குடும்பங்கள், பெண்கள், இளைஞர்கள்: திருஅவையின் மறைப்பணியில் இணை பொறுப்பாளர்கள் | FABC | Veritas Tamil
ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) பொதுநிலையினர் மற்றும் குடும்ப அலுவலகம் (Office of Laity and the Family – OLF), ஜூலை 21 அன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஹோட்டல் முலியாவில் நடைபெற்ற 12ஆவது FABC பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில், குடும்பங்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுநிலையினரின் திருஅவைப் பணிப் பங்கேற்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
அந்த அறிக்கையில், ஆசியத் திருஅவையின் எதிர்காலம் ஆயர்கள், அருள்பணியாளர் கள் மற்றும் துறவியர்களின் பணியால் மட்டும் அமையாது; மாறாக, குடும்பங்கள், பங்குகள் மற்றும் சமூகங்களில் வாழும் பொதுநிலைக் கத்தோலிக்கர்களின் உயிருள்ள இறைசாட்சியத்தாலும் அது கட்டியெழுப்பப்படும் என்று வலியுறுத்தப்பட்டது.
வங்காளதேசத்தின் பரிஷால் மறைமாவட்ட ஆயரும், அந்த அலுவலகத்தின் தலைவருமான ஆயர் இம்மானுவேல் கே. ரோசாரியோ அவர்களும், நிர்வாகச் செயலரான மோமோகோ நிஷிமுரா (SEMD) அவர்களும் இணைந்து அறிக்கையை வழங்கினர். குடும்பங்களை வலுப்படுத்துதல், பொதுநிலையினரின் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் ஒன்றிணைந்த திருஅவைப் பயணத்தை (Synodality) வளர்க்கும் பல்வேறு மேய்ப்புப் பணிகளை அவர்கள் விளக்கினர்.
இந்த அறிக்கை, பேரவையின் மையக் கருத்தாகிய "ஒன்றிணைந்த மனமாற்றம் என்பது அமைப்புகளிலிருந்து அல்ல; மாறாக, விசுவாசத்தில் ஒன்றாக நடக்கும் மக்களிடமிருந்தே தொடங்குகிறது" என்ற செய்தியை பிரதிபலித்தது.
பொதுநிலையினர் மற்றும் குடும்ப அலுவலகம், குடும்பங்கள், பெண்கள், இளைஞர்கள், பொதுநிலையினர் மற்றும் அடிப்படை திருஅவைச் சமூகங்களை (Basic Ecclesial Communities – BECs), இறைமக்களின் பல்வேறு வெளிப்பாடுகளாகக் கருதி, திருஅவையின் பணியில் ஒவ்வொருவரும் தனித்துவமான பங்களிப்பை வழங்கும் வகையில் தனது மேய்ப்புப் பார்வையை விரிவுபடுத்தியுள்ளது.
அலுவலகத்தின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாக, 2023ஆம் ஆண்டின் FABC பாங்காக் ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு திருமண வாழ்விற்கான கிறிஸ்தவத் தயாரிப்பு (Catechumenal Pathways for Married Life) குறித்த கருத்தரங்கமும் பயிற்சியும் நடத்தப்பட்டது. திருமணத் தயாரிப்பு என்பது திருமணத்திற்கு முன் வழங்கப்படும் சில வகுப்புகளாக மட்டும் இல்லாமல், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து இணைந்து பயணிக்கும் மேய்ப்புப் பணியாக அமைய வேண்டும் என்பதையும், வேகமாக மாறிவரும் சமூகச் சூழலில் தம்பதிகள் நற்செய்தியின் நிலையான சாட்சிகளாக விளங்க உதவ வேண்டும் என்பதையும் இந்த முயற்சி வலியுறுத்துகிறது.
மேலும், "இன்றைய ஆசியாவில் கிறிஸ்தவக் குடும்பத்தின் பணி" என்ற தலைப்பில் ஒன்றிணைந்த திருஅவை மாநாட்டையும் அலுவலகம் ஏற்பாடு செய்தது. இடம்பெயர்வு, பொருளாதார நிச்சயமின்மை, மாறிவரும் கலாச்சார மதிப்பீடுகள் மற்றும் பல்சமயச் சூழல் போன்ற சவால்களை எதிர்கொள்ளும் குடும்பங்களின் வாழ்க்கை அனுபவங்களைக் கேட்டு அறிய உள்ளூர் திருஅவைகள் அழைக்கப்பட்டன. குடும்பங்கள் வெறும் மேய்ப்புப் பணியின் பயனாளிகளாக அல்லாமல், நற்செய்தி அறிவிப்பின் செயற்பாட்டு தூதர்களாக மாற வேண்டும் என்று அந்தக் கூட்டம் வலியுறுத்தியது.
அதேவேளை, திருஅவையில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதும் அலுவலகத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டது. FABC-யின் 50ஆம் ஆண்டு நிறைவும், ஆசியக் கண்டத் திருஅவைச் சந்திப்பின் சிந்தனைகளையும் அடிப்படையாகக் கொண்டு, பெண்கள் திருஅவைத் தலைமைத்துவம், மேய்ப்புப் பணி மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் அதிக பங்காற்றுவதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டன. அதே நேரத்தில், ஆசியாவின் பல்வேறு கலாச்சாரச் சூழல்களும் கருத்தில் கொள்ளப்பட்டன.
இளைஞர்களும் இந்த அலுவலகத்தின் பணியில் மைய இடத்தைப் பெறுகின்றனர். வியட்நாமின் டாபாவோ (Tàpao) நகரில் நடைபெற்ற FABC இளைஞர் கருத்தரங்கில், சீடத்துவம், தலைமைத்துவம் மற்றும் மறைப்பணிச் சாட்சி ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அறிக்கை குறிப்பிட்டது. பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் டிஜிட்டல் உலகம் ஆகிய அனைத்திலும் நற்செய்தியை எடுத்துச் செல்ல இளம் கத்தோலிக்கர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
குடும்ப வாழ்வும் படைப்பைப் பாதுகாப்பதும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும் அறிக்கை எடுத்துரைத்தது. ஒருங்கிணைந்த சூழலியல் (Integral Ecology) குறித்த திருஅவையின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, எளிமை, ஒற்றுமை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறையை குடும்பங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அலுவலகம் ஊக்குவித்து வருகிறது.
அறிக்கையின் நிறைவில், பொதுநிலையினர் வெறும் ஒத்துழைப்பாளர்களாக அல்லாமல், திருஅவையின் பணிக்குப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளும் இணைச் செயல்பாட்டாளர்களாக அங்கீகரிக்கப்படும் சமூகங்களை ஆசியத் திருஅவைகள் தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்று அலுவலகம் அழைப்பு விடுத்தது.
"ஒன்றிணைந்த மனமாற்றமும், ஆசியாவில் பாலங்களாகவும் பாலங்களை உருவாக்குவோராகவும் இருப்பதற்கான மறைப்பணியும்" என்ற கருப்பொருளில் தொடர்ந்து நடைபெற்று வரும் 12ஆவது FABC பேரவையில், ஆசியத் திருஅவையின் எதிர்காலம் மறைமாவட்டங்களிலும் நிறுவனங்களிலும் மட்டுமல்ல; குடும்பங்கள், அடிப்படை திருஅவைச் சமூகங்கள் மற்றும் பங்குச் சமூகங்களில் நாள்தோறும் வாழப்படும் நற்செய்திச் சாட்சியத்தின் வழியாகவே வடிவமைக்கப்படும் என்பதை இந்த அறிக்கை தெளிவாக எடுத்துரைத்தது.
