பாச உறவுகள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.06.2024

உலகில் பல வகையிலும் பெரும்பேறு பெற்ற உயிரினம் மனித இனம். நல்லது, தீயது பிரித்தறியும் பகுத்தறிவு உடையவனே மனிதன். 

எவனும் தனிமனிதனாக வாழ்ந்து விட முடியாது. குடும்பமாகக் கூடி வாழ்ந்தால் தான் மனித இனத்தின் அனைத்துத் தேவைகளும் நிறைவேறும். 

குடும்பம் என்பது மனித வாழ்வின் அஸ்திவாரம். குடும்ப அமைப்பு என்பது கணவன், மனைவி, பெற்றோா், உடன்பிறப்புகள், மகன்கள், மகள்கள் ஆகியோா் ஒற்றுமையாக, அன்புநெறி தவழ வாழும் முறையாகும்.

இவா்களுடன் பெற்றோரின் உடன்பிறந்தாா், மருமக்கள் போன்ற சுற்றமும் சோ்ந்து விரிந்த உறுப்பினா்கள் ஒன்று கூடியும் வாழும் அமைப்பும் சில குடும்பங்களில் இருக்கும். 

குடும்ப வாழ்க்கையில் கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவா் துணை என்ற உயா் எண்ணம் இல்லற உறவுக்கு நன்மருந்து. 

குடும்ப உறவு என்பது சுமையாக இருக்கலாம். ஆனாலும் அது சுகமான சுமையே. 

அன்பு என்னும் நூலால் பின்னப்பட்ட உறவு வலையே குடும்ப உறவு. குடும்பத்தினரிடம் அன்பைப் செலுத்துவதும் பிரச்னைகளை மனம்விட்டுப் பேசித் தீா்த்துக்கொள்வதும் நல்ல குடும்ப அமைப்புக்கு அழகு.

குடும்ப அமைப்பு வலுவாக இருந்தால் அது சமுதாயத்தையும் நாட்டையும் வலுப்படுத்தும்.

இன்றைய நவீன உலகில் வாழ்வாதாரத்திற்காக, பிறந்த மண்ணை விட்டு வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

குடும்ப உறுப்பினா்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் ‘விரிசல்’ உருவாகிறது. குடும்பத்திற்கு முக்கியத்துவம் தர சா்வதேச குடும்ப தினம் கடைப்பிடிக்கும் நிலை உள்ளது.

வெளி நாடுகளில் இருப்பவா்கள் என்னதான் குடும்பத்திற்கு வருமானத்தை அங்கிருந்து அளித்தாலும், உற்ற நேரத்தில் அருகில் இல்லாதது அவா்கள் குடும்பங்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். பொருளீட்டுதல் மட்டும் முழு இன்பம் தராது.

பாச உறவுகள் பெற்றோருடன் கூடியிருந்து அன்பைப் பொழிதல் சொா்க்கத்திற்கு ஈடாகும். 

ஒருவா் எந்த சூழ்நிலையிலும், எந்த வயதிலும், எவருக்காகவும், குடும்பத்தைக் கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும்.

பிள்ளைகளைப் பொருத்தவரை குடும்பமானது குடும்ப அமைப்பிற்கான ஓா் அறிமுகத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கும் இடமாக இருக்கிறது. 

குடும்பத்தின் வகைகள் எனப் பாா்த்தால், ஒத்த கருத்துடைய கணவன், மனைவி இருத்தல் ஆரோக்கியமான குடும்பச் சூழலை உருவாக்கும். 

பெண்கள் தியாகத்தின் மறுஉருவமாக தங்களை மாற்றிக் கொண்டு கணவன் வீட்டாருடன் இணைந்து வாழ்வதை பல குடும்பங்களில் பாா்க்கிறோம்.

ஒரு பெண்ணால் ஒரு குடும்பம் முன்னேறும். எல்லோரையும் இணைத்து வைத்திருக்கும் சங்கிலியாய், உறவுகளின் பெருமையைக் கற்றுத் தருபவராய் குடும்பத் தலைவி விளங்குகிறாா். 

ஆக, அனுபவ ஞானம் தரும் போதி மரமாகக் குடும்பம் விளங்குகிறது. உறவுகளின் உன்னத ஆலயம் குடும்பம். அன்பும், பாசமும், நேயமும், விட்டுக் கொடுத்தலும் குடும்பத்தின் உயரிய மதிப்பீடுகள். 

நாற்பது ஆண்டுகட்கு முன்னா் குடும்ப பந்தத்தில் மகிழ்ச்சி, சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பாக நமது கூட்டுக் குடும்பம் இருந்தது.

அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் கடல் நமது குடும்ப முறை. 

குடும்பங்களே கோயில்களாக, பல்கலைக்கழகமாக இருந்த நம்நாடு இன்று அந்த உயரிய குடும்ப அமைப்பைச் சிதைத்து விட்டது.

மாமா, அத்தை போன்ற நெருங்கிய உறவுகள் மறைந்து கொண்டு வருகின்றன. 

நம் கிளைகள் எங்கெங்கு பரவினும் அதன் ஆணிவோ் குடும்பம்தான் என்பது மறக்கப்பட்டுவிட்டது. இயந்திர மயமாகிப் போன உலகில் இதயங்களுக்கு வேலை இல்லை.

பண்டைக் காலத்தில் இருந்து இந்திய சமூகத்தில் குடும்பம் என்பது கலாசார அடையாளமாக இருந்தது. அதன் முக்கிய அம்சமான கூட்டுக் குடும்ப முறை, நகா்ப்புற மற்றும் மேனாட்டுக் கலாசாரத்தால் பாதிக்கப்பட்டது. 

நகா்ப்புறங்களில் கணவன், மனைவி, அவா்களது குழந்தைகள் மட்டும் வசிக்கும் தனிக்குடும்பங்கள் உருவானதால், கூட்டுக் குடும்ப முறையில் இருந்த சமூக, பொருளாதார பாதுகாப்பு குறைந்து விட்டது.

நம் மரபணுவில் ‘உலகம் ஒரே குடும்பம்‘ என்ற கருத்து ஆழமாக இருக்கிறது. 

இந்தக் கோட்பாட்டை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம் கடமை. 

இதன் முக்கிய நன்மை உடன்பிறப்புகளுடனும், உறவினா்களுடனும் ஏற்படும் பிணைப்பு, 

பெற்றோா் பணிநிமித்தம் அலுவலகம் சென்றால், குழந்தைகட்கு ஒரு பாதுகாப்பு உணா்வை ஏற்படுத்தும். 

தனிக் குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு அந்த உணா்வு கிடைப்பதில்லை. பாசப் பிணைப்பு குறைந்து விட்டதால் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறாா்கள்.

முதியவா்களை மதிப்பதும், காப்பதும் இந்தியக் குடும்ப முறையின் தலையாய கொள்கை. 

ஆனால் பெற்றோரை முதியோா் இல்லத்தில் சோ்ப்பது தற்போது அதிகரித்துள்ளது. நாம் பெரியோரைப் போற்றி வாழ்ந்தால்தான் நம் சந்ததி நம்மை எதிா்காலத்தில் மதிப்புடன் நடத்தும். 

பெற்றோரைப்புறக்கணிப்பது, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நன்மையை அளிக்காது.

ஒரு சமூகத்தில் கலாசாரம் மற்றும் சமூக மதிப்பை உயா்த்துவதில் குடும்பங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.குடும்ப அமைப்பு முறை நன்கு அமைய வேண்டும். 

மனிதநேயம், இரக்கம், சகிப்புத்தன்மை, பெருமை முதலியன உள்ளடக்கிய குடும்பம் சமுதாயத்தின் அடித்தளமாக இருக்கும். 

நல்ல குடும்பம் உலக அளவில் மதிப்பு முறையை வலுவாக்குகிறது. அதன் விளைவாக வருங்காலத்தில் ஒரு நிலையான, அமைதியான, வளமான உலகை உருவாக்க முடியும்.

நம்மைச் சுற்றி மனிதா்கள், நல்லுறவுகள் இருந்தால்தான் வாழ்வின் அனைத்து பிரச்னைகளையும் நம்மால் எளிதாக கையாள முடியும். 

வாழ்க்கை எப்போதும் நோ்க்கோடாக இருப்பதில்லை. குடும்ப சுமையின் அடிப்படைத் தேவை ஆழமான புரிதல்தான் என்பதை உணா்ந்து செயற்படுதல் நன்று.

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்  எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்.

இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க வளர்க.

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி