அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் வாழ்க்கை வரலாறு ! | Veritas Tamil
மௌனசாட்சியல்ல 'மறைசாட்சி'
தவக்காலம் என்பது வெறும் செபத்திற்கும் ஒறுத்தலுக்கும் உரிய காலம் மட்டுமல்ல, அது சமூக நீதிக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்களின் பாதையைப் பின் தொடரும் ஓர் உன்னத காலம் . அந்த வகையில், மதுரை எல்லிஸ் நகர் புனித செபஸ்தியார் கோயில் இளைஞர் இயக்கத்தினர், கடந்த மார்ச் 6-ஆம் தேதி நிகழ்த்திய "மௌனசாட்சி அல்ல மறைசாட்சி" என்ற மேடை நாடகம் இறைமக்களிடையே ஒரு பெரும் ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
அருட்பணியாளர் ஸ்டான் சுவாமியின் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நாடகத்திற்காக, இளைஞர் இயக்கத்தினர் கடந்த ஒரு மாத காலமாகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துப் பயிற்சியில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை மாலை சிலுவைப் பாதை மற்றும் திருப்பலி முடிந்தவுடன், தவக்காலச் சிறப்பு நிகழ்வாக இந்த நாடகம் அரங்கேறியது.
அருள்பணி. நித்தின் பிரபு அவர்களின் எழுத்தோவியத்தில் உருவான இந்த நாடகம், வெறும் கலை நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒரு மாமனிதரின் வாழ்வை கண்முன்னே நிறுத்திய ஒரு 'வாழும் நற்செய்தியாக' அமைந்தது.
பங்குத்தந்தை அருட்பணி. ஜோக்கின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பங்கு இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் இணைந்து இதில் நடித்தனர். வெறும் மேடை நடிப்பாக இல்லாமல், அருட்பணி. ஸ்டான் சுவாமியின்
இலட்சியங்களுக்கு உயிரூட்டும் விதமாக இவர்களின் நடிப்பு அமைந்திருந்தது.
இந்த நாடகத்தின் வெற்றிக்குப் பின்னால் பலரின் அயராத உழைத்திருக்கிறார்கள். நன்கொடையாளர்கள் மற்றும் நல்ல உள்ளங்கள் பலரின் தாராளமான பங்களிப்பு இந்த முயற்சிக்கு உரமிட்டது.
நாடகத்தின் இறுதியில் லென்ஸ் மைய இயக்குநர் அருள்பணி. ஸ்டீபன் (சே.ச.) அவர்கள் ஆற்றிய உரை அனைவரையும் சிந்திக்க வைத்தது. அருட்பணி. ஸ்டான் சுவாமியோடு, தான் பயணித்த அனுபவங்களையும், அவரோடு பகிர்ந்துகொண்ட தருணங்களையும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த அவர், நாடகக் கலையின் வழியே சமூக மாற்றத்திற்கு வித்திடும் இளைஞர்களைப் பாராட்டி வாழ்த்தினார்.
"மாற்றத்தின் காலம்" என அழைக்கப்படும் இத்தவக்காலத்தில், சமூக நீதிக்காகக் குரல் கொடுத்த ஒரு மனிதரின் வாழ்க்கையை நற்செய்தியாக மக்களிடம் கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது. இறுதியாக, இந்த நல்வாய்ப்பை வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்திய இளைஞர்கள், கலை வழியாக இறைப்பணியைத் தொடர உறுதியேற்றனர்.
முடிவில், திரளான மக்கள் இறுதி வரை அமர்ந்து நாடகத்தைக் கண்டு களித்ததுடன், இளைஞர்களின் திறமையையும் அவர்களின் சமூகப் பார்வையையும் மனதாரப் பாராட்டிச் சென்றனர்.