கடவுளைச் சோதியா நம்பிக்கை நமதாகட்டும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

16 பிப்ரவரி 2025                                                                                                                  
பொதுக்காலம் 6ஆம் வாரம் –  திங்கள்

யாக்கோபு: 1: 1-11
மாற்கு 8: 11-13


கடவுளைச் சோதியா நம்பிக்கை நமதாகட்டும்!

முதல் வாசகம்.

இந்த வாசகத்தில், புனித யாக்கோபு " சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு, " (இஸ்ரேலுக்கு வெளியே சிதறடிக்கப்பட்ட ஆரம்பகால யூத கிறிஸ்தவர்களுக்கு) இம்மடலை எழுதுகிறார். அவர் மூன்று முக்கிய கருப்பொருள்களைப் பற்றி பேசுகிறார்:

1.    சோதனைகளில் மகிழ்ச்சி

2.    கடவுளிடமிருந்து ஞானம்

3.    செல்வத்தின் ஆபத்து.


இதில் முக்கிய செய்தியாக அவர் வலியுறுதத்துவது யாதெனில், துன்பம் என்பது   அர்த்தமற்றது அல்ல. கடவுள் அதைப் பயன்படுத்தி நம்மை வலிமையான, முழுமையான கிறிஸ்தவர்களாக உருமாற்றுகிறார் என்கிறார்.

 நற்செய்தி.

நற்செய்தியில், பரிசேயர்கள் இயேசுவிடம் வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர். இயேசு அவருடைய வல்லமையை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள் . அவர்கள் அவரை நம்புவதற்காக அல்ல, மாறாக அவர்கள் அவரைச் சோதித்து, அவரை ஒருவித வலையில் சிக்க வைக்க விரும்பினர்.  இயேசு அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கவில்லை. மாறாக, இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.   

சிந்தனைக்கு.
 
இன்றைய நற்செய்தியில், பரிசேயர்கள் இயேசுவிடம் வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரை வலியுறுத்தினர் என்று மாற்கு கூறுகிறார். இது இயேசுவுக்கான ஒரு சோதனை எனலாம். ஆனால் கடவுள் மீதான நம்பிக்கை கட்டாயத்தின் பேரில் ஏற்படுவது அல்ல. இங்கே மனுவுருவான இயேசுவே அடையாளமாக, கண்ணெதிரே உள்ளார். பரிசேயரின் மந்த புத்திக்கு அது எட்டவில்லை. அவர்களுக்கு எல்லாம் தெரியும் எனும் ஆணவமே அவர்களின் மமதைக்குக் காரணம். எனவே, அவர்களுக்குக் கண்களுக்குப் புலப்படாத விண்ணரசைப் புரிய வைப்பது சிரமம் என்பதால் இயேசு விண்ணிலிருந்து அடையளம்  காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுக்கிறார். கண்ணுக்கு எதிரே அவர் நிகழ்த்திய வல்ல (அற்புத) செயல்களே போதுமானவை என்ற முடிவுக்கு வருகிறார். இயேசுவுக்கு ஏற்பட்ட இந்த சோதனையில் இயேசு அவசரப்படாமல் , நிதானமாகப் பதில் அளித்ததை அறிகிறோம்  

 உண்மையில், மேசியாவின் வருகையில் முதலில் மகிழ்ச்சியடைந்தவர்களாக பரிசேயர்  இருந்திருக்க வேண்டும், ஆனால் இயேசுவின் கடுமையான விமர்சகர்களாகவும் துன்புறுத்துபவர்களாகவும் மாறினர்.

அவர்களின் மந்த புத்தியை நினைத்து ‘இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அங்கிருந்து விலகிச் சென்றார் என அறிகிறோம்.

நிறைவாக, இயேசு அவர்களை "விட்டுச் சென்றார்" (மாற்கு 8:13) என்பது நமக்கு மற்றொரு விடயத்தையும்  கற்பிக்கிறது.  அவர்களை விட்டுச் சென்றதன் மூலம், இயேசு அவர்களின் ஆன்மாக்களின் ஆன்மீக வெறுமையை  உணர்த்துகிறார்.  அவர்களின் இதயக் கடினத்தன்மை காரணமாக கடவுள் அவர்களிடமிருந்து விலகி சென்றார் என்பதை மனதில் கொள்வோம். 
   
 
இன்றைய முதல் வாசகத்தில், “பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்” என்று அறிவுறுத்துகிறது.   உண்மையான நம்பிக்கைக்கு வெளிப்புற அடையாளங்கள் தேவையில்லை -  நாமே கிறிஸ்துவின் உண்மை அடையாளம் என்பதில் மகிழ்வுறுவோம்.   

இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே, உமது தூய ஆவியாரின்  வழிகாட்டுதலின் மூலம், நான் வாழும் இடத்தில் உமது  அடையாளமாக நான் விளங்க என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.
  

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Tamil Survey Popup Image