 23-28
மத்தேயு 22: 1-14
கடவுளின் அருளை அணிவோம்!
முதல் வாசகம்.
இந்த வாசகத்தில், தம்முடைய தூய திருப்பெயரை மக்களிடையே வெளிப்படுத்துவேன் என்று கடவுள் வாக்குறுதி அளிக்கிறார். இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாவங்களினால் கடவுளின் திருப்பெயரை அவமதித்திருந்தாலும், அவர் அவர்களை மீண்டும் தூய்மைப்படுத்தி, தம்முடைய மக்களாக நிலைநிறுத்த விழைகிறார். பின்வருபவை கடவுளின் வாக்குறுதியாக உள்ளது.
கடவுள் அவர்களுக்கு:
• தூய இதயத்தை கொடுப்பார்.
• புதிய ஆவியை அவர்களுக்குள் வைப்பார்.
• கல்லான இதயத்தை அகற்றி, மென்மையான இருதயத்தை கொடுப்பார்.
• தமது ஆவியை அவர்களுக்குள் வைத்து, தமது கட்டளைகளின்படி நடக்கச் செய்வார்.
• அவர்களைத் தமது மக்களாக ஏற்றுக்கொண்டு, தாமே அவர்களுடைய கடவுளாக இருப்பார்.
இச்செய்தியை இறைவாக்கினர் எசேக்கியேல் வெளிப்படுத்துகிறார்.
நற்செய்தி
இன்றைய நற்செய்தியில் இயேசு திருமண விருந்தின் உவமையை கூறுகிறார்.
இதில் ஓர் அரசன் தன் மகனின் திருமணத்திற்காக பெரிய விருந்து ஏற்பாடு செய்து, அழைக்கப்பட்டவர்களை வருமாறு அழைக்கிறான். ஆனால் அவர்கள் வர மறுக்கிறார்கள்; சிலர் அழைப்பை அலட்சியப்படுத்துகிறார்கள், சிலர் அரசனுடைய பணியாளர்களையே துன்புறுத்துகிறார்கள். இதனால் அரசன் மற்றவர்களையும் விருந்திற்கு அழைக்கிறான். விருந்து மண்டபம் மக்களால் நிரம்பியபோது, திருமண ஆடை அணியாமல் வந்த ஒருவரை அரசன் காண்கிறான். அவரிடம் காரணம் கேட்டபோது அவர் பதில் சொல்ல முடியவில்லை. எனவே அவர் வெளியே அனுப்பப்படுகிறார் என்பதை மத்தேயு பதிவுச் செய்துள்ளார்.
சிந்தனைக்கு.
இன்றைய, இயேசுவின் உவமை இறையரசின் விருந்தைப் பற்றி பேசுகிறது. இது இயேசுவின் போதனைகளில் அடிக்கடி இடம்பெறும் ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாகும். குறிப்பாக, இந்தக் உவமையானது காலத்தின் முடிவில் நடைபெறவிருக்கும் திருமண விருந்தைப் பற்றியது. அப்போது இயேசுவுக்கும் அவரது திருவுடலான திருஅவைக்கும் இடையிலான ஒன்றிப்பு முழுமை பெற்றதாக வெளிப்ப்டும்.
மண்ணகத் திருஅவை கிறிஸ்துவின் மணவாட்டியாக இருந்து, இந்த உலகில் தனது பயணத்தைத் தொடர்கிறது. இறுதியில், தன் அன்புக்குரிய மணமகனாகிய கிறிஸ்துவுடன் என்றென்றும் ஒன்றிணைந்தவளாக மாட்சியுறுவாள்
தந்தையாகிய இறைவன் அந்த விருந்தைத் தயாரித்து, அனைவரும் அதில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறார். அதனால்தான் அவர் நம் அனைவரையும், “விருந்துக்கு வாருங்கள்!” (மத்தேயு 22:4) என்று அழைக்கிறார். இறைவன் தம்முடைய நிலையான அரசுக்குள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார். ஆனால் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது; மனமாற்றத்துடனும், தூய்மையான வாழ்க்கையுடனும், இறைவனுக்கு ஏற்ற விதத்திலும் அவரது விருந்தில் பங்குபெற ஆவன செயெய வேண்டும். இல்லையே, திருமண ஆடை அணியாது விருந்துக்கு வந்தவனைப் போல் நாமும் வெளியே அனுப்பப்படுவோம்.
யேசு இந்த உவமையை நம்மைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாக, நம் இதயத்தை இடைவிடாது தூய்மைப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்துவதற்காகவே கூறுகிறார். பல விதங்களில், இந்தத் திருமண விருந்து நமது பங்குச் சமூக ஆலயங்களின் ஒரு குறியீடாகத் திகழ்கிறது; ஏனெனில், அங்குதான் 'ஆட்டுக்குட்டியானவரின் விருந்து' (திருவிருந்து) தொடர்ந்து வழங்கப்படுகிறது. இறுதியில் நாம் பங்குபெறபோகும் விண்ணக விருந்தின் முன்சுவையாக நற்கருணை உள்ளது. இந்த திருவிருந்தில் பங்குபெற வாரந்தோடும் விழையும் நமது உள்ளத் தூய்மையின் அவசியத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
முதல் வாசகத்தில் எசேக்கியேல் வலியுறுத்தியதைப் போல கடவுள் நம்மை மன்னித்து அவரது அரசில், அவரது திருவிருந்தில் பங்குகொள்ளச் செய்ய ஆயத்தமாக உள்ளார். ஆனால், நம்மில் முட்டுக்கட்டையாக இருப்பது நமது மனமாற்றத்திற்கான அலட்சியம் என்பதை நினைவில் கொள்வோம்.
இறைவேண்டல்.
என் ஆண்டவராகிய இயேசுவே, தந்தை விடுக்கும் திருமண விருந்தில் நான் பங்குபெற என்னை தூய்மைப்படுத்துவீராக. ஆமென்.
ஆர்.கே.சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் திருவிவிலிய கலவி மையம்
+60122285452
