கடவுளின் கருவிகளா நாம்? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா காலம்-மூன்றாம் வெள்ளி 
I: திப: 9:1-20
II: திபா :116:1-2
III:யோவான் :6:52-59

உலகிலே பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும்  வாழ்வதற்குக் காரணம் உண்டு. ஆறறிவு படைத்த மனிதனுக்கு அக்காரணம் இன்னும் சிறப்பாக அமையும். அவ்வாறெனில் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் ஒவ்வொருவருக்கும் சிறப்பான திட்டம் உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது. பல வேளைகளில் இதுதான் நான் செய்யவேண்டியது; இதற்காகவே நான் பிறந்திருக்கிறேன் என நமக்கு நாமே திட்டங்கள் தீட்டி, காரணங்களைக் கண்டுபிடித்துக்கொள்வோம். ஆனால் கடவுளின் திட்டமோ முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.

கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி யூதமதம் சரிந்துவிடாமல் காப்பதே தான் வாழ்வதற்கான நோக்கம் என்ற எண்ணத்தில் வாழ்ந்தார் சவுல். ஆனால் தமஸ்கு நகரை நோக்கிய அவரது பயணத்தில் உண்டான கடவுளின் இடையீடு சவுலின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. சவுல் கடவுளின் கையில் ஒரு கருவியானார். புறவினத்து மக்களுடைய திருத்தூதராக மாற்றப்பட கடவுளால் மிகச்சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கருவியானார் அவர்.

பவுலின் மனமாற்ற அனுபவத்தைப் போல நம்மிலே பலர் இவ்வகை அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள். பல நற்செய்திக் கூட்டங்களில், முன்பு தவறான பாதைகளில் வாழ்ந்தவர்கள் ,கிறிஸ்தவரல்லாத பிற மறையைத் தழுவி அதிலேயே தீவிரமாக இருந்தவர்கள், கிறிஸ்துவையும் கிறிஸ்தவர்களையும் அவதூறாகப் பேசியவர்கள் பலர் மனமாற்றம் அடைந்து மறையை போதிப்பவர்களாக மாறிய அனுபவங்களைச் சாட்சியங்களாகப் பகிர்ந்து கொண்டதையெல்லாம் நாம் கேட்டிருக்கின்றோம். ஆனால் நம்முடைய வாழ்க்கைப்பாதை என்ன? எனக்குக் கடவுள் வகுத்தத் திட்டம் என்ன? என் வாழ்வுப்பயணத்தை இடைநிறுத்தி கடவுள் பலசமயங்களில் என்னிடம் சொல்ல வந்ததை நான் கவனித்துக் கேட்டேனா? என நம்மை நாம் ஆய்வு செய்திருக்கிறோமா?

நாம் அனைவருமே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நம்மை கடவுள் அவருடைய பணிக்குக் கருவியாகப் பயன்படுத்த விரும்புகிறார். பவுலாக மாறிய சவுலைப் போல நம்மை கருவிகளாக இறைவனின் கையில் தரத் தயாராவோமா?

இறைமகன் இயேசு தன்னை உணவாகத் தந்து மீட்பை உலகிற்கு வழங்கும் கருவியானார். நாமும் நம்மைக் கையளிக்கும் போது தனது உடலாலும் இரத்தத்தாலும் நமக்கு ஊக்கம் தருவார். எனவே மகிழ்வுடனும் துணிவுடனும் நம்மையே இறை கருவிகளாக அர்ப்பணிப்போம்.

இறைவேண்டல்
கடவுளே எங்கள் விருப்பத்தையல்ல உமது திட்டத்தை நிறைவேற்ற எம்மையும் கருவிகளாகப் பயன்படுத்தும் ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்