மலேசியா: நல்லிணக்கத்திற்கு ஆயர்கள் அழைப்பு | Veritas Tamil
செப்டம்பர் 16ஆம் தேதி மலேசியா தனது 63ஆம் தேசிய நாளைக் கொண்டாடிய நிலையில், பாகுபாடு, வெறுப்பு மற்றும் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் பேச்சுகளை நிராகரித்து, ஒருவருக்கொருவர் மதிப்பும் நட்புணர்வும் வளர்க்குமாறு மலேசிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CBCM) மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மலேசியா தேசிய நாளையொட்டி வெளியிட்ட செய்தியில், மலேசிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரும் கூச்சிங் பேராயருமான பேராயர் சைமன் போ அவர்கள், வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்களைப் பற்றி பேசும்போது, “நமது வார்த்தைகளைக் கவனித்துக்கொள்வோம்; நமது உள்ளங்களைக் காத்துக்கொள்வோம்” என்று மலேசியர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மலேசியாவின் பல இனங்களும் பல மதங்களும் இணைந்து வாழும் சமூகத்தில் பிளவுகளை மேலும் ஆழப்படுத்தக்கூடிய அரசியல் மற்றும் மதரீதியான பேச்சுகளையும், மத சமூகங்களைப் புண்படுத்தக்கூடிய கருத்துகளையும் நிராகரிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். செபாங் பகுதியின் அம்னோ பிரிவு தலைவரான டத்தோக் நூராஸ்லி சைத் அவர்கள், அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் குருவையும் அருள்சகோதரியையும் குறித்து பொருத்தமற்ற நகைச்சுவை ஒன்றைப் பகிர்ந்துகொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து பேராயரின் இந்த அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த நகைச்சுவை பின்னர் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
இந்தச் சம்பவம் தமக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகக் கூறிய பேராயர் சைமன் போ அவர்கள், இதுபோன்ற நகைச்சுவைகளுக்கு அதிகாரப்பூர்வக் கூட்டங்களில் இடமில்லை என்று வலியுறுத்தினார். மலேசியாவில் பல்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்களால் குருக்களும் அருள்சகோதரிகளும் உயர்ந்த மதிப்புடன் கருதப்படுவதால், இந்தச் சம்பவம் குறிப்பாக வேதனையளிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், பல தலைமுறைகளாக கத்தோலிக்க அருள்சகோதரிகள் பல்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்களுக்கு மருத்துவமனைகள், சமூகநல நிறுவனங்கள் மற்றும் பள்ளிகள் வழியாக ஆற்றிவரும் சேவைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் இணைந்து வாழ முயன்று வரும் நாட்டில், ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பதன் முக்கியத்துவத்தைச் சிந்தித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பாக இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆயர்களின் செய்தி வலியுறுத்தியது. செப்டம்பர் 9 முதல் 13ஆம் தேதி வரை சரவாக் மாநிலத்தின் சிபுவில் நடைபெற்ற மலேசிய மேய்ப்புப்பணி மாநாட்டைத் தொடர்ந்து பேராயர் சைமன் போ அவர்களின் இந்த அழைப்பு வெளிவந்துள்ளது. நாடு தழுவிய இம்மாநாட்டில் தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,000 கத்தோலிக்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், துறவிகள் மற்றும் திருஅவைத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் குடும்ப வாழ்வும் இளைஞர்களும், சுற்றுச்சூழலும் சூழலியலும், சமூகநலச் சேவைகள் மற்றும் நாட்டைக் கட்டியெழுப்புதல் ஆகிய நான்கு துறைகளில் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் செயல்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
மலேசியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே செல்வம், பொருளாதார வளர்ச்சி, கல்வி மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றில் வேறுபாடுகள் இருப்பதையும் திருஅவை ஏற்றுக்கொண்டது. அதேவேளையில், நாட்டின் பண்பாட்டு, இன மற்றும் மொழிப் பன்முகத்தன்மை அதன் வளமாக விளங்குகிறது என்றும் வலியுறுத்தப்பட்டது. தீபகற்ப மலேசியாவுக்கும் போர்னியோ தீவுப் பகுதிகளான சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கும் இடையே உண்மையான நட்புறவை உருவாக்குவதற்கான “புதிய தொடக்கம்” என இந்த மாநாட்டைப் பேராயர் சைமன் போ அவர்கள் வர்ணித்தார். மலேசிய கத்தோலிக்கர்கள் தங்களது தேசிய அடையாளத்தை மதித்துப் பேணவும், நல்லெண்ணத்தின் பாலங்களை அமைக்கவும், பொது நலனுக்காக மற்றவர்களுடன் இணைந்து செயல்படவும் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
சரவாக் மாநிலத்தில் தமது சொந்த வாழ்க்கை அனுபவத்தை நினைவுகூர்ந்த பேராயர் சைமன் போ அவர்கள், மலேசியாவை நல்லிணக்கம், உண்மையான நட்பு மற்றும் ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கும் நாடாகத் தாம் அறிந்திருப்பதாகக் கூறினார். பகைமையிலிருந்து விலகி, “கருணை மற்றும் உண்மையான நட்பை” நோக்கி மக்கள் நகர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இதனை அவர் “இதயத்தின் மனமாற்றம்” என்று குறிப்பிட்டார். மலேசியாவில் இறைவன் வழங்கியுள்ள ஆசீர்வாதங்களைப் போற்றுவதோடு, நாட்டில் வாழும் அனைவருக்கும் விருந்தோம்பலையும் அன்பையும் வழங்குமாறும் செய்தி அழைப்பு விடுத்தது. “நமது ஆசீர்வாதங்களைக் கொண்டாடுவோம்; ஒருவருக்கொருவர் அன்புடன் நடந்துகொள்வோம்; நம்மிடையே வாழும் அனைவருக்கும் உண்மையான மலேசிய விருந்தோம்பலை வழங்குவோம்” என்று பேராயர் சைமன் போ அவர்கள் கூறினார். மலேசிய ஆயர்கள் மற்றும் கத்தோலிக்க சமூகத்தின் சார்பில் கூச்சிங்கிலிருந்து இச்செய்தியை வெளியிட்ட பேராயர் சைமன் போ அவர்கள், மலேசிய மக்களுக்கு 63ஆம் தேசிய நாள் நல்வாழ்த்துகளையும் இறையாசீரையும் தெரிவித்தார்.
