வாழ்வியலை மையமாகக் கொண்ட ஆசிய இறையியலை உருவாக்க FABC அழைப்பு | Veritas Tamil

ஆசியாவில் இறையியல் என்பது கல்வி நிறுவனங்களிலும் அறிவுசார் விவாதங்களிலும் மட்டுமே கட்டுப்பட்டு நிற்காமல், மக்களின் வாழ்வனுபவங்களிலிருந்து வளர வேண்டும் என்று ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) இறையியல் விவகாரங்களுக்கான அலுவலகம் (Office of Theological Concerns – OTC) வலியுறுத்தியுள்ளது.

ஜூலை 21 அன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஹோட்டல் முலியாவில் இடம்பெற்ற FABC-யின் 12-வது நிறைவிறுதிப் பேரவையில் அலுவலகத்தின் அறிக்கையை வழங்கிய, இந்தோனேசியாவின் பங்க்கால் பினாங் மறைமாவட்ட ஆயரும், FABC இறையியல் விவகாரங்களுக்கான அலுவலகத்தின் தலைவருமான ஆயர் அத்ரியானுஸ் சுனார்கோ, OFM, இறையியல் என்பது மக்களின் குரலைக் கேட்டு, உள்ளூர் கலாச்சாரங்களுடன் உரையாடி, ஆசியாவின் காலத்தின் அடையாளங்களை பகுத்தறிவதன் மூலம் திருஅவையின் பணியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்று கூறினார்.

இறையியலாளர்கள் வெறும் கல்வியாளர்கள் மட்டுமல்ல; அவர்கள் "இறைமக்களுடன் இணைந்து பயணிக்கும் துணைப் பயணிகள்" என்றும் அவர் குறிப்பிட்டார். பல்வேறு சமயங்கள், தொன்மையான கலாச்சாரங்கள், வேகமாக மாறிவரும் சமூகச் சூழல் மற்றும் சிக்கலான வாழ்வியல் சவால்கள் நிறைந்த ஆசியக் கண்டத்தில், நற்செய்தியின் செய்தி எவ்வாறு மக்களின் வாழ்வில் அர்த்தமுள்ளதாக வெளிப்படுகிறது என்பதை திருஅவை உணர்ந்து செயல்பட இறையியலாளர்கள் துணைபுரிகின்றனர் என்றும் அவர் கூறினார்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட FABC-யின் அடிப்படை நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்திய இவ்வறிக்கை, ஆசியத் திருஅவை தனது சொந்த இறையியல் குரலை, ஆசிய மக்களுடனும் அவர்களின் கலாச்சாரங்களுடனும் சமய மரபுகளுடனும் உரையாடுவதன் மூலம் உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

பிற பகுதிகளில் உருவாக்கப்பட்ட இறையியல் சிந்தனைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, கத்தோலிக்கத் திருஅவையின் உலகளாவிய மரபிற்கு உண்மையாய் இருந்து, உள்ளூர் திருஅவைகளின் வாழ்வனுபவங்களிலிருந்து உண்மையான ஆசிய இறையியல் உருவாக வேண்டும் என்றும் அறிக்கை தெரிவித்தது. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் Ad Gentes ஆவணத்தால் ஊக்கமளிக்கப்பட்ட OTC, ஒவ்வொரு ஆயர் பேரவையும் தங்களது மேய்ப்புப் பணி மற்றும் கலாச்சாரச் சூழலை அடிப்படையாகக் கொண்ட இறையியலை வளர்க்க ஊக்குவித்து வருகிறது.

இந்த அலுவலகத்தின் கூட்டிணைப்பு பணியையும் அறிக்கை எடுத்துக்காட்டியது. இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இலங்கை, தைவான், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இறையியலாளர்களை ஒன்றிணைத்து, OTC ஆசிய அளவிலான இறையியல் சிந்தனை மற்றும் பகுத்தறிவிற்கான வலையமைப்பாக உருவெடுத்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில், சமயச் சுதந்திரம், மனித வாழ்வின் மாண்பு, சுற்றுச்சூழல் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கான திருஅவையின் பதில் போன்ற தலைப்புகளில் பல ஆய்வுகளை வெளியிட்டுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட The Asian Face of Synodality (FABC Papers 191) என்ற நூல், ஆசியாவின் தனித்துவமான கலாச்சார, சமூக மற்றும் சமயச் சூழல்கள் திருஅவையின் ஒன்றிணைந்த பயணத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை ஆராய்கிறது.

இந்த வெளியீடுகளின் பின்னணியில் உள்ள செயல்முறையும் ஒன்றிணைந்த பயணத்தின் வெளிப்பாடே என்று அறிக்கை சுட்டிக்காட்டியது. ஆராய்ச்சியைத் தொடங்குவதற்கு முன் இறையியலாளர்கள் செபம், அமைதி, கூட்டுப் பகுத்தறிவு ஆகியவற்றில் ஈடுபட்டு, பின்னர் ஆய்வுகள் மேற்கொண்டு, வரைவு ஆவணங்களைப் பகிர்ந்து, ஒன்றிணைந்து அவற்றை மேம்படுத்துகின்றனர். இந்த முறையை அலுவலகம் "ஒன்றிணைந்த இறையியல் சிந்தனை" (Synodal Theologizing) என்று குறிப்பிடுகிறது.

அறிக்கையின் குறிப்பிடத்தக்க உருவகங்களில் ஒன்று, எம்மாவூஸ் வழியில் நடந்த சீடர்களின் நற்செய்தி நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. "குளிர்ந்த இதயங்கள், குளிர்ந்த பார்வைகள், குளிர்ந்த கால்கள்" என்ற நிலையிலிருந்து, கிறிஸ்துவால் தீப்பற்றும் இதயங்களாகவும், சந்திப்பின் மூலம் திறக்கப்படும் கண்களாகவும், மறைப்பணிக்குத் தயாராகும் கால்களாகவும் மாறுமாறு அது திருஅவையை அழைக்கிறது.

OTC-யின் பார்வையில், ஒன்றிணைந்த பயணம் என்பது திருஅவை நிர்வாகத்தின் புதிய மாதிரி மட்டுமல்ல; அது கிறிஸ்துவோடு இணைந்து பயணிக்கும் சமூகமாக திருஅவையை மாற்றும் ஓர் ஆன்மீக மனமாற்றமாகும்.

மேலும், இறையியல் என்பது ஆய்வுகளால் மட்டுமல்ல; கூட்டுச் செபம், நற்கருணைக் கொண்டாட்டம், சகோதரத்துவ உறவு மற்றும் ஒருவரையொருவர் செவிமடுத்தல் ஆகிய அனுபவங்களாலும் வடிவமைக்கப்படுகிறது என்றும் அறிக்கை வலியுறுத்தியது. உண்மையான இறையியல் சிந்தனைக்கு இவையே அடித்தளமாக அமைகின்றன என்றும் கூறப்பட்டது.

"இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்" (யோவான் 1:50): ஒன்றிணைந்த மனமாற்றமும் ஆசியாவில் பாலங்களாகவும் பாலம் அமைப்பவர்களாகவும் இருக்கும் மறைப்பணியும் என்ற கருப்பொருளில் தொடர்ந்து நடைபெறும் FABC நிறைவிறுதிப் பேரவையின் சூழலில், இறையியல் விவகாரங்களுக்கான அலுவலகம், பேசுவதற்கு முன் செவிமடுக்கவும், கற்பிப்பதற்கு முன் கற்றுக்கொள்ளவும், ஆசிய மக்களுடன் இணைந்து நற்செய்தியை அறிவிக்கவும் தயாராக இருக்கும் தனித்துவமான ஆசிய இறையியலை வளர்ப்பதில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.

Tamil Survey Popup Image