உம் நம்பிக்கையின் ஆழம் அறிவாயா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலத்தின்  18 ஆம் புதன்  (09.08.2023) 
I: எண்: 13: 1-2,25-33, 14: 1,26-30,34-35
II: திபா: 106: 6-7ய. 13-14. 21-22. 23
III: மத்: 15: 21-28

எத்தனை முறை நாம் நம்பிக்கையைப் பற்றி சிந்தித்திருந்தாலும் நம்பிக்கை என்பதன் உண்மையான ஆழமான பொருளை நம்மால் விளக்க முடியாது. புரிந்து கொள்வதும் கடினம். இந்த நம்பிக்கை எனும் பண்பு சோதனைக் காலங்களில் நாமே அறிந்திராத நமக்குள் இருக்கும் அரிய பண்பு நலன்களை நமக்குக் காட்டுகின்றன எனச் சொன்னாலும் அது மிகையாகாது. நம் நம்பிக்கையின் ஆழத்தை நாம் அறிந்தால் நடக்க இயலாத காரியங்கள் கூட நம் வாழ்வில் நிச்சயம நடந்தேறும். இன்றைய நற்செய்தியில் நாம் காணும் கனானேயப் பெண் ஆழமான நம்பிக்கைக்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.

முதலாவதாக கனானேயப் பெண்ணின் ஆழமான நம்பிக்கை அவரை விடாமுயற்சி கொண்டவராக ஆக்குகிறது. இயேசுவின் பின்னால் அவர் கத்திக்கொண்டே ஓடுகிறார். தான் நினைத்த காரியத்தை இயேசுவிடமிருந்து அடைந்தே தீருவேன்  என்ற திண்ணமான நம்பிக்கையை இது சுட்டிக்காட்டுகிறது. 

இரண்டாவதாக அதீத பொறுமை.  இயேசு அவரைக் கண்டுகொள்ளாத ஒருநிலை இருந்த போதும் அவர் அதிக பொறுமையோடு இயேசுவைப் பின்தொடர்ந்தார். அவருடைய ஆழமான நம்பிக்கையே இத்தகைய பொறுமையை அப்பெண்ணுள்ளே வளர்த்தது எனலாம்.

மூன்றாவதாக சகிப்புத் தன்மை. இயேசு அப்பெண்ணை புறஇனத்தவள் என உணரவைத்து ஒரு நாயோடு ஒப்பிட்ட போதும் அந்த அவமானத்தை சகித்துக்கொண்டு மீண்டுமாக தன் நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். 

விடாமுயற்சி, பொறுமை,சகிப்புத்தன்மை நிரம்பிய கனானேயப்பெண்ணின் ஆழமான நம்பிக்கை இயேசுவால் பாராட்டப்பட்டது. அப்பெண் விரும்பிய படியே அவர் மகள் 
நலம் பெற்றார். 

என்னுடைய நம்பிக்கையின் ஆழம் என்ன? பலம் என்ன?நம்பிக்கையோடு விடாமுயற்சி உள்ளவராக, பொறுமைசாலியாக, சகிப்புத் தன்மை கொண்டவராக என்  வேண்டுதல் நிறைவேற நான் காத்திருக்கிறேனா?  என் நம்பிக்கை இத்தகைய அரிய குணங்களை என்னுள்ளே வளர்க்கிறதா? சிந்திப்போம்.

இறைவேண்டல்
அன்பான ஆண்டவரே! எங்களுடைய வாழ்வில் விடாமுயற்சியோடும் பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் இறைநம்பிக்கை வாழ்வில் நிலைத்திருக்க அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்