உண்மையை ஏற்கத் தயங்குவோருக்கு இறை வெளிப்பாடு புரியாது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 8 ஆம் வாரம் – சனி

யூதா 17, 20-25
மாற்கு  11: 27-33


உண்மையை ஏற்கத் தயங்குவோருக்கு இறை வெளிப்பாடு புரியாது!

முதல் வாசகம்.

திருத்தூதர் யூதா, கிறிஸ்தவர்குள்க்கு இறைவனில் நிலைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறார். திருத்தூதர்கள் முன்கூட்டியே கூறிய எச்சரிக்கைகளை நினைவில் கொள்ளச் சொல்லி, கடைசி காலங்களில் ஏளனம் செய்பவர்கள் தோன்றுவார்கள் என அறிவுறுத்துகிறார்.
அவர் நம்பிக்கையாளர்களை ,
•    தூய இறை நம்பிக்கையில் வளரவும், 
•    தூய ஆவியால் இறைவேண்டல் செய்யவும் 
•    இறைவனின் அன்பில் நிலைத்திருக்கவும், 
•    இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தை நாடி நிற்கவும்  ஊக்குவிக்கிறார். 
மேலும் சந்தேகத்தில் இருப்பவர்களை இரக்கத்துடன் காப்பாற்றவும், பாவத்தின் பாதையிலிருந்து அவர்களை மீட்டெடுக்கவும் அழைக்கிறார்.
இறுதியில், தம்மை இடறாமல் காத்து மாட்சியோடு காக்க  வல்ல இறைவனைப் புகழ்ந்து, மாட்சி, ஆட்சி, அதிகாரம் அனைத்தும் ஆண்டவருக்கே ஊழிக் காலந்தொட்டு இன்றும் என்றென்றும் உரியன, ஆமென்!  என்று மகிழ்ச்சியுடன் போற்றுகிறார்.

நற்செய்தி.

இப்பகுதியில், இயேசு எருசலேம் ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தபோது தலைமை குருக்கள், மறைநூல் அறிஞர்கள் மற்றும் மூப்பர்கள் அவரை அணுகி, “இதைச் செய்ய உமக்கு என்ன அதிகாரம்?” என்று கேட்கிறார்கள். அதற்கு இயேசு நேரடியாக பதில் சொல்லாமல், “யோவானின் திருமுழுக்கு விண்ணிலிருந்ததா? மனிதரிடமிருந்ததா?” என்று அவர்களிடம் கேட்கிறார்.
அவர்கள் மக்களைப் பயந்து சரியான பதில் சொல்ல முடியாமல், “எங்களுக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள். அப்போது இயேசுவும், “நானும் எந்த அதிகாரத்தால் இதைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்கிறார்.
  
சிந்தனைக்கு.

அக்காலத்தில், உரோமானிய அதிகாரிகள் எருசலேமை சிவில் முறையில் ஆண்டு வந்தபோதிலும், மதத் தலைவர்கள் ஆலயம் மற்றும் யூத சட்டங்களை அமல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருந்தனர்.  மதத் தலைவர்களால் மக்களைக் கைது செய்ய முடிந்தது, ஆனால் யாரையும் மரணதண்டனைக்கு உட்படுத்தும் அதிகாரம் அவர்களிடம் இருக்கவில்லை—அந்த அதிகாரத்தை அவர்கள் இறுதியில் இயேசுவுக்கு எதிராகப் பயன்படுத்த முயன்றனர். 


இந்த பின்னணியில்தான், இன்றைய நற்செய்தியில், எருசலேமில், இயேசுவின் அதிகாரத்தைப் பற்றி யூத தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்: அவர்கள், “நீர் எந்த அதிகாரத்தால் இவற்றை செய்கிறீர்?” என்று கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையை அறிய விரும்பவில்லை; இயேசுவை சிக்கவைக்கவே முயல்கிறார்கள். அதனால் இயேசுவும் அவர்களுடைய எண்ணத்தின் நிலையை வெளிப்படுத்துகிறார்.

திருமுழுக்கு யோவானின் வருகையையும்   பணியையும்  அவர்கள் ஏற்கவில்லை. ஏனெனில் உண்மையை ஏற்றுக்கொண்டால் மனமாற்றமும் தேவையாகிவிடும். அவர்கள் மக்களுக்கு அஞ்சினார்களேயொழிய  இறைவனுக்கு அஞ்சவில்லை.

இன்றும் நாமும் சில நேரங்களில் இப்படித்தான் நடக்கிறோம். இறைவனின் வார்த்தையை கேட்கிறோம்; ஆனால் அதை வாழ்வில் செயல்படுத்த தயங்குகிறோம். “எது சரி” என்று தெரிந்தும் அதை பிறருக்குப் பயந்து ஏற்க மறுக்கிறோம். 
 
முதல் வாசகத்தில் புனித யூதா நமக்கு அழகான அறிவுரையை அளிக்கிறார்:
“உங்கள் தூய நம்பிக்கையில்  வளருங்கள்; இறைவனுடைய அன்பில் நிலைத்திருங்கள்” என்று கூறுகிறார். உண்மையான நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை அல்ல; அது இறைவனின் அன்பில் நிலைத்து வாழ்வதாகும்.
இன்றைய வாசகங்கள் நமக்கு மூன்று அழைப்புகளைத் தருகின்றன:
1.    உண்மையை ஏற்கும் தாழ்மை
நம் பிடிவாதத்தை விட்டுவிட்டு, இறைவன் பேசும்போது செவிகொடுக்க வேண்டும். 
2.    நம்பிக்கையில் வளர்ச்சி
இறைவேண்டல், இறைவார்த்தை, திருப்பலி ஆகியவற்றின் மூலம் ஆன்மீகத்தில், அன்பில் வளர வேண்டும். 
3.    இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள என்றும் தயக்கம் கூடாது.

நிறைவாக, எருசலேமில் நிக்ந்த இந்த நிகழ்வு, இயேசுவின் தெய்வீக அதிகாரத்தையும், யூத தலைவர்களின் இரட்டை மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது. உண்மையை ஏற்கத் தயங்குகிறவர்களுக்கு இறை வெளிப்பாடு புரியாது என்பதையும் இந்த பகுதி உணர்த்துகிறது.

இறைவேண்டல்.

ஆண்டவரே, உண்மையை மறுக்கும் மனதை அல்ல, உண்மையை ஏற்கும் திறந்த இதயத்தை எனக்கு என்றும் அருள்வீராக. ஆமென்.
     

ஆர். கே. சாமி