கனிந்த உள்ளம் கடவுளின் இல்லம்! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil


நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருநொடிப்பொழுதும் பலவித மன அழுத்தங்களோடும், மனக்காயங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எல்லோருமே மனவருத்தத்தோடு வாழ்ந்தோமென்றால், யாருக்கு யார் ஆறுதல் தர முடியும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. நம்மை படைத்தவர், நாளும் பராமரித்துக் கொண்டிருப்பவர் நமது மனக்காயங்களுக்கு, மனப்பாரங்களுக்கு மருந்திடுவார் என்பது மறுப்பதற்கில்லை. ஆக ஆறுதல் கொடுப்பதற்கு ஆண்டவர் இருந்தாலும் நமக்கு யாராவது ஆறுதல் கூறமாட்டார்களா என்ற ஏக்கத்தோடு நம்மிலும் பலர் யாரையாவது தேடிக் கொண்டுதானே இருக்கிறோம்? ஆண்டவரிடம் இருந்த கனிந்த உள்ளம் நம்மிடம் இருந்தால் மட்டுமே நம்மாலும் மற்றவர்களுக்கு ஆறுதல் கொடுக்க முடியும். எனவே தன்னையே நமக்காக கையளித்த இயேசுவின் தாராள உள்ளத்தையும், கனிந்த இதயத்தையும் நமதாக்குவோம். அதுவே நமக்கு நிறைவான ஆசீரைப் பெற்றுத்தரும் என்பதை உணர்ந்து கொள்வோம். 


நம் அனைவருக்குமே காயங்களும், சோகங்களும் உண்டு. அதனை நாம் வெளிப்படுத்தும் விதம் சற்று வித்தியாசமாக இருக்கும். ஒரு சிலர் தங்கள் சோகத்தை கண்ணீராக, தங்களுக்கு யார் உரிமை என்று நினைக்கிறார்களோ அவர்களிடம் வெளிப்படுத்துகிறார்கள். இன்னும் பலர் தங்கள் வாழ்க்கையில் சோகம் நடந்தாலும் ஒன்றும் நடக்காததுபோல் புன்னகை முகத்தோடு இருப்பதுபோல் காட்டிக் கொள்கிறார்கள். நமது உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த உரிமையான நபர்களை தேடுகிறோம் என்பது உண்மைதான். பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்கிறார் நம் அன்பர் இயேசு. இந்த இயேசுவின் வார்த்தைகள் நமக்கு சொல்லும் உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும். சுமைகளோடும், பாரங்களோடும் வாழ்பவர்களுக்கு ஆறுதல் கொடுக்க வேண்டுமென்றால் நிச்சயம் கனிந்த இதயம் நமக்கு வேண்டும். அதற்காக நாம் இயேசுவிடம் வரவேண்டும். மற்றவர்களுக்கு எப்படி ஆறுதல் அளிக்கலாம் என்பதை நாம் ஆண்டவரிடம் மட்டுமே கற்றுக்கொள்ளவும் முடியும். எனவே கனிந்த இதயம் பணமோ, பட்டமோ, பதவியோ அளிக்காத இளைப்பாறுதலை அளிக்கும் என்பதை புரிந்து கொண்டு அத்தகைய உள்ளத்தை நமதாக்குவோம்.


ஒரு நாட்டில் மூன்றாண்டுகளாக மழையே பெய்யவில்லை. கடுமையான பஞ்சம் நிலவியது. தந்தை, தாய், மகன், மகள் என்று நால்வர் இருந்த ஒரு குடும்பம் வறுமையில் சிக்கித் தவித்தது. தந்தையும் மகனும் ஒவ்வொரு வீடாகச் சென்று பிச்சை எடுத்தனர். கிடைக்கும் பிச்சையில் நால்வரும் கால் வயிறும் அரை வயிறுமாகச் சாப்பிட்டனர். நாளாக நாளாகப் பிச்சை கிடைப்பதும் அரிதாயிற்று. உணவு இல்லாததால் தந்தையும் இறந்து விட்டார். தாயும் தங்கையும் பசியால் துடிப்பதை அறிந்தான். அவன் எப்படியாவது அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு வீடாகப் பிச்சை கேட்டு அலைந்தான். ஒரு வீட்டிலும் அவனுக்குப் பிச்சை கிடைக்கவில்லை. கடும்பசியோடு தள்ளாடித் தள்ளாடிப் பக்கத்து ஊரை நோக்கி நடந்தான். ஒரு வீட்டின் முன் நின்று பிச்சை கேட்டான். பெண்மணி ஒருத்தி அவன் உண்பதற்காக உணவைக் கொண்டு வந்தாள். பசியால் வாடிய அவன் அதை உண்ணவில்லை. தன் தாயையும் தங்கையையும் நினைத்தான். முதலில் அவர்கள் உண்ண வேண்டும் என்று முடிவு செய்தான். அந்த உணவைச் சிறு மூட்டையாகக் கட்டித் தூக்கிக் கொண்டு தன் ஊர் நோக்கி நடந்தான். பசிக் கொடுமை தாங்காத அவன் வழியிலேயே மயங்கி விழுந்தான். சிறிது நேரத்தில் இறந்து விட்டான். அந்த வழியே வந்த சிலர், பசியால் அவன் இறந்து விட்டான் என்று வருந்தினார்கள். பக்கத்தில் கிடந்த மூட்டையை அவர்கள் அவிழ்த்துப் பார்த்தார்கள். அதில் உணவு இருந்தது. உணவைக் கையில் வைத்துக் கொண்டே ஏன் இவன் பசியால் இறந்து போனான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. தான் உண்ணாவிட்டாலும் பரவாயில்லை, தன் தந்தை மற்றும் உறவினர்கள் உண்ண வேண்டும் என்ற தியாக உள்ளமும் கனிந்த இதயத்தையும் அவர்கள் அறியாமல் போய்விட்டார்கள். தான் உண்ணவில்லையென்றாலும் பரவாயில்லை, தன் தாயும் தங்கையும் காப்பற்றப்பட வேண்டும் என்று நினைத்த அவனின் உள்ளத்தை பாராட்டுவோம். நாமும் தாராள மனப்பான்மை கொண்டு வாழ்வோம். 


தாராள உள்ளத்தையும், கனிந்த இதயத்தையும் நமதாக்குவோம்.

Tamil Survey Popup Image