அவரில் நிலைத்திருப்பது மகிழ்ச்சியில் நிலைத்திருப்பது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பாஸ்கா 6-ம் வாரம் – சனி
தி.பணிகள் 18: 23-28
யோவான் 16: 23b-28
அவரில் நிலைத்திருப்பது மகிழ்ச்சியில் நிலைத்திருப்பது!
முதல் வாசகம்.
இந்த பகுதியில் திருத்தூதுர் பவுலின் மூன்றாவது மறைத்தூதுப் பயணத்தின் ஆரம்பத்தையும், அப்பொல்லோ என்றவரின் பணியைப் பற்றியும் அறிகிறோம். பவுல் அந்தியோகியாவில் சில காலம் தங்கி, பின்னர் கலாத்தியா மற்றும் பிரிகியா பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள சீடர்களை உறுதிப்படுத்தினார்.
இவ்வாறு, பவுல் புதிய இடங்களில் மட்டும் நற்செய்தி அறிவிக்கவில்லை. ஏற்கனவே மனமாறியவர்களை ஆவிக்குரிய வாழ்க்கையில் பலப்படுத்தவும் உழைத்தார். அக்காலக் கட்டத்தில்தான், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த அப்பொல்லோ எபேசுவுக்கு வந்தார் என்று லூக்கா குறிப்பிடுகிறார். இவர் மறைநூலில் தேர்ச்சி பெற்றவரும் பேச்சாற்றல் கொண்டவராகவும் இருந்தார். ஆனாலும், இவர் திருமுழுக்கு யோவான் நீரால் அளிந்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார்.
பிரிஸ்கில்லாவும் அகில்லாவும் அப்பொல்லோவைச் சந்தித்து வழிநடத்தியபோது, அவரை தனியாக அழைத்து, , கடவுளுடைய வழியை இன்னும் தெளிவாக எடுத்துரைத்தனர். பின்னர், அப்பொல்லோ அகாயாவுக்கு சென்றார். அங்கு:நம்பிக்கையாளர்களுக்கு மிகவும் உதவினார், இயேசுவே கிறிஸ்து என்பதை மறைநூல்களிலிலிருந்து தெளிவுப்படுத்தினார்,
1.
நற்செய்தி.
இந்த பகுதி, இயேசு தம் சீடர்களிடம் இறுதி இராவுணவின்போது கூறிய ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் வார்த்தைகளாகும். இங்கு இயேசு, இறைவேண்டலில் வல்லமை, தந்தையின் அன்பு, மற்றும் தம் வருகை–பிரிவு பற்றிய உண்மையை விளக்குகிறார். குறிப்பாக, “நீங்கள் என் பெயரால் தந்தையிடத்தில் எதைக் கேட்டாலும் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.” என்றுரைக்கிறார்.
வசனம் 24-ல், “இதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்கவில்லை; கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்; அப்பொழுது உங்கள் மகிழ்ச்சி நிறைவாகும்.” என்ற வாக்குறுதியை இயேசு பதிவு செய்கிறார். இங்கு இயேசு, சீடர்களை துணிச்சலுடன் இறைவேண்டல் செய்ய அழைக்கிறார். நிறைவாக, “நான் தந்தையிடமிருந்து வந்து உலகில் வந்தேன்; இப்போது உலகை விட்டுத் தந்தையிடமே செல்கிறேன்.” என்று உரையை முடிக்கிறார்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தைக் கூர்ந்து வாசித்தால், கிறிஸ்துவின் ஒரு நல்ல பணியாளர் மக்களை கிறிஸ்துவில் நிலைத்திருக்க உதவ வேண்டும் என்பதை அறிகிறோம். இன்றைய திருத்தூதரு பணிகள் 18:23–28 பகுதி நமக்கு மூன்று முக்கியமான உண்மைகளைக் கற்பிக்கிறது:
1. நம்பிக்கையாளர்கள் ஆவிக்குரிய வளர்ச்சியில் உறுதியாக இருக்க வேண்டும்.
2. போதிய அறிவு மற்றும் ஞானம் இருந்தாலும் தாழ்மையுடன் பிறரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
3. கடவுள் ஒவ்வொருவரையும் அவரவர் திறமைகளுடன் தனது பணிக்காகப் பயன்படுத்துகிறார்.
இவை நம்மிடையே இருக்குமேயானில், நாம் சிறந்த பணியாளர்களாகத் திகழ்வோம். இன்றைய நற்செய்தியில் இயேசு, “உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள முடியாது” என்று கூறுகிறார். உயிர்த்த ஆண்டவரை சந்தித்த சீடர்கள் முதலில் பயத்திலும் குழப்பத்திலும் இருந்தார்கள். ஆனால் இயேசுவின் உடனிருப்பு அவர்களை துணிச்சலான சாட்சிகளாக மாற்றியது.
நம்முடைய வாழ்க்கையிலும் பல நேரங்களில் துக்கம், தோல்வி, கவலை, நம்பிக்கையின்மை போன்ற அனுபவங்கள் வருகின்றன. ஆனால் உயிர்த்த இயேசு நம்மோடு இருப்பதை நம்பும் போது, அந்த துக்கம் மகிழ்ச்சியாக மாறுகிறது. உலகம் தரும் மகிழ்ச்சி தற்காலிகமானது; ஆனால் கிறிஸ்து தரும் மகிழ்ச்சி நிலையானது.
முழுமையான மகிழ்ச்சி என்பது ஒரு நிலையற்ற உணர்ச்சியோ அல்லது உலக ஆசைகளின் திருப்தியோ அல்ல. அது கடவுளுடனான ஐக்கியத்திலிருந்து பொங்கி வழியும் ஆழமான, நிலைத்திருக்கும் மகிழ்ச்சியாகும்—நமது ஆழ்ந்த ஏக்கங்களின் நிறைவு. இந்த மகிழ்ச்சி, மூவொரு கடவுளில் வேரூன்றியுள்ளது; கிறிஸ்துவின் வழியாக நாம் தந்தையுண்ட் ஓர் உறவில் நுழையும்போது, அந்த மகிழ்ச்சியில் உறவு கொள்ளத் தொடங்குகிறோம்.
இறைவேண்டல்.
“ஆண்டவரே, உலகத்தின் கவலைகளை விட உம்மில் நிலையான மகிழ்ச்சியை காணும் அருளை எமக்குத் தாரும். ஆமென்.”
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452