ஸ்பெயின் நாட்டுக்கான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத் திட்டம்! | Veritas Tamil
ஜூன் 6 முதல் 12 வரை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஸ்பெயின் நாட்டிற்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம், அவரது திருத்தந்தைப் பணியில் இதுவரை இல்லாத அளவில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று திருப்பீடச் செய்தி தொடர்பகம் தெரிவித்துள்ளது.
ஏறத்தாழ 2,500 கிலோமீட்டர் தூரப் பயணத்தில், திருத்தந்தை அவர்கள் மேட்ரிட், பார்சிலோனா, கிரான் கனாரியா மற்றும் டெனெரிஃப் ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளார் என்றும், அங்கு 23 உரைகள், மறையுரைகள் மற்றும் பொது நிகழ்வுகள் மூலம் ஏறத்தாழ ஐந்து லட்சம் நம்பிக்கையாளர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார் என்றும் அச்செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
இந்தத் திருத்தூதுப் பயணம் குறித்துப் பேசிய திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயு புரூனி அவர்கள், ஸ்பெயின் நாட்டை ஆழமான கிறிஸ்தவ வேர்கள், வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் சிலுவையின் புனித யோவான், அவிலாவின் புனித தெரசா போன்ற செல்வாக்குமிக்க புனிதர்களைக் கொண்ட ஒரு பூமி என்று விவரித்தார்.
மேலும் திருத்தந்தையின் ஸ்பெயின் நாட்டுக்கான இந்தத் திருத்தூதுப் பயணம், அமைதி, ஆயுதக் குறைப்பு, புலம்பெயர்தல், மனித வாழ்வின் பாதுகாப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சமகால ஐரோப்பாவில் திருஅவையின் பங்கு போன்ற முக்கியக் கருத்துக்களை மையப்படுத்தி அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக நம்பிக்கை, அரசியல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு இடையேயான உரையாடல் அமையும் என்று குறிப்பிட்டுள்ள அச்செய்தித் தொடர்பகம், குறிப்பாக சமூகப் பிளவுகள் மற்றும் நவீன தொழில்நுட்பம் ஏற்படுத்தும் நெறிமுறை சவால்களுக்கு தீர்வு காண்பதில் இது கவனம் செலுத்தும் என்றும், மேலும், பொதுவாழ்வில் திருஅவையின் பங்களிப்பு மற்றும் மனித மாண்பைப் பாதுகாக்கும் அதன் பணி ஆகியவற்றிற்கு திருத்தந்தை முக்கியத்துவம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தத் திருத்தூதுப் பயணத்தின் மிக முக்கியமான மற்றும் அடையாளப்பூர்வமான தருணங்களில் ஒன்றாக அவரது கேனரி தீவுகள் (Canary Islands) பயணம் அமையும் என்றும், அங்கு அவர் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்து, அட்லாண்டிக் கடல்வழிப் பாதை வழியாக அங்கு வந்தடைந்தவர்களின் கதைகளைக் கேட்டறியவுள்ளார் என்றும் அச்செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
மேலும் பார்சிலோனாவில், உலகப் புகழ்பெற்ற திருக்குடும்பப் பேராலயத்திற்குச் (Sagrada Família)செல்லும் திருத்தந்தை, அதன் கட்டிடக் கலைஞர் அந்தோனி கவுடியின் (Antoni Gaudí) நூற்றாண்டு நினைவு ஆண்டான இவ்வாண்டில், புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள 'இயேசு கிறிஸ்துவின் கோபுரத்தை' (Tower of Jesus Christ) புனிதம் செய்யவுள்ளார் என்றும் அச்செய்தித் தொடர்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் திருத்தூதுப் பயணம் இளைஞர்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தும் என்றும், ஸ்பெயின் சமூகத்தை தொடர்ந்து செப்பனிட்டு வரும் ஒரு துடிப்பான நம்பிக்கையை வெளிப்படுத்தும் அதே வேளையில், நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் உண்மையில் வேரூன்றிய ஓர் எதிர்காலத்தை உருவாக்க பங்களிக்குமாறு இளைஞர்களுக்கு திருத்தந்தை அழைப்பு விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.