இறைத்தொண்டில் புனித லாரன்ஸ் | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection
பொதுக்காலத்தின் 18 ஆம் வியாழன்
I: 2 கொரி: 9:6-10
II: தி பா :112:1-2, 5-6, 7-8, 9
III: யோவா: 12: 24-26
இன்றைய நாளில் நம் தாய்த்திரு அவையோடு இணைந்து புனித லாரன்ஸ் என்ற புனிதரின் விழாவினை கொண்டாடுகின்றோம். இறை சாயலில் படைக்கப்பட்டு திருமுழுக்கு பெற்ற நாம் கடவுளுக்கும் அவரின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களுக்கும் இயேசுவின் மனநிலையில் தொண்டாற்ற அழைக்கப்பட்டுள்ளோம். இதற்கு இன்றைய விழா நாயகர் நமக்கு முன்மாதிரியாக இருக்கின்றார். ”என் இருப்பு தொண்டு செய்வதற்காகவே” என்ற விருதுவாக்குடன் வாழ்ந்து சிறப்பான தொண்டுகள் பல செய்து கடவுளின் ஆசீரைப் பெற்று நம் மத்தியிலிருந்து மறைாயமல் இருப்பவர் தான் திருத்தொண்டர் புனித லாரன்ஸ். இன்றைய நாள் வழிபாடு அவரைப் போல மாறிதொண்டு செய்யும் மனநிலையின் வழியாக மற்றவரின் மனதில் நீங்கா இடம் பிடிக்க நம்மை அழைக்கின்றது.
"மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்" (மாற் 10:45) என்ற நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை உள்வாங்கியவாராய் தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக தொண்டு செய்தார். திருச்சபையின் சொத்துக்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களுக்கு தான் பயன்பட வேண்டும் என்ற கருத்தியலில் ஆழமாக இருந்தார். தன் வாழ்நாள் முழுவதும் நற்செயல்களை செய்வதில் கருத்தாய் இருந்தார். எனவே நம் வாழ்க்கையிலே தொண்டு ஏற்கும் மனநிலையை விட்டுவிட்டு பிறருக்குத் தொண்டு ஆற்றக்கூடிய மக்களாக மாற வேண்டும் என்பதே நம் ஆண்டவர் இயேசுவின் விருப்பமாக இருக்கின்றது. இதைத்தான் இயேசுவினுடைய நற்செய்தி மதிப்பீட்டை வாழ்வாகிய திருத்தொண்டர் புனித லாரன்ஸ் அவர்களும் செய்தார்.
கடவுளுக்கும் இறை சாயலில் படைக்கப்பட்ட மக்களுக்கும் இறுதிவரை தொண்டாற்ற வேண்டும் என்ற மனநிலையில் திருத்தொண்டராகவே தன் வாழ்நாள் முழுவதும் இருந்தார் .இதுதான் உண்மையான சாட்சிய வாழ்வு. புனித பேதுரு மற்றும் பவுலுக்கு அடுத்ததாக புகழ்வாய்ந்த மறைச்சாட்சியாக மாறி ஆண்டவர் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர்ந்தார். தான் பெரிதும் மதித்த இரண்டாம் சிக்ஸ்துஸ் என்ற திருத்தந்தையை கொடுங்கோல் மன்னன் வலேரியனின் காவலர்கள் கொல்வதற்கு பிடித்துக் கொண்டு சென்றதை பார்த்த லாரன்ஸ் " அன்புத் தந்தாய்! என்னை விட்டுவிட்டு நீர் போவது முறையோ? நான் செய்த தவறு என்ன? "என்று பெருமூச்சு விட்டு அழுதார். அதற்கு திருத்தந்தை மறுமொழியாக "மகனே, துணிவோடு இரு. மூன்றே நாட்களுக்குப்பின் என்னைப் பின் தொடர்வாய் " என்று கூறினார்.
நீதிபதி இப்புனிதரிடம் திருஅவையின் சொத்துக்களை ஒப்படைக்குமாறு கட்டளையிட்டார். ஆனால் நம் புனிதர் கோவில் சொத்துக்களை குருடர், செவிடர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு சொத்துக்களைப் பகிர்ந்து விட்டு, அவர்களைக் கூட்டிக்கொண்டு நீதிபதியிடம் கொண்டு சென்றார். நம் புனிதர் நீதிபதியிடம் "இதோ! இவர்கள்தான் விலையுயர்ந்த கோவில் உடமைகள் "என்று கூறினார். இதைக் கேட்ட கொடுங்கோல் மன்னன் நம் புனிதரை இரும்பு கட்டிலில் கிடத்தி அதனடியில் நெருப்பை மூட்ட செய்தான். நெருப்பில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது நற்செய்தி மதிப்பீட்டிற்காகவும், தான் செய்த திருத்தொண்டு பணிக்காகவும் இந்த துன்பத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்ற மனநிலையோடு இறைவனைப் புகழ்ந்தார். நெருப்பில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது நம் புனிதர் அந்தத் துன்பத்தில் மகிழ்ச்சி கொண்டார். மேலும் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் பொழுது நம் புனிதரின் தலையில் ஒளிக்கதிர் ஒன்று தோன்றியது. அதனைக் கண்ட மனிதர்கள் இறைவனின் மகிமையை நினைத்து மகிழ்ந்தனர். பின்பு நம் புனிதர் நீதிபதியை நோக்கி "எனது உடல் நன்றாக வெந்திருக்கிறது. இப்போது நீர் இதை எடுத்து உண்ணலாம் " என்று கூறி உயிர் துறந்து மறைச்சாட்சியாக மாறி இயேசுவுக்கு சான்று பகர்ந்தார். உரோமையில் உள்ள மிகப் பெரிய ஆலயங்களில் நம் புனிதருக்கு எழுப்பப்பட்ட ஆலயமும் அடங்கும்.
இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கிறிஸ்தவ சாட்சிய வாழ்வுக்கு சான்று பகர தேவையான மனநிலையை சுட்டிக்காட்டுகிறார். " முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார் ; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார் " என்ற பவுலின் வார்த்தைகள் நாம் நல் மனம் கொண்டவர்களாக வாழ்ந்து பிறருக்கு உதவும் மனப்பான்மை யோடு தொண்டு செய்யும் பொழுது நிச்சயமாக கடவுள் நமக்கு தேவையானவற்றை அருள்வார். இப்படிப்பட்ட மனநிலையோடு வாழ்ந்தவர் தான் புனித லாரன்ஸ். பிறருக்கு தொண்டுச் செய்யும் மனப்பான்மையோடு நம் புனிதர் அனைத்தையும் செய்தார். எனவே கடவுள் அனைத்தையும் அவர்கள் கொடுத்தார். ஏழைகளுக்கு வாரி வாரி வழங்குவது கடவுளின் நீதியை நிலைநாட்டுவதற்கு சமமானது என்று ஏழைகள் மீது அதிகம் அக்கறை கொண்டார். இதைத்தான் இன்றைய நாளிலே புனித பவுலடியார் "ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும் போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும் " என்று மறைநூலில் எழுதியவற்றை சுட்டிக்காட்டியுள்ளார். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ததுதான் கடவுளை நீதியை வாழ்வதற்கான வழி. இதைத்தான் நம் புனிதர் செய்தார்.
இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து " எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்" என்ற வார்த்தைகள் வழியாக தொண்டு செய்யக்கூடியவர்களாக வாழ வளர நம்மை அழைக்கின்றார். பிறர் வாழ்வு வளம் பெற கோதுமை மணிபோல மண்ணில் மடிந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும் நல்ல கருவிகளாக மாறவும் இயேசு அழைக்கின்றார். இதைத்தான் இன்றைய விழா நாயகர் திருத்தொண்டர் புனித லாரன்ஸ் தன் வாழ்வின் வழியாக சுட்டிக்காட்டுகிறார். தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர்ந்தவராய் ஏழை எளிய மக்களுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்தார். பணிவிடையை ஏற்பதற்கான மனநிலையை கொண்டிராமல் ஆண்டவர் இயேசுவின் மன நிலையான பணிவிடை ஆற்றும் மனநிலையை கொண்டிருந்தார். எனவே இன்றைய நாளிலே ஆண்டவ இயேசுவினுடைய மனநிலையை கொண்டவர்களாய் புனித லாரன்ஸ் விட்டுச்சென்ற இறையாட்சி மதிப்பீடுகளை நம்முடைய சொல்லாலும் செயலாலும் சான்று பகர தேவையான கிறிஸ்துவின் மனநிலையை கேட்டு இறைவேண்டல் செய்வோம்.
இறைவேண்டல் :
அன்புள்ள தெய்வமே! நாங்கள் எங்க வாழ்விலே தொண்டு ஏற்கும் மனநிலையை கொண்டவர்களாக இல்லாமல் தொண்டு ஆற்றக்கூடிய மனநிலையை கொண்டிருக்க தேவையான அருளைத் தரும். உம்முடைய நற்செய்தி மதிப்பீட்டிற்காகஎந்நாளும் சான்று பகரதேவையான அருளைத்தாரும். புனித லாரன்சை போல நற்செய்தியின் மதிப்பீட்டிற்கு சான்று பகர தேவையான கிறிஸ்துவின் மனநிலையை கேட்டுச் செபிக்கிறோம் . ஆமென்.
அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர்
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை பங்கு
சிவகங்கை மறைமாவட்டம்