அமைதியின் தூதன் | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

"அமைதி உன்னகத்து விளங்குவதாக " (திபா 122:7) அகிலத்தின் அன்பு மொழி அமைதி. அனைவரும் விரும்பும் மொழி அமைதி. மதங்களெல்லாம் பேசும் மொழி அமைதி மனித மனங்கள் தேடுவதும் அமைதி வன்முறைகளை விரட்டுகின்ற மொழி அமைதி. வாழ்வின் இடர்களைக் களைகின்ற மொழியும் அதுவே. அணுகுண்டு கலாச்சாரத்தையும், ஆயுதங்களையும் வீசி எறிகின்ற உன்னத மொழி அமைதி. 03 ஆம்... அமைதியைத் துய்க்கின்ற உலகம் உன்னத உலகம் உண்மை மகிழ்ச்சியால் நிரம்பும்.

அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப்போரின் போது, கென்ட்டியுக்கி மற்றும் மேற்கு விர்ஜினியா மாநிலத்தில் 'ஹேட்பீல்டு, மெக்காய்ஸ்' ஆகிய இரு குடும்பத்தினரிடையே பூசல் தொடங்கியது. பணத்திற்குப் பேராசைப்பட்டு, பகையுணர்வு மேலோங்கி, விரோதம் நீடித்துக்கொண்டேயிருந்தது. உள்நாட்டுப் போர் ஓய்ந்தது. ஆனால், இவர்களின் பகைமைத் தொடர் போரானது.

இந்தப் பகைமை, பூசலைப்பற்றி 'ஸ்டான் மூனிங்ஹாம்' என்ற ஆசிரியர் கூறுவது "1882ஆம் ஆண்டு தேர்தல் நாளன்று இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஹேட்பீல்டு குடும்பத்தைச் சார்ந்த 'எல்லிசன்' என்பவர், தங்கள் குடும்பத்தைக் கேலி செய்ததற்காக, மெக்காய்ஸ் குடும்பச் சகோதரர்கள் மூன்று பேர் சேர்ந்து அவரைக் கொன்றுவிட்டனர். இதையறிந்த

இதயப் பதிவுகள்
ஹேட்பீல்டு குடும்பத்தலைவன் 'டெவில் ஆன்சே' அந்த மூன்று மெக்காய்ஸ் சகோதரர்களைச் சுற்றிவளைத்துக் கட்டி, அவர்கள் குடும்பத்தினர் காணுமாறு ஒரு முட்புதரில் வைத்து, அவர்களைச் சுற்றி 50 துப்பாக்கிக் குண்டுகளை வைத்தான். இதற்குப் பழிவாங்க மெக்காய்ஸ் குடும்பத்தினர் மீண்டும் வன்முறையில் ஈடுபட்டனர்.

ஏறக்குறைய 20ஆம் நூற்றாண்டு வரை, இந்தப் பகைமைப்போர் வளர்ந்துகொண்டேயிருந்தது. தணியாத இந்தப் பகைமையுணர்வால், பழிவாங்குதலால் பெண்களும், குழந்தைகளும் உட்பட ஏறக்குறைய 30 பேர் உயிரை இழந்தனர். ஐக்கிய நாடுகளின் வரலாற்றில் இடம் பெற்ற இந்நிகழ்வு, 'கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்' என்ற பழிவாங்கும் பகைமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு . இரு குடும்பங்களும் மகிழ்ச்சியைத் தொலைத்தன. வளர்ச்சியை இழந்தன. இது அனைவரும் அறிந்த ஒன்று.

பகைமையின் விளைவு அமைதியின்மை.
அமைதியின்மையின் விளைவு மகிழ்ச்சியை இழப்பது.
இன்றைய வன்முறைக் கலாச்சாரத்தில் ஊன்றியிருப்பவர்கள் தங்களுடன், போர்க்கருவிகள், ஆயுதங்கள் இவற்றை எடுத்துக்கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதை நாம் திரைப்படங்களில் காண்கின்றோம்.

இவ்வாறு ஆயுதம் ஏந்துபவர்கள் அமைதியின் தூதுவர்களாய் இல்லை... இவர்களின் செயல்பாடுகளால் விதவைகளையும், அநாதைகளையும் உருவாக்குபவர்கள்.

மக்களைக் கொன்று குவிப்பது, சுட்டுக் கொல்வதென்பது சமாதானத்திற்கான நல்ல வழியன்று. இது... தன் மகனை அடித்துக் கொண்டே, ''நான் எத்தனை முறை உனக்குச் சொல்கிறேன், உன் தங்கையை அடிக்காதே" என்று சொல்லும் தந்தையைப் போன்று இருக்கிறது.
தீவிரவாதமும், தீப்பொறியும் வலுக்கட்டாயமும். வன்முறையும் போர்களும், போர்க்கருவிகளும் அமைதியைக் கொண்டுவர முடியாது. யார்தான் அமைதியைக் கொண்டுவர முடியும்?
அமைதியின் தூதுவர் -
இவர் ஆயுதம் ஏந்துபவர் அல்லர், வன்முறையில் ஈடுபடுபவர் அல்லர்.

- அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ்