தாயின் கரங்கள் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
அந்தச் சிறிய நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பதவிக்கென நேர்முகத் தேர்வுக்கு அவன் சென்றிருந்தான். கல்லூரியில் முதல் மதிப்பெண் வாங்கியிருந்த அவனிடம் கேட்ட கேள்விகளுக்கும் தயக்கமின்றி பதில் சொன்னான் அவன். இறுதியாக அனைத்துக் அவனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உன் தந்தை என்ன வேலை செய்கிறார், என்று.
'எனக்கு ஒரு வயதாக இருக்கும்போதே என் தந்தை இறந்து விட்டார். என் தாய்தான் என்னைச் சிரமப்பட்டுப் படிக்க வைத்தார் என்று இவன் பதில் கூறினான். உன் தாய் என்ன வேலை செய்கிறார் எனக் கேட்கப்பட்டது. என் தாய், சலவைத்தொழில் செய்கிறார். எல்லா நேரமும் துணிகளைத் துவைப்பதிலும், அவைகளை இஸ்திரி போட்டுத் தேய்ப்பதிலும் செலவிட்டு, என்னைப் படிக்க வைத்தார். நான் எப்போதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறி, அவருக்கு உதவி செய்ய என்னை அனுமதிப்பதில்லை' என்றார் மகன்.
நேர்முகத் தேர்வாளர் கூறினார், "இன்று மாலை நீ உன் தாயின் கைகளைப் பிடித்து, சுத்தமாகத் தண்ணீரில் கழுவிவிட்டு, நாளை இங்கு வந்து என்னைப் பார்" என்று.
மகனும் நம்பிக்கையிழந்தவனாக, வீட்டிற்குச் சென்று, துணி துவைத்துக் கொண்டிருந்த தாயின் கைகளைப் பிடித்துக் கழுவத் துவங்கினான். அப்போதுதான் தெரிந்தது, தன் தாயின் கைகள் குளிர்ந்த நீரில் பட்டு எவ்வளவு சொர சொரப்பாகவும், வெடித்துப்போயும் உள்ளன என்று. உடனே தன் உடைகளை மாற்றிவிட்டு, தாய்க்குத் துணையாக, துணிகளைத் துவைக்கத் துவங்கினான். தாய்க்கு மனதிற்குள் மகிழ்வாக இருந்தது. இரவு முழுவதும் மகனால் தூங்க முடியவில்லை. தன்னைப் படிக்க வைக்க தாய் இவ்வளவு தூரம் தன்னை வருத்திக் கொண்டார்களா? என்பதை எண்ணிப் பார்த்தபோது, கண்களில் நீர் கொட்டியது.
மறுநாள் அவன் மீண்டும் நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது, இரவு முழுவதும் தூங்காத அவன் கண்கள் சிவந்திருந்தன. நேர்முகத் தேர்வாளர் அவனிடம், "உன்னைப் பார்த்ததுமே உன்னுள் எழுந்துள்ள மாற்றம் புரிகிறது. மற்றவரின் துன்பத்தைப் புரிந்துகொண்டு அவர்களுக்காக அழுபவரால்தான், தன் உடன் உழைப்பாளர்களை நன்முறையில் நடத்த முடியும். உன் தாயின் பெருமையை இப்போதுதான்
முற்றிலுமாக உணர்ந்துள்ளாய். உன் தாயிடமிருந்து கற்றவைகளை இந்த நிறுவனத்திற்காகப் பயன்படுத்து. இன்றே உன்னை இந்த நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கிறோம்" என்றார்.
கருவில் சுமந்த உன்னை என் வாழ்நாள் வரை மனத்தில் சுமந்து கொண்டிருக்கிறேன்.
ஏனெனில், உன் கடமைக்கு அல்ல; உன் பாசத்திற்கு அம்மா.
ஓர் அம்மாவின் அன்பு!
"வாழ்வில் நான் உயர்ந்திட படிக்கற்கள் அமைத்தாய்
வீடு திரும்பி வர பாதையைக் காட்டினாய்
என் இதயத்தினுள் நுழைந்து, அதை ஒழுங்குபடுத்த
நேரம் ஒதுக்கினாய்
வாழ்வில் நான் வளர்ந்திட வேர்கள் தந்தாய்
வானில் நான் பறந்திட சிறகுகளும் தந்தாய் நீ என்னை நம்பியதால், கனவு காண நான் கற்றுக் கொண்டேன் இவ்வுலகில் வேறெந்த சக்தியும் இதற்கிணையில்லை
வேறெந்த கருவூலமும் இதற்கு நிகரில்லை
அதுதான் ஓர் அம்மாவின் அன்பு.''
-அமெரிக்கக் கவிஞர் ஜிம் பிரிக்மன்