வாழும் கலை | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil
வாழ்க்கை என்பது ஒரு கலை.
இந்த வாழ்க்கை கல்லைப் போன்று நின்று கொண்டிருப்பதில்லை. நதியைப் போல் பயணித்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நொடிப்பொழுதும், செயல்பாடுகளும் அந்த உன்னதக் கலையின் சிறந்த பரிமாணங்கள். எனில் ஒவ்வொன்றையும் நாம் உள்ளூரச் சுவைக்க வேண்டும். சுமையாக நினைத்தோமெனில், கலையிழந்து, பொலிவிழந்து, மகிழ்ச்சியைப் புதைத்து விடுவோம்.. இந்த வாழ்க்கைக் கலையின் பரிமாணங்களை சுவைப்பது எப்படி?
ஓர் அழகிய தேவதை, இளம் ஆசிரியர் ஒருவரின் கனவில் தோன்றி, "உன்னிடத்தில் ஒரு குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அக்குழந்தை உலகின் மிகச் சிறந்த தலைவியாக வரப்போகிறவள். அந்தக் குழந்தையை நீ உருவாக்கப் போகிறாய். அறிவை உணரும் ஆற்றல், மனஉறுதி, தன்னம்பிக்கை, மதிநுட்பம், திறந்த மனம், தன்னுடைய குணங்களில் உறுதித்தன்மை இவையெல்லாம் ஒருங்கிணைந்த உயர்ந்த கல்வியை எவ்வாறு அளிக்கப்போகிறாய்? அக்குழந்தையை உலகின் சிறந்த தலைவியாக உருவாக்க உனது பங்களிப்பு என்ன?” என்று கூறி மறைந்துவிட்டது.
வியர்த்து விறுவிறுத்துப்போன அந்த இளம் ஆசிரியர் சட்டென விழித்துக்கொண்டார். தன் வகுப்பில் இருக்கும் மாணவர்கள், இன்னும் எதிர்காலத்தில் வரவிருக்கும் மாணவர்களில் ஒருவர்தான் இந்தத் தலைவன் என்பதை உணர்ந்த அவர், தன்னுடைய போதனா முறைகளைத் திட்டம் தீட்டினார். தன் வாழ்க்கையைச் சுவைத்து ஒரு கலையாகப் பார்த்தார்.
அந்த வாழ்க்கைக் கலையை எப்படிச் சுவைக்க வேண்டுமென எல்லா மாணவர்களுக்கும் கற்பித்தார். தன் கனவை நிஜமாக்கக்கூடிய அக்குழந்தை, நல்ல அனுபவம் பெற வேண்டும், பல வகையான சிக்கல்களைத் தீர்த்துவைப்பதில் வல்லமை பெறவேண்டும், அறிவில் வளர்வதைப்போல, உய குணங்களிலும் வளரவேண்டும், தன்னம்பிக்கையோடு, பிறரோடு இணைந்து வேலை செய்யவேண்டும் என்பவையே அவரது போதனையின் இலக்குகள். உயர்
கடந்தகால வாழ்விலிருந்து பாடம் கற்றுக்கொள்ளல், எதிர்கால வாழ்வை நேர்மறை எண்ணத்தோடு பார்த்தல், தன்னை உயர்வாக நினைத்தல், தன்னொழுக்கம் உடையவராய் இருத்தல், அன்பாலும் நன்மைத்தனத்தாலும் நிரம்பியிருத்தல், இவ்வாறு பல கலைகளும், பரிமாணங்களும் நிறைந்த சிறந்த தலைவராவதற்குரிய கல்வியைக் கற்றுத்தந்தார். எல்லாருக்கும் இதே கல்வியைக் கற்றுத்தந்தார் என்றாலும், தன்னுடைய வகுப்பிலேயே மிகச் சிறந்த மாணவர்கள்தான் இந்த தகுதியைப் பெறுவார்கள் என்று எண்ணியிருந்தார். அது பெண் குழந்தை என்பதையும் அறிந்திருந்தார்.
அந்த நாளும் வந்தது. வெகு நேர்த்தியாக வாழ்க்கையைக் கலையாக கண்ட சிறந்த தலைவியாக உருவாகியிருந்தாள். என்ன ஆச்சரியம், அது வேறு யாருமல்ல; அவ்விளம் ஆசிரியரின் 'மகள்தான்' அந்தப்பெண். கனவில் சித்தரிக்கப்பட்ட குழந்தை அவருடைய குழந்தை. பெயர் சொல்லப்படாத இந்த இளம் ஆசிரியர்தான் நீங்களும் நானும்.
வாழ்க்கை என்னும் கலையை உள்ளூரச் சுவைத்து, அதன் பரிமாணங்களை நம்மைச் சுற்றியிருப்பவர்கள் சுவைக்கச் செய்யவேண்டும். ஒரு தந்தையாக, தாயாக, ஆசிரியராக, மருத்துவராக, ஆலோசகராக, வழிகாட்டியாக, நண்பனாக இருந்து இக்கலையைக் கற்றுக்கொடுக்க வேண்டும். நம்மைச் சார்ந்தே இந்த உலகம் இருக்கிறது. இந்த உலகில் நம் பயணத்தில், சுமைகளை ஒதுக்கி, சுகங்களை அடுக்கி, கலையுணர்வோடு பயணிப்போம். உன்னதக் கலையை உலகறியச் செய்வோம்.