தளர்ச்சியிலும் பிறர் நலம்பெற தலைமைத்துவத்தை பயன்படுத்துவோமா! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலத்தின்  18 ஆம் திங்கள் 
I: எண்: 11: 4b-15
II: திபா 81: 11-12. 13-14. 15-16 
III: மத்: 14:13-21

தலைமைத்துவம் என்பது தன்னை முன்னிலைப் படுத்துவது அல்ல. மாறாக,  தன்னோடு பயணிக்கும் மற்றவர்களையும் முன்னிலைப்படுத்துவது. தலைவர்கள் என்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆண்டவர் இயேசு  இன்றைய நற்செய்தி வழியாக எடுத்துரைத்துள்ளார். 5000 மக்களுக்கு மேல் வயிறார உணவு உண்டனர் என்று வாசிக்கிறோம்.  பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக ஆண்களின் எண்ணிக்கை ஐயாயிரம் என்றால் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணவு உண்டனர். எப்படி இவை பாலைநிலத்தில் சாத்தியமாயிற்று. இதுதான் உண்மையான தலைமைத்துவம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் போதனையைக் கேட்கத் திரண்டுவந்த மக்கள் மாலை வேளையானதைக் கூடப் பொருட்படுத்தாமல் அவரின் போதனையில் ஆழ்ந்திருந்தனர். சீடர்கள் அவ்வேளையில் மக்கள் பசியாய் இருப்பதால் அவர்களை அனுப்பிவிடுமாறு இயேசுவிடம் கூறுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு கூறுவதால் சீடர்கள் மக்களின் மேல் அக்கறை எடுத்துக்கொள்வதாக நாம் எண்ணலாம். ஆனால் உண்மை என்னவென்றால் தாங்கள் மக்ளுக்கு உணவளிக்க வேண்டிய நிலை வந்து விடுமோ என்ற அச்சத்தில் தான் அவர்கள் அவ்வாறு கூறினார்கள். அவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்ட இயேசு ""நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்கிறார். இவ்வார்த்தை சீடர்களுக்கு நிச்சயம் திகைப்பாகவே இருந்திருக்கும். 

இத்தனை பேருக்கு உணவளிக்க எங்கே போவது என சீடர்கள் எண்ணினாலும், "எங்களிடம் ஐந்து அப்பம் தான் இருக்கிறது" என்று நங்களிடம் இருப்பதைத் தர முன்வருகிறார்கள் சீடர்கள். பிறர் கையை எதிர்பார்க்காமல் தன்னிடம் உள்ளதை முதலீடு செய்வதுதான் ஒரு தலைவரின் மிகச்சிறந்த பண்பு. தனக்கு இழப்பாக இருந்தாலும் பிறருக்கு பயன் தரும் என்ற மனநிலையோடு  நடப்பவனே உண்மையான தலைவன். அது அத்தலைவரின் கீழ் பணிபுரியும் பிறரையும் அவ்வாறு செய்யத்தூண்டும். இந்நிகழ்வின் மூலம் இயேசு தன் சீடர்களிடத்தில் உள்ள தலைமைப்பண்பைத் தூண்டி எழுப்புகிறார்.

ஆம் அன்பு நண்பர்களே பல வேளைகளில் நம்முடைய தலைப்பொறுப்பில் தளர்வுகள் ஏற்படும் போது, ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலை உருவாகும் போது தம்முடைய முன்னெடுப்பு மிக அவசியமாகிறது. ஆனால் பல வேளைகளில் நாம் தட்டுத்தடுமாறி போய்விடுகின்றோம். இன்றைய முதல் வாசகத்தில் காணும் மோசேயைப் போல புலம்பித் தவிக்கின்றோம். "என்னிடமிருந்து இந்தப் பொறுப்பை எடுத்துவிடுங்கள்" என்று விலகிச் செல்ல நினைக்கிறோம். அத்தகையமனநிலையைக் களைந்து தொடர்ந்து முன்னேற இன்று நம்மை அழைக்கின்றார் இயேசு. சோதனைகளிலும் தளர்ச்சியிலும் நம்மையே முதலீடு செய்து பிறர்நலம்பெற உழைக்கும் தலைமைப் பண்பை வளர்க்கத் தயாரா?

இறைவேண்டல்
இயேசு தலைவர்களாய் வாழ விரும்பும் நாங்கள் உண்மையான தலைமைத்துவ பண்புகளை உணர்ந்து பிறருக்காக உழைக்க வரமருளும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்