இருப்பதில் நிறைவுகண்ட சபீனா பேகம் ! | ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

உன்னிடம் இருப்பவற்றை எண்ணி நன்றிசொல் இல்லாத்தைப் பற்றிக் கவலைப்படாதே!

உள்ளத்தின் நிறைவே வாய் பேசும்  என்று சொல்வார்கள் எவ்வளவு  செல்வம் இருந்தாலும் மனநிறைவு இல்லாத மனிதர்கள் உண்டு இருப்பதை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்பவர்களும் பொதுவாக அலைகள் ஏழைகள்  இருப்பதை வைத்துக்கொண்டு, அதிகம் ஆசைப்படாமல் அதே மகிழ்ச்சியில் மனநிறைவோடு வாழ வேண்டும் என்று விரும்புபவர்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருந்தாலும், உள்ளத்தளவில் அவர்கள் பணக்காரர்களே அவர்களின் ஒருவராக இருப்பவர்தான் தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்த சபீனா பேகம் என்பவர்.

தெலுங்கானா மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்கின்ற ஏழை மக்களுக்கு இரண்டு படுக்கையறைத் தொகுப்பு வீடுகளை அரசு வழங்க முடிவு செய்தது. அதன்படி இந்த வீடுகளை ஆய்வு செய்வதற்காக மாநில அமைச்சர் கே.டி. இராமா ராவ் அவர்கள் சிரிசில்லா மாவட்டத்திற்கு 2018ஆம் ஆண்டு, பெப்ருவரி 2ஆம் நாள், வெள்ளிக்கிழமை அன்று முஸ்தாபாத் பகுதியில் கோணிப்பைகளைக் கூரையாக அமைத்து, வெறும் செங்கற்களால், பூச்சுவேலைகள்கூட செய்யப்படாத குடிசை வீடுகளைப் பார்வை இட்டார்.

ஒரு குடிசையில் வாழ்ந்த சபீனா பேகம் என்னும் பெண்ணைச் சந்தித்து அவர், "கூரைகூட இல்லாத இந்த வீட்டிற்குப் பதிலாக அரசு வீட்டைப் பெற்றுக்கொள்ளலாமே” எனக் கேட்டார். சிறிதும் யோசிக்காத அந்தப் பெண், "ஐயா, இந்த வீடு இந்திரா காந்தி குடியிருப்புத் திட்டத்தின்கீழ் எனக்கு முந்தைய அரசு வழங்கியது. எனக்காவது இந்தக் குடிசை வீடு உள்ளது. இதுகூட இல்லாமல் பலர் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு இந்த இரண்டு படுக்கையறை வீடுகளை வழங்குங்கள்” எனக் கூறினார்.

இந்தப் பதிலைச் சற்றும் எதிர்பாராத அமைச்சர் நெகிழ்ந்துபோய் அந்தப் பெண்ணின் வீட்டிற்குப் புதிய கூரைபோட்டுப் புதுப்பித்துத் தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

-ஜெ.ஞானசேகரன்