எளியோரை மதித்து வலியோரை எதிர்த்தெழுக! | அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil
கானமுயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
காட்டிலோடும் முயலைக் குறி தவறாமல் எறிந்த அம்பை விடவும், யானை மீது எறிந்து குறி தவறிய வேலினை ஏந்துவதே பெருமை.
'வல்லான் வாழ்வான்' என்ற ஓர் உண்மையை டார்வின் நிறுவினார். இது பிற உயிரினங்களுக்குப் பொருந்தலாம். ஆனால், பகுத்தறிவும் அறச்சிந்தனையும் பண்பாடும் கொண்ட மாந்தரிடையே இம் மெய்ம்மம் (தத்துவம்) மெய்யாகக் கூடாது. போர்க் களத்தில் ஒரு காலாட்படை வீரனை அம்பு எய்து கொல்வது சிறப்புக்குரிய செயல் அல்ல; மாறாக எதிரிப் படையின் தலைவனை, வேல் எறிந்து வீழ்த்துவது என்பதே உயர்வானதாகும்.
தாகத்தோடு இருந்த யானை ஒன்று தண்ணீர் இருக்கும் இடத்தை அறிந்து ஓடோடி வந்தது. புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த முயல் குட்டிகள் யானையைக் கண்டு மிரண்டன, ஓடின. ஒரு முயல் குட்டி யானையின் காலடியில் சிக்கித் துடிதுடித்து இறந்தது.
செய்தி அறிந்த முயல்கள் எல்லாம் ஒன்று கூடின. தண்ணீர் குடித்துவிட்டு நடந்து வந்த யானையை மறித்தன. அம் மறியல் போரில் யானைக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுத்தன.
முயல்களின் அணிவகுப்பைப் பார்த்து வியந்து நின்றது. என்ன யானை எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அருமையான வெண்மை நிறம்! நான் மட்டும் சுருப்பாக இருக்கிறேன். நானும் வெள்ளையாக வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தது. தன் உடலுக்கு எத்தனை முயல் தோல்கள் வேண்டியிருக்கும் என்று முயல்களையும் எண்ணிக் கொண்டிருந்தது.
'யானையாரே, என்ன சொல்கிறீர்? எங்களுக்கு நீதி வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும். முயல் குட்டியின் பெற்றோருக்கு இழப்பீடு தரவேண்டும்' என்றது துடிப்புமிக்க ஓர் இளம் முயல்.
ஆளும் வர்க்கங்களின் ஆதிக்க அரசுகள் போன்று யானை சிரித்தது. 'நானா... உங்ககிட்டயா... மன்னிப்பா... அப்படிய... நான் இப்போ சொல்றேன்,எனக்கு வெள்ளைத் தோல் வேண்டும். உங்க தோல்களையெல்லாம் உரிக்கப் போகிறேன் காலைத் தூக்கியது.
சில முயல்கள் உயிருக்கு அஞ்சி ஓடின. அங்கு நின்ற முயல்களுள் ஒன்று சொன்னது, 'யானையாரே, எங்கள் தோல் உங்களுக்கு உதவாது. அது நாற்றம் அடிக்கும். ஒட்டவும் முடியாது. வெள்ளை வண்ணம் (பெயின்ட்) தீட்டினால் நீங்க வெள்ளையாகிடுவீங்க'.
'அருமையான கருத்து... நாளை மீண்டும் வருவேன்' என்றது. நகரத்தில் உள்ள கடைத்தெருவுக்கு விரைந்தது.
அடுத்த நாள், முயல்கள் நடுநடுங்கிக் கொண்டிருந்தன. யானை வந்தது.வண்ணம் தீட்டுவதற்குரிய பொருளையும் கருவிகளையும் கொண்டு வந்து வைத்தது. முயல்களுக்கு ஆணையிட்டது. அரண்மனை ஒன்றிற்கு வெள்ளை அடிப்பது போன்று யானையின் மீது முயல்கள் வண்ணம் தீட்டி முடிந்தன.
கண்ணாடி கொணரப்பட்டது. யானைக்கு மகிழ்ச்சி, மீண்டும் நகரத்திற்குள் சென்றது.
அது தேர்தல் நேரம் . நான்கு கட்சிகள் இந்த நடமாடும் சுவரைப் பார்த்துப் பங்கு போட்டன. ஆளுக்கொரு பகுதி தங்களது விளம்பரங்களை, யானையின் வெள்ளை வண்ணத்தின்மீது பொறித்தன. மக்களெல்லாம் சிரித்தனர்.
காட்டுக்குள் வந்த யானையைப் பார்த்து விலங்குகளும் எள்ளி நகையாடின. முயல்களிடம் வந்தது. நடந்ததைச் சொன்னது. 'எனக்கு இந்த வெள்ளை நிறம் வேண்டாம்' என்றது. பச்சை வேண்டும் என்றது.
கொத்தடிமைகளாகிப் போன முயல்கள், யானையைப் பச்சையாக்கின. இரவில் யானை நன்றாகத் தூங்கியது. காலையில் கண் விழித்தது. ஒரே நாற்றம். இந்தச் பச்சை உருவம் ஏதோ ஒரு மரம் என்று எண்ணி இரவில் பறவைகள் அதன் உடல் முழுதும் அசிங்கம் செய்து விட்டன.
யானைக்கு அவமானம். சிவப்பு வேண்டும் என்றது. சிவப்பு எரிமலை போன்று காட்சி தந்தது. ஊருக்குள் சென்றது. குழந்தைகள் அஞ்சி ஓடினர். இந்த யானை மதம் பிடித்துத்தான் அலைகிறது என்று சொல்லிக் கொண்டு இளைஞர்கள் வேல்களோடு, யானையை விரட்டினர். காட்டுக்குள் சென்றது. முயல்கள் யானையின் நிலையைப் புரிந்தன. பரிவு கொண்டன. எங்களுக்குப் பின்னால் ஒழிஞ்சிக்கிடுங்க என்றன. இளைஞர் படை வந்தது. முயல்கள் தடுத்தன.
'வழிவிடுங்கள்! யானையை நாங்கள் கொல்ல வேண்டும்' என்று சொன்ன இளைஞர்களுக்கு, முயல்களின் மறுமொழி. 'யானையார் எங்கள் விருந்தாளி, வேண்டும் என்றால், யானைக்கு மாற்றாக எங்கள் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள்'.
'முடியாது'. மேலே சொன்ன குறளுக்கான விளக்கத்தை ஓர் இளைஞன் சொன்னான், காட்டிலோடும் முயலைக் குறிதவறாது எய்த அம்பினைக் கையில் ஏந்துவதை விட, யானை மேலெறிந்து குறிதவறிய வேலேந்துவது பெருமை என்று எங்கள் தெய்வப்புலவர் கூறியுள்ளார்.
அறிவுமிக்க முயல் ஒன்று சொன்னது. "அது ஓர் உவமை. முயலையோ யானையையோ கொல்வதற்கு வள்ளுவர் ஒருபோதும் சொல்லவில்லை.கொல்லாமை, புலால் மறுப்பு என இரண்டு அதிகாரங்கள் எழுதியுள்ளார்தானே. இந்தச் சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் கொடுமைகள் பல. அவற்றை வளர்த்தெடுக்கும் சுரண்டலாளிகள் உளர். அவர்களை எதிர்த்துப் போராடி உங்கள் வீரத்தைக் காட்டுங்கள். உங்கள் போர்க் கருவிகளுக்கு முன், வலிமை குறைந்த எங்கள் விலங்கு நண்பர்களையும், பறவைத் தோழிகளையும் அழித்து விடாதீர்கள்".
இளைஞர்கள் தலைகுனிந்தவாறே திரும்பிச் சென்றார்கள். யானையின் கண்களில் கண்ணீர். முயல்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, நன்றி சொல்லிவிட்டு நட்பை விடாது தொடர்ந்தது.