உதவும் கரங்கள் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
உறவாடும் உதடுகளைவிட பிறருக்கு உதவிடும் கரங்கள் புனிதமானவை.
'Suspended Coffee' என்ற ஒரு காணொளியை அண்மையில் யூ டியூப்பில் பார்த்தேன். இத்தாலி நாட்டின் நகரம் ஒன்றில் ஓர் உணவகத்தில், "ஐந்து காபி, இரண்டு Suspended" என்று ஒரு பெண் கூறி, ஐந்து காபிக்குப் பணம் கட்டிவிட்டு மூன்று காபியை மட்டும் வாங்கிச் செல்கிறார். அடுத்து வந்த ஓர் இளைஞர் "பத்து காபி, ஐந்து Suspended" என்று பத்து காபிக்குப் பணம் செலுத்திவிட்டு, ஐந்து காபியை மட்டும் வாங்கிச் செல்கிறார்.
இவ்வாறு நடப்பதையெல்லாம் அந்த உணவகத்துக்கு வந்த ஒருவர் கவனித்துக்கொண்டே இருக்கிறார். அவருக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. அருகில் இருந்த ஒருவரிடம் அங்கு நடப்பதைப் பற்றி விளக்கம் கேட்கிறார். "சற்றுப் பொறுத்து, இங்கு நடப்பதைக் கவனியுங்கள்" என்று பதில் கூறுகிறார்.
சிறிது நேரம் கழித்து, கிழிந்த ஆடையணிந்து, ஒரு முதியவர், இந்தக் கடைக்கு வந்து உணவகப் பணியாளரை அணுகி, “Any Suspended Coffee?" என்று கேட்கிறார். அந்த உணவகப் பணியாளரும் "ஆம்" என்று சொல்லிச் சூடான ஒரு கப் காபியை அவருக்குக் கொடுக்கிறார். குளிரிலும் பனியிலும் நடுங்கியபடி இன்னொரு முதியவர் இதேபோன்று கேட்க, அவரும் ஒரு Suspended Coffee-யைப் பெறுகிறார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த விளக்கம் கேட்டவர், வறுமையில் முகம் தெரியா மனிதர்களுக்குச் செய்கின்ற மனிதநேய உதவிகளைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார்.
'Suspended Coffee' என்பது ஒருவர் காபி வாங்கும்போது முகம் தெரியாத இன்னொருவரின் காபிக்காக ஈகையாகப் பணம் செலுத்துவது ஆகும். பெரும்பாலும் தாம் பணம் செலுத்தி காபி வாங்க முடியாதவர்கள் அந்த உணவகத்துக்கு வந்து கேட்டால், அவர்களுக்கு அந்தக் காபி இலவசமாக வழங்கப்படும். இந்த வழக்கம் இத்தாலியில் 2008ஆம் ஆண்டில் தொடங்கி தற்போது பல நாடுகளில் பரவியுள்ளது. காபி மட்டும் இல்லாமல் பிற உணவுகளுக்கு இவ்வாறு முன்னதாக பணம் செலுத்தும் வழக்கமும் பெருகி வருகிறது.
தேவையில் உள்ளோரின் கண்ணீர் துடைக்கும் கைகள் இறைவனின் கைகள்.
எழுத்து
ஜெ.ஞானசேகரன்